சாதி மறுப்பு திருமணம் – நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்!
பிள்ளை சாதி வெறியர்களுக்கு பாடம் புகட்டுவோம்!
சாதி மறுப்புத் திருமணங்களை
மக்கள் அதிகாரம் நடத்தி வைக்கும், ஆதரவளிக்கும்!
16.06.2024
கண்டன அறிக்கை
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறி கடந்த ஜூன் 13ஆம் தேதி நெல்லை சிபிஎம் அலுவலகத்தை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்ற சாதி வெறி அமைப்பைச் சேர்ந்த பந்தல் ராஜா தலைமையில் பெண் வீட்டார் தாக்கியுள்ளனர்.
சிபிஎம் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த சாதி மறுப்பு காதல் தம்பதியினரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று போலீசிடம் புகார் அளித்த பின்னர் தான், இந்தக் கும்பல் சிபிஎம் அலுவலகத்தை தாக்கியதையும் போலீசு அமைதியாக வேடிக்கை பார்த்ததையும் அறிய முடிகிறது.
இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள் வாயிலாக வேறு வழியின்றி தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில் 10 பேர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். பெண் வீட்டார் திடீரென்று ஆவேசப்பட்டு நடந்த நிகழ்வு அல்ல இது. பந்தல் ராஜா என்ற நபர் கட்டப்பஞ்சாயத்து நடத்திவரும் சாதி வெறி ரவுடி. வெள்ளாளப் பிள்ளை சாதியினருக்கு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொண்டு அச்சாதி இளைஞர்களை ஆதிக்க சாதி வெறியூட்டி பொறுக்கித் தின்பதற்கு பயன்படுத்தும் எண்ணற்ற ஆதிக்க சாதி – ஆர்.எஸ்.எஸ் வெறியர்களில் ஒருவனே. இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் பலர் எழுதி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண் வீட்டாரின் கோபத்தை பயன்படுத்தி திட்டமிட்டு சிபிஎம் அலுவலகம் மீது இந்த பொறுக்கிக் கும்பல் தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு மாவட்ட போலீசார் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
சாதி மறுப்பு திருமணங்களுக்காக சிபிஎம் அலுவலகம் எப்போதும் திறந்திருக்கும் என்று நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீ ராம் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
தொடர்ந்து ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கும் நெல்லையில் சிபிஎம் கட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அதற்குக் காரணமான போலீசு மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களையும் மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது.
சம்பவத்துக்கு காரணமான பந்தல் ராஜா உள்ளிட்டோர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்கப்படுவதுடன் பந்தல் ராஜா உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் இதுவரை மேற்கொண்ட ஆதிக்க சாதிவெறி சம்பவங்கள் கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சம்பவத்துக்குக் காரணமான போலீசுக்காரர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிக்க சாதி வெறி சங்கங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் படையல் போடும் இந்த ஆர்.எஸ்.எஸ் – ஆதிக்க சாதிவெறி கும்பல், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி வ. உ. சிதம்பரனார் உள்ளிட்ட எவரையும் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
இதுவரை எண்ணற்ற சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்த மக்கள் அதிகாரம் இனிமேலும் அந்தப் பணியை மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைப்போம். தடுக்க வரும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடை செய்வதற்காகப் போராடுவோம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube