தீபாவளி தனதன்று குடியிருப்பு அருகே மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் சேலம் பூசநாயக்கனூர் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து ஆதிக்க சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தாக்குதலின் கொடூரத்தை அந்த வெளிப்படுத்துகிறது.
அந்த அறிக்கையில் “சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியைச் சார்ந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் தீபாவளி தினத்தன்று பூசநாயக்கனூர் தலித் அருந்ததியர் குடியிருப்பிற்கு அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர், எங்கள் குடியிருப்பிற்கு அருகில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சற்று தள்ளிப் போங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் விஜய்யை சாதியைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளில் பேசிக் கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
அப்படியும் ஆத்திரம் தீராத சாதியவாதிகள் 10 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு விஜய்யின் உறவினரான சதீஷ் குமார் வீட்டின் மேற்கூரையின் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகளை உடைத்து, வீட்டுக்குள்ளே குதித்து, சதீஷ்குமாரின் புகைப்படத் தொழிலுக்காக வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களையும் டிவி, செட்டப் பாக்ஸ் ஆகிய பொருள்களையும் உடைத்துள்ளனர். அதோடு சதீஷ்குமார், அவரது துணைவியார், தாயார் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அச்சமயத்தில் அவ்வழியாக காரில் வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஜெயக்குமார் என்பவர், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஜெயக்குமாரின் காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் கை எலும்பு முறிக்கப்பட்டு, முகத்தில் கொடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைப் பாதுகாக்க முயன்ற அவரது உறவினர்கள் வெங்கடாசலம் மற்றும் செல்வராசு ஆகியோரையும் கல்லால் அடித்துக் காயப்படுத்தினர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்பு லன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜெயக்குமார் கொடுங்காயங்களுடன் கோவை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதற வைக்கும் காணொலிக் காட்சி சாதி ஆதிக்க இளைஞர்கள், தலித் மக்களின் வீடுகளை உடைத்து வன்கொடுமையில் ஈடுபடும் போது எடுக்கப்பட்டது. காணொலிக் காட்சிகள் காண்போரைப் பதற வைக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறுவர்கள் சிறார் இல்லத்திலும், மற்றவர்கள் சேலம் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கொலை பாதகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, சேதப்படுத்தப்பட்ட பொருள்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்து, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நிவாரணத்தையும் குடியிருப்புக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
செய்தி ஆதாரம்: தீக்கதிர்
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram