முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?
தருமபுரி மாவட்டம் வி.ஜெட்டி அள்ளி பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றிவந்த முகம்மது ஆஷிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கடந்த ஜூலை 26-ஆம் தேதி பறையர் சாதியைச் சார்ந்த சாதி ஆதிக்க வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கொல்லப்பட்ட ஆஷிக் பறையர் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதனால் அப்பெண்ணின் சகோதரர்களால் இப்படுகொலை நடத்தப்பட்டிருப்பதும், இது ஒரு சாதி ஆணவக் கொலை என்பதும் அப்போதே வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இப்படுகொலை சமூகத் தளத்தில் விவாதப்பொருளாக மாறவில்லை.
ஆனால், பட்டியலின பிரிவில் உள்ள பறையர், பள்ளர் சாதி வெறியர்கள், சாதி ஆணவப் படுகொலைகளை செய்வது பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தலித் பின்னணி கொண்டவர்கள் சாதி ஆணவப் படுகொலை செய்வதை எப்படிப் பார்ப்பது? தலித் மக்களுக்குள் இருக்கும் ஆதிக்கவெறி கொண்ட இப்படிப்பட்ட பிரிவை ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? இதனை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
தலித் மக்களில் இட ஒதுக்கீடு மூலம் பலன்பெற்ற ஒரு பிரிவு, வர்க்க ரீதியாக வசதி வாய்ப்புள்ள நடுத்தர, மேல்நடுத்தர வர்க்கமாக மாறுகிறது. இந்தப் பிரிவு தன்னை ஆதிக்க நிலையில் வைத்துத்தான் பிரச்சினைகளை அணுகுகிறது. பார்ப்பனிய பண்பாட்டில் இயல்பாக சங்கமித்து, தங்களை ஆண்ட பரம்பரை என்று கருதிக்கொள்கிறது. இவ்வாறு பட்டியல் சாதிக்குள்ளேயே இருந்துக்கொண்டு வர்க்க ரீதியாக முன்னேறியுள்ளதால் தங்களை ஆதிக்க சக்தியாக கருதுபவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம் பொருத்தமாக உள்ளது.
இந்த அடிப்படையிலேயே ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
படிக்க : ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை
சான்றாக, தென்மாவட்டங்களில் பட்டியல் பிரிவினரான பள்ளர்களை, தேவேந்திர குல வேளாளர்கள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்.எஸ்.எஸ். கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட பள்ளர் சாதித் தலைவர்கள் மூலம் முன்தள்ளப்பட்டது. “நாங்கள் தேவேந்திர குல வேளாளர்” என்ற சாதி ஆதிக்க வெறி மனநிலையில் இருந்தே அண்மையில் விருதுநகரில் அருந்ததிய இளைஞர் பள்ளர் சாதி வெறியர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற படுகொலைகள் தொடர் நிகழ்வாக மாறி வருகிறது.
முகமது ஆஷிக் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதையும் இதில் இருந்துதான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பள்ளர் சாதி மக்கள் மத்தியில் “தேவேந்திர குல வேளாளர்” என்பதை முன்தள்ளுவது போல பறையர் சாதியை சார்ந்தவர்கள் மத்தியில் “சாம்பவ குல பறையர்” எனக் கூறி ஆதிக்க வெறியை ஆர்.எஸ்.எஸ். தூண்டுகிறது. ஆண்டப் பரம்பரை, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் வாரிசு என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது. இதன்மூலம் பறையர் சாதியில் உள்ள ஒரு பிரிவினர் ஆதிக்க வெறியர்களாகும் போக்கு தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய பார்ப்பனிய, ஆதிக்க மனநிலையில் இருந்துதான் இப்படிப்பட்ட படுகொலைகள் அரங்கேறுகின்றன. பட்டியல் பிரிவினருக்குள் இருக்கும் சாதிப் பித்து மனநிலை கொண்ட இப்படிப்பட்ட கும்பலை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது அவசியமானதாக உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சில தாழ்த்தப்பட்ட சாதித் தலைவர்கள், தலித் மக்களுக்கு சாதிப் பற்றுக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் அந்த சாதிப் பற்றும் சாதி ஆதிக்க மனநிலையும் வர்க்க ரீதியாக முன்னேறுவதுடன் ஒன்றிணைந்துள்ளது என்பதை பரிசீலிப்பதில்லை. எனவே, சாதி ஆதிக்க மனநிலைக்கு எதிரான போராட்டமானது வர்க்க அம்சத்தையும் உள்ளடக்கியுள்ளது.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube