பட்டியலின மக்கள் மீது அதிகரிக்கும் கொலைவெறித் தாக்குதல்கள்!
ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்!

மிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் மிக மோசமான அளவில் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர், பறையர் சாதி மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இவை அனைத்தும் 90களில் நடைபெற்ற ஆதிக்க சாதிவெறிக் கலவரங்களை மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றன.

திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நவம்பர் 2022 மற்றும் ஆகஸ்ட் 2023 காலப் பகுதிக்குள் மட்டும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் 90 வழக்குகளும் மதுரையில் 115 வழக்குகளும் மற்றும் புதுக்கோட்டை தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் முறையே 88, 58 மற்றும் 54 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் சராசரியாக 1,200லிருந்து 1,400 வழக்குகள் வரை பதிவாகும் நிலையில், கடந்த ஆண்டு 2,000 ஆக அதிகரித்துள்ளன. குறிப்பாக அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 500 வழக்குகள் பதிவாகின.

கோயில் திருவிழாக்கள், குரு பூஜை, பொங்கல், தீபாவளி போன்ற கொண்டாட்ட நாட்களில் ஆதிக்க சாதிவெறியர்கள் மது அருந்திவிட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தும் வழமையான வகைத் தாக்குதல்கள் அல்ல இவை: கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து எரிச்சல் அடையும் ஆதிக்க சாதிவெறியர்கள் இதுபோன்ற நாட்களை தங்களது வெறியை தீர்த்துக் கொள்வதற்காக நீண்ட காலமாக பயன்படுத்திவருகிறார்கள்.

ஆனால், தற்போது நடைபெறும் தாக்குதல்கள் எவ்வித காரண காரியங்களும் இன்றி, சாதிய மோதல்களை தூண்டிவிட்டு தமிழ்நாட்டை கலவர பூமியாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.நெல்லை மணிமுத்தீஸ்வரத்தில், ஆறு பேர் கொண்ட கும்பல் மனோஜ், மாரியப்பன் என்ற இரண்டு இளைஞர்களை வழிமறித்து, அவர்களைத் தாக்கி, நகைகள், செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறித்து அவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியதோடு, சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியும் உள்ளது.

இதே மணிமுத்தீஸ்வரத்தில்தான். தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள். ஆதிக்க சாதிவெறியர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகிலுள்ள மணக்கரையில், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த 60 வயதான மணி என்ற முதியவர், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு திண்ணையில் படுத்துத் தூக்கிக் கொண்டிருந்தபோது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் எவ்வித முன்விரோதமோ, காரண காரியங்களோ இல்லை. தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு, ‘நீ என்ன சாதி என்ற ஒரு கேள்வி; ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அறிந்தவுடன் அரிவாளோடு வந்த கும்பல் வெட்டிவிட்டிச் செல்கிறது. தமிழ்நாட்டை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல்தான், ஒவ்வொரு ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களிலும் புகுத்து இதுபோன்ற தாக்குதல்களை தூண்டிவிட்டு வருகிறது என்பதே உண்மை.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி வட்டாரங்களில், தேவேந்திரர், அருந்ததியர் சாதி மக்கள் மீது தேவர் சாதியைச் சேர்ந்த சில சமூக விரோதிகளால் தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. இச்சமூக விரோத கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமான பிணைப்பு உள்ளது.

 

இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம், தென்னிந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி போன்ற பினாமி சாதிவெறி அமைப்புகள் பலவற்றை ஆர்.எஸ்.எஸ். தென் மாவட்ட தேவர் சாதிவெறியர்களிடம் உருவாக்கி வைத்துள்ளது. இவர்கள் மூலமாக மட்டுமின்றி, கட்சிப் பாகுபாடின்றி தனது பினாமிகள் பலரை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி ஷாகா நடவடிக்கைகளையும் அங்கு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடையிலான சாதிய மோதலும் அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், மாணவர் சின்னத்துரை மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் தமிழ்நாட்டையே உலுக்கிய நிகழ்வாகும். இக்கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். சாகாகளில் பங்குபெற்றவர்கள் என்றும், இச்சம்பவத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி கும்பலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் பல யூடியூப் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதை நாம் எளிதில் கடந்துவிட முடியாது. நாங்குநேரி சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் கழுகுமலை, லட்சுமியாபுரம், சிவந்திப்பட்டி ஆகிய கிராமங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்களுக்குள் சாதிய மோதல்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதிக்க சாதிவெறியுடனான ஆர்.எஸ்.எஸ்.இன் கூட்டணி என்பது, நமது மிகையான குற்றச்சாட்டு அல்ல. அது வெளிப்படையான உண்மை என்பதற்கு சில கண்ணுக்கு தெரிந்த சான்றுகளும் உள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று, சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த அரியலூர் பொன்பரப்பி கிராமத்தை வன்னியர் சாதிவெறிக் கும்பல் சூறையாடியது நினைவிருக்கலாம். தொல்.திருமாவளவனுக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் வன்னியர் சங்கம், பா.ம.க.வினர் மட்டுமில்லை. இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பலும் ஈடுபட்டது. இன்னும் சொல்லப்போனால், அப்பகுதியில் இந்து முன்னணியைத் தொடங்கி நடந்திவந்த இராஜசேகரன்தான் இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன்.

கடந்த ஜனவரி மாதம் மதுரை ஒத்தக்கடை வட்டம், காயம்பட்டி கிராமத்தில் பொங்கல் நாளன்று ஒரு சாதிவெறித் தாக்குதல் நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தலித் சாதியைச் சேர்ந்த ஒருவரை, மடக்கிப் பிடித்து நிர்வாணமாக்கி அடித்துள்ளது ஆதிக்க சாதிவெறிக் கும்பல். இத்தாக்குதலை தலைமையேற்று நடத்தியது பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரவீன் ஆகும். இவன் இதற்கு முன்பும், ஆதிக்க சாதிவெறியர்கள் சிலரைத் திரட்டிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்ட முயன்றுள்ளான். கடந்த பொங்கலன்று இதைப் போலவே ஒரு வன்முறையில் ஈடுப்பட்டுள்ளான். நான்காண்டுகளுக்கு முன்பு. பா.ஜ.க. இந்த ஊருக்கு வந்து விநாயகர் கோயிலைத் திறந்த பிறகுதான் சாதிய மோதல்கள் அதிகரித்துவருவதாக அவ்வூர் மக்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.

வேங்கைவயல் சம்பவத்தில், முத்தரையர் ஆதிக்க சாதிவெறியர்களின் பக்கம் நின்றுகொண்டு, ‘குடிநீரில் மலத்தை கலந்தவர்களின் காணொளி என்று, மலத்தை துப்புரவு செய்வதற்கு போன தலித் இளைஞர்களின் காணொளியை அப்போது பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவில் இருந்த நிர்மல் குமார் வெளியிட்டான்.

ஆகவே, பல்வேறு சம்பவங்களில் கள நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்போமானால், பட்டியலின மக்கள் மீது அதிகரித்துவரும் ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எனவே, ‘தமிழ்நாடு பெரியார் மண். இங்கு பா.ஜ.க. காலூன்ற முடியாது’ என்று இருமாந்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. காலுன்றுவதற்கு ஆதிக்க சாதிவெறியர்கள் வளமான வாய்ப்பை வழங்குகிறார்கள். மதவெறி பாசிஸ்டுகளிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க நினைக்கும் புரட்சிகர ஜனநாயக சக்திகள், சாதிய மோதல்களைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ். பினாமி ஆதிக்க சாதிவெறி அமைப்புகளை தடைசெய்யக்கோரி போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரமிது!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9791653200, 9444836642, 7397404242, 9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க