நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை

கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.

1968 டிசம்பர் 25. இந்த நாளுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே… கிராமம் குமுறி கொண்டிருந்தது. போராட்டத்தால் அறுவடை நிறுத்தி வைக்கப்பட வயல்களில் கதிர்கள் தலைசாய்ந்துகொண்டிருந்தன. அதேபோல், நிலச்சுவான்தார்களின் கைக்கூலிகளின் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்த பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் பூட்டிய குடிசைக்குள் தலை சாய்ந்து கிடந்தனர். ஆனால் நிலச்சுவான்தாரர்களிடம் சவால்களைச் சந்திக்க, அறுவடைக்குத் தயாரித்த அரிவாள்களைப் போல, செங்கொடி இயக்கத் தோழர்கள் கிராமங்களைப் பாதுகாத்தனர்.

மார்கழிப் பனி கவிந்த அந்த இரவில், நிலச்சுவான்தாரர்களின் ஆட்கள் 100-200 பேர் ஒரு பெரும்படையாக அந்தக் கிராமத்தில் புகுந்தனர். அவர்களை எதிர்கொள்ள அங்கு நின்ற தோழர்கள் ஒரு சிலர். அங்கு நடந்த மோதல் ஒரு பொலி காளைக்கும் கன்றுக்குட்டிக்கும் நடந்த மோதலாக இருந்தது. துப்பாக்கிக் குண்டு பட்டு சிதறியவர்கள். வீச்சரிவாள் வெட்டுப்பட்டுச் சாய்ந்தவர்கள் எனத் தோழர்களின் பலத்தைக் குறைத்துக் கொண்டு எதிரிகள் முன்னேறினர்.

அன்று, எதிரிகளை எதிர்கொண்டு நின்ற தோழர்களில் ஒருவர் தோழர் கோபால், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய (1968) அந்தக் கொடூரமான இரவை நினைவுகூர்கிறார்.

‘’என் பேரு கோபாலு அப்பா ரத்னம், அம்மா அஞ்சலை. சம்பவம் நடந்தப்போ 19 வயது இருக்கும். கரெக்டா பெறந்த தேதியெல்லாம் தெரியாது. நந்தனார் புயலுனு பெரிசா அடிச்சது அப்போது நான் சின்னப் பயல். புயலில் விழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கியிருக்கேன். இத வச்சுப் பாக்கும்போது எனக்கு அப்போ , 19 முதல் 20 வயது இருக்கும்.

சம்பவம் நடக்கும்போது எனக்கு 19வயது இருக்கும். நெல்லுற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் அப்போது இங்கே கிட்டத்தட்ட 50 கிராமங்களைச் சேர்ந்த மிராசுதார்கள் இருந்தனர். இங்கு நாயுடு வகையறாக்கள் கையில்தான் நிலம் இருந்தது. நெல் உற்பத்தியாளர் சங்கத்திலும் நாயுடுக்கள் அதிகம் இருந்தனர். அதுக்குத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு, இருக்கை, வண்டலூர், கோட்டூர், திருக்கண்ணங்குடி, பாலக்குறிச்சி போன்ற பெரிய கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன. இங்கெல்லாம் நாயுடு வகையறாதான் இருந்தனர்.

நாங்கல்லாம் ஏழைங்க – தொழிலாளிங்க எல்லாம் செங்கொடிச் சங்கத்தில் இருந்தோம். செங்கொடிச் சங்கத்து மூலமாத்தான் எங்களுக்கு வேண்டியதக் கேட்டு வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இது பொறுக்க முடியாம, ‘நீங்கள்ளாம் செங்கொடி சங்கத்துல இருக்கவேண்டாம் நெல்லுற்பத்தியாளர் சங்கத்துல சேர்ந்துடுங்க. உங்களுக்கு வேண்டிய நில புலம் வசதி எல்லாம் நாங்க செய்து தரோம்’னு அவங்க சொல்ல ஆரம்பிச்சாங்க. எங்க கிராமப்புறத்துக்குக் கோபாலகிருஷ்ண நாயுடுவே வந்து பேசினாரு.

இங்கேயே கொஞ்சம் பேரு நாயுடு வகையறாக்கள் இருக்காங்க. ரோட்டிலிருந்து கிராமத்துக்குள்ள வர்ற தெருவில அவங்க இருக்காங்க. அங்க வந்து இருந்துக்கிட்டு பேசினார்கள். ஆனால் நாங்க ஒத்துக்கல. நாங்க செங்கொடிச் சங்கத்துல இருக்கோம். சுத்துப்பட்டுல இருக்கற ஏழை பாழைகளெல்லாம் இதுல தான் இருக்காங்க. நல்லது கெட்டதுன்னா அவங்கதான் வராங்க. அதனால் உங்க சங்கத்துக்கு வரமாட்டோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டோம். அப்போ நா இங்க செயலாளராக இருந்திருக்கிறேன். 13 வருசம் கிளைச்செயலாளராக இருந்திருக்கிறேன். அதுக்கு முன்னாடி செல்லமுத்து மாமனார் முத்துசாமி இங்க லீடரா இருந்தாரு.

எங்க கொடி செங்கொடி. அவங்க கொடி மஞ்சள் கொடி. செங்கொடியை இறக்கிட்டு மஞ்சக் கொடியை ஏத்தணும்னு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. இந்தச் சமயத்துல கூலிப்பிரச்சனையும் வந்தது, அப்போது எங்களுக்கு அறுவடையில் ஒரு கலம் (24 பட்டணம் படிக்கு) அறுவடை செய்தால் கலத்திற்கு சின்னப்படியில் 5-51/2 யாக கீவளூர் பகுதி முழுவதும் கூலியாக இருந்தது. இதை உயர்த்தி அரைப்படியைச் சேர்த்து ஆறுபடியாக தரவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தோம்.

சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு வருடமாக இந்தப் பிரச்சனை இருந்துகிட்டு இருந்துச்சு. அப்போ அவங்க அரைப்படி நெல்லு சேர்த்துத் தர முடியாதுன்னுகிட்டு இருந்தாங்க. நான் முன்னாடி சொன்ன கிராமத்துலயெல்லாம் இந்தப் பிரச்சனை இருந்தது. எங்களை அடக்க மிராசுதாருங்க என்ன செஞ்சாங்கன்னா ராத்திரியோட ராத்திரியா கொட்டாயை (குடிசையை) கொளுத்துறது; ஆளுவச்சு தூக்கிட்டுப் போறதுன்னு செஞ்சுட்டு இருந்தாங்க.

இப்படியெல்லாம் நடந்துகிட்டு இருந்துச்சு. எங்க கிராமத்துல ஒண்ணும் இல்ல. அதனால ‘நமக்கு ஒண்ணும் இல்ல. வந்தா பார்த்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்தோம்’.

படிக்க:
வெண்மணிச் சரிதம்
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

ஒருநாள் பத்து இருபது வேத்து ஆளுங்க கிள்ளிக்குடி சந்திரன் நாயுடுக்கு அறுப்பு அறுக்கப் போனாங்க. முன்ன எங்களக் கூப்பிட்டாங்க. நாங்க போனோம். அரைப்படி சேத்துக் கேட்டோம். முடியாதுனுட்டாங்க. நாங்க வந்துட்டோம். அப்புறம் வேத்து ஆளுங்கள வைச்சு அறுப்பு நடத்துனாங்க. எல்லாம் அறுத்து முடிச்சு களமெல்லாம் முடிஞ்சுட்டு பத்து இருபது பேரும் கிளம்புனாங்க.

அப்படி வரையில்ல (வரும்போது) இங்க எங்க மாமா முத்துசாமிங்கறவரு டீக்கடை வச்சிருந்தாரு. அதுக்கும் பக்கத்துல வெத்தலபாக்குக்கடை, நாடாரு வச்சிருந்தாரு. அப்ப நம்ம ஆளுங்களச் சேர்ந்த சீனிவாசன், இவரு இந்த சம்பவத்துலதான் இறந்தாரு. 50 – 55 வயசு இருக்கும். அவங்க கூட்டம் வந்ததும், இருக்கை ஊரச்சேர்ந்த சீனிவாசன்ற இன்னொரு பையன். நாயுடு இப்படி, வெத்தல பாக்கு வாங்கயில, ‘என்னல பக்கத்துல பக்கத்துல இடிக்கறேன்னு நம்ம சீனிவாசன்ட்ட வம்பு பிடிச்சாரு. பேச்சு வளர்ந்தது. அந்த நாயுடு ‘வாடா போடான்னு பேச ஆரம்பிச்சாரு. “எங்க ஊருல வந்து எங்க இடத்துல நின்னுகிட்டு வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசறீங்களே”னு நம்ம தோழர் கேட்டாரு.

அப்போ பக்கத்துல கிடந்த விறகுக் கட்டையத் தூக்கி நம்ம தோழர் சீனிவாசனைச் சடார்னு அடிச்சுப்புட்டான். ரத்தம் சொட்டுது இதான் தலைப்பே (தொடக்கம்).

டீக்கடையில இருந்த மாமா முத்துசாமியையும் அடிச்சு, உதைக்க டீக்கடைய நாசம் பண்ணி, கட்டி இழுத்துட்டுப் போய் ராமானுசம் நாயுடுங்கற மிராசுதார் வீட்டுக்குள்ளே போட்டு பூட்டிட்டாங்க. இதமாதிரி நம்ம நாட்டாமை முனியன்ங்கறவரையும் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போய்க் கட்டி வைச்சிட்டாங்க.

இதக் கேள்விப்பட்டு என்னடா செய்யறதுன்னுட்டு நாங்கள்லாம் ஒண்ணாத் திரண்டோம். தேவூரில் இருந்தும் தோழர் கோபால் கொஞ்சம் ஆளுகளத் திரட்டிக் கொண்டு வந்தாரு. கொண்டு வந்து வீடு கீடெல்லாம் அடிச்சு நொறுக்கினாங்க. உடனே அவங்கள்லாம் ஓடிப்போயி எஸ்கேப் ஆயிட்டாங்க. நானும் ஸ்பாட்டில் இருந்தேன். இதுக்கும் பெறகு நான் திரும்பிட்டேன். மணி ராத்திரி ஏழு இருக்கும்.

அப்ப என்னன்னா, அவங்களச் சேர்ந்த ஒருத்தரு தப்பிச்சு இந்தப்பக்கம் வந்துருக்காரு. இங்க வந்தவர் தோழர் கோபாலுதான் வரச்சொன்னாருன்னு சொன்னாரு இப்படிப் பேசிக் கிட்டு இருக்கையில் இங்கதான் (வெண்மணி சம்பவம் நடந்த ராமையாவின் வீடுமுன்) பேசிக்கிட்டு இருக்கையிலேயே சட்டுனு சுளுக்கியால் குத்திப்புட்டாரு. இந்த இடத்துல இன்னமும் காயம் இருக்கு. (காட்டுகிறார்). உடனே இது நம்ம ஆளு இல்லன்னு சட்டுனு புடிச்சி கட்டிப் போட்டாச்சு. அதுக்கும் பெறகு அமைதியாயிருச்சு. போலீசுல புகார் கொடுத்து வேன் வந்து ஏத்திக்கிட்டு இருக்கு.

கலவரம் செய்ய வந்தவங்கள நாங்க வெரட்டினோமில்ல அதுல அடிபட்ட ஆளுங்கள போலிஸ் வேனில் ஏத்திக்கிட்டுப் போனாங்க. எங்க மேல போலீஸில் கம்ப்ளெய்ன்ட் ஆயிருக்கு. அதனால நம்மாளுங்க பல பேரு அங்கங்க ஓடிட்டாங்க.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

இப்படி இருக்கையில ராத்திரி மணி ஒம்பதுக்கு மேல இருக்கும். இங்க கிராமத்துல பொம்பளப் பிள்ளைக, வயசானவங்கனு 40-50 பேரு. இந்தக் குடிசைக்குள்ள ஒளிஞ்சு இருந்துருக்காக. இந்தச் சமயத்துல 100-200 பேர் அவங்க ஆளுங்க திரண்டுட்டாங்க. கையில் வெளக்கு, கம்பு, கத்தி, மொசல் சுடற துப்பாக்கின்னு வச்சிருக்காங்க. அந்த தார்ச்சாலையிலிருந்தே சுட ஆரம்பிச்சுட்டான். இந்த இடத்துக்கு நாலாபக்கமும் சூழ்ந்து வர்றதுக்குப் பாதை இருக்கு. அது வழியா சூழ்ந்து தூரத்துல இருந்தே சுட்டுகிட்டு வந்தாச்சு. முனியன்ங்கறவருக்கு 30 முதல் 40 குண்டுகள் இருக்கு. பாளையம்ங்கற தோழரோட அப்பாவுக்குத் தொடையில் ஒரே இடத்துலயே 40 முதல் 50 குண்டு இருக்கும். டார்ச் லைட்டை அடிச்சு அடிச்சு சுடறான். இப்படியே நெருங்கீட்டாங்க,

என்ன ஒருத்தன்; அரிவாள வீசி எறிஞ்சு அடிச்சான். அறுபட்டு இந்த இடத்துல வெட்டிருச்சு. நான் அந்த அரிவாளால திரும்பி அவன அடிச்சேன். அவன் திருப்பிக் கல்லால் அடிச்சான். அடிச்சதுல அப்படியே ரத்தம் கொட்டி கண்ணே பூத்துப்போச்சு. எனக்கு எங்க ஓடறதுனு யோசனை புரியல. கொட்டாய்க்குள்ள (குடிசைக்குள்ள) ஒடறதா? (கொட்டாய்க்குள்ள போயிருந்தா அன்றே தீயில் எரிந்து கருகியிருப்பார்) எங்க ஓடறதுனு புரியல. சர்ன்னு அப்படியே மூங்கில் குத்துக்குப் பக்கத்துல மறஞ்சுக்கிட்டேன்.

அப்புறம் அதோட கிட்ட நெருங்கிட்டான் அவன். அப்புறம் அங்கேருந்து, தலைப்புல (ஆரம்பத்தில்) இருந்து வீட்டக் கொளுத்திக்கிட்டு வறான். யார் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியல. ஆம்பளங்க ஓடிட்டாங்க. 40 முதல் 50 பொம்பளப் பிள்ளைக இந்தக் கொட்டாய்க் குள்ள இருந்தது. அதுல எங்க அம்மாவும் தங்கச்சியும் இருந்திருக்கு. அதுகூட எனக்குப் புரியல.

அடியோட போன எனக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு புரியல. நான் அப்படியே மண்சாலை வழியாப் போயி ஒரு பெரிய மாமரத்துப் பக்கத்துல மலைச்சுப் போயி உக்கார்ந்துட்டேன். அப்போ வீடு எரியுது.

கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.

இந்த வூடு மட்டுமல்ல. எல்லா வீடுகளும் எரியுது. ஆணிகளெல்லாம் பட்பட்னு தெறிக்குது. அந்தச் சத்தம் எனக்குக் கேட்குது. யாரு எங்க இருக்காங்கனு ஒண்ணும் புரியல. அப்போ ராத்திரி 10 மணி இருக்கும். அதோட போனவந்தான் நான். அப்படியே தேவூர் போயிட்டு, அதும்பிறகு கீவளூர் போய் கம்ப்ளெயின்ட் கொடுத்து, எனக்குக் காலுல குண்டு பாய்ஞ்சிருந்திருச்சு. அது ஒண்ணும் பண்ணாதுனுட்டு 10 ரவைய எடுத்தாங்க. மிச்சம் இன்னமும் இருக்கு. பத்து இருவது நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன்.

அதுக்குப் பிறகு எங்கப்பா வந்தப்புறம்தான் யார் யார் செத்தாங்க போனாங்கன்ற வெவரம் தெரிஞ்சுது. செத்ததுல எங்கம்மா, தங்கச்சியும் மாட்டிக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. அப்புற என்ன செய்ய, கட்டிக்கிட்டு அழுதோம்.

அப்புறம் நாகப்பட்டினம் தனிகோர்ட்டில் வழக்கு நடந்துச்சு. அதுல மிராசுதார் ஆளுங்க பத்துபேரு. நம்மள்ள பத்துபேருக்குத் தண்டனை. நம்மாளு கோபாலுக்கு ஆயுள் தண்டனை. ராமையனுக்கு ஐந்து வருஷம், வானமாமலை, மன்னார்குடி ரங்கன் எல்லாரும் எங்களுக்காக வாதாடுனாங்க.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

1968 வருஷம் டிசம்பர் 25 ஆம் தேதி மார்கழி மாசத்துக்கு 10ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இதுக்குப் பல நாள் முன்னாலேயே பிரச்சனை இருந்ததுனால நான், எல்லாரும் உஷாரா இருந்தோம். அங்க கொளுத் திட்டாங்க, இங்க கொளுத்திட்டாங்கன்னு சேதி வரும். ராத்திரியெல்லாம் கண் முழிச்சுப் பாத்துக்குவோம். இருந்தாலும் இங்க ஒண்ணும் இல்லேல்ல, வந்தா பாத்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்துட்டோம். சம்பவம் நடந்த அன்னிக்கு எல்லாம் மீறிப் போச்சு. அவங்க 100-200 பேர் திட்டம் போட்டு குறியாவே வந்திருக்காங்க. பிற்பாடு நம்மாளுக்கு வேண்டப்பட்ட ஒரு மிராசுதாருட்ட நாங்க என்ன செஞ்சோம் இப்படி செஞ்சுட்டீங்களேனு கேக்கும்போது எல்லாம் குடிச்சிட்டு, திட்டம் போட்டுத்தான் வந்தாங்கன்னு சொன்னாரு. (நூலிலிருந்து : பக்கம் 12 – 15 வரை)

நூல்: ‘தென்பரை முதல் வெண்மணி வரை
(தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின்
வாய்மொழி வரலாறு)
ஆசிரியர்: அப்பணசாமி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 108
விலை: ரூ.40.00 (டிச-2007 பதிப்பு)

இணையத்தில் வாங்க:  nhm.in

மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க