ருப்புக்கோட்டை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்காக மாணவிகளை பாலியல் சுரண்டலுக்கு அழைத்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எந்த உயர் அதிகாரிக்காக மாணவிகளுக்கு வலைவிரித்தார் நிர்மலா தேவி? வேந்தரா அல்லது துணைவேந்தரா அல்லது இணை வேந்தரா அல்லது பதிவாளரா? யார் அந்த ‘உயர் அதிகாரி’ என்று விசாரிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

நிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

ஆனால் நிர்மலாதேவியோடு பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரையும் இணைத்து இவ்வழக்கை ஊத்தி மூடிக் கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். தமிழக மக்கள் இந்த பிரச்சினையை மறந்திருந்த நிலையில் நிர்மலாதேவி கவர்னரை 4 முறை சந்தித்ததைப் பற்றி வாக்குமூலம் கொடுத்தாக செய்தி வெளியிட்டது நக்கீரன் இதழ்.

பல்கலைகழகத்தில் உயர் அதிகாரிகளின் பாலியல் வெறிக்கு கல்லூரி மாணவிகளை பலியாக்க முயற்சித்தார் நிர்மலாதேவி என்பதே குற்றச்சாட்டு. யார் அந்த உயர் அதிகாரி என்ற கோணத்தில் புலனாய்வு பத்திரிகை என்ற முறையில் பல செய்திகளை திரட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது நக்கீரன் இதழ். இந்த சூழ்நிலையில் நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்கள் 09.10.2018 அன்று காலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதித்துறை நடுவர் அவரை சிறையில் அடைக்காமல் விடுவித்தார்.

நக்கீரன் கோபால் மீதான வழக்கு என்ன?

கடந்த ஏப்ரலில் 20-22-ம் தேதி நக்கீரன் இதழில் அட்டைப்பக்கத்தில் “பிரேக்கிங் செய்தி என தலைப்பிட்டு, பூனை கழுத்தில் நக்கீரன் மணிகட்டி விட்டது என்றும், கவர்னர் வலையில் சிக்கினார், ஜெயிலில் உள்ள நிர்மலாவுக்கு ஆபத்து” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த கட்டுரைக்காக நக்கீரன் கோபால் மற்றும் செய்திப் பிரிவினர் 35 பேர் மீது கவர்னரின் துணை செயலாளர் டாக்டர் டி செங்கோட்டையன் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

படிக்க:
♦ நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !
♦ மாமி – மாட்டுக்கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!

“இந்திய குடியரசுத் தலைவரை அல்லது ஒரு மாநில கவர்னரை தமது கடமையினை செய்ய விடாமல் தடுத்தல், வன்முறையான அச்சுறுத்தல் மூலம் செய்ய வேண்டியவற்றை செய்யாமலும், செய்ய கூடாதவற்றைச் செய்யும்படி வற்புறுத்துதல், தாக்குதல், சட்டவிரோதமாக தடுத்தல், வன்முறை செயல்களால் அச்சுறுத்தல், அச்சுறுத்த முயற்சி செய்தல் ஆகியவை குற்றங்களாகும். இந்த குற்றங்களில் ஈடுபடுபவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன், அபராதமும் விதிக்கப்படும்.”

இதன்படியே பார்த்தாலும், நக்கீரன் இதழில் வந்த கட்டுரைக்கு எப்படி இந்தச் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யமுடியும்?

நக்கீரன் கோபால் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதால் கவர்னரின் எந்த வேலை பாதிக்கப்பட்டது? கவர்னர் மீதும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மீதும் ஏற்கனவே சந்தேக நிழல் உள்ளது. நிர்மலாதேவியின் ஆடியோ டேப்-ல் கவர்னர் உள்ளிட்ட பலருடைய பெயர் இடம் பெற்றது. பல்கலைகழக உயரதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு இருக்கும்போது அந்த பல்கலைகழகத்தின் வேந்தரான கவர்னர் எந்த சட்ட முறைகளையும் பின்பற்றாமலேயே ஓய்விபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தானம் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தார். போலிஸ் விசாரணைக்கு அந்த கமிட்டியின் விசாரணை இடையூராக இருப்பதால் சந்தானம் குழு அறிக்கையை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது*.

கவர்னர் மீதுள்ள குற்றச்சாட்டை முறையாக விசாரிக்க ஏதுவாக அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் விசாரணைக்கு உட்படுவதற்குத் தான் தயார் என்றாவது முன்வந்திருக்க வேண்டும். ஆனால் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே அவரே ஒரு கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவு போடுவது கவர்னரின் பதட்டத்தை உலகிற்கு உணர்த்தியது. தற்போது குற்றஞ்சாட்டுவோர் மீதே வழக்கு போடுவது எந்த ஊர் நியாயம்? ஆனால் தமிழக அரசோ எந்த கூச்சமும் இல்லாமல் இப்படி பச்சையாக பொய் வழக்கு போடுகிறது.

நக்கீரன் கோபால் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர் மீது என்ன வழக்கு – எந்த காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதைக் கூட குறிப்பிடாமல் கைது குறிப்பாணையை கொடுத்திருக்கிறது காவல்துறை.

காவல் இணை ஆணையர் தலைமையில், பல காவல் உயரதிகாரிகள் புடைசூழ, நூற்றுக்கணக்கான போலீசைக் குவித்து ஒரு கொடூரமான பயங்கரவாதியை கைது செய்வது போல திரு.கோபால் அவர்களை கைது செய்தது தமிழக போலீஸ். கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பார்ப்பதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ-வை, ’ஒரு வழக்கறிஞர்’ என்ற முறையில் தனது அடையாள அட்டையைக் காண்பித்தும் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் காவல் நிலைய வாயிலேயே போராடி கைதானார். சுதந்திரம் – சட்டத்தின் ஆட்சி என்னவாயிற்று என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது.

கொலை செய்யப்பட்டவர் யார் என்றே சொல்லாமல் கொலை வழக்கு போட்டு கைது செய்வதைப் போல கவர்னரை விமர்சித்ததை, கவர்னரை பணி செய்யவிடவில்லை என்று எடப்பாடி அரசு கைகொட்டி சிரிக்கும்படியாக ஒரு வழக்கு போட்டுள்ளது.

உலகெங்கும் பத்திரிகையில் ஆட்சியாளர்களை கடும்சொற்களால் விமர்சிப்பது, கார்ட்டூன் வரைவது என்பது புதிதல்ல. இதுவரை இந்தியாவில் பத்திரிகைத்துறை மீது பயன்படுத்தாத சட்டப்பிரிவை முதல்முறையாக பயன்படுத்தி உள்ளனர். இந்த செயல் ஜனநாயக குரல் வளையை நெறிப்பதாகும்.

படிக்க:
♦ பிறவிப் பத்திரிகையாளனை கண்டுபிடிப்பது எப்படி ?
♦ கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதும், இது அவரின் தனிப்பட்ட பிரச்சினையாக கருதாமல் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டதும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்ததும், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு.முத்தரசன் ஆகியோர் நீதிமன்றத்திற்கே வந்தும், இந்து பத்திரிகையின் தலைவர் திரு. என். ராம் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து பத்திரிக்கை சுதந்திரத்தை காக்கவும், அப்பட்டமான சட்டவிரோத வழக்கினை எதிர்த்து தனது கருத்தினை பதிவு செய்ததும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

நக்கீரன் கோபால் கைதை ஒட்டி நீதிமன்றத்திற்கு வந்த ராம், திருமாவளவன்

“இன்று நக்கீரன் கோபாலுக்கு நேர்ந்த நிலை, நாளை என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் நிச்சயம் நேரும் – இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் – பத்திரிகை சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கும் என்று அஞ்சுகிறேன்” என்று ‘இந்து’ ராம் நீதிமன்றத்தில் முன்வைத்தது வெறும் வார்த்தையல்ல, நிதர்சனமான உண்மையாகும்.

நக்கீரன் கோபால் அவர்களின் வழக்கறிஞர் திரு.பி.டி.பெருமாள் அவர்கள் பிரிவு 124 தாக்கல் செய்ய எந்த அடிப்படையும் இல்லை, ஒரு விமர்சனம் கவர்னரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கருத எந்த அடிப்படையும் இல்லை. வன்முறையான அச்சுறுத்தல் இல்லாமல் பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று கூற எந்த முகாந்திரமும் இல்லை. கவர்னரை விமர்சனம் செய்ததற்கு மிஞ்சினால் அவதூறு வழக்குதான் போடமுடியுமே தவிர, வேறு எந்த குற்ற வழக்கும் போடமுடியாது என்று வாதிட்டார்.

இறுதியாக, எழும்பூர் 13-வது நீதித்துறை நடுவர், பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் பொருட்டும், நக்கீரன் கோபாலை கைது செய்யும்போது எந்த காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை கூட குறிப்பிடப்படாத கைது குறிப்பாணையை சுட்டிக்காட்டியும், இந்திய தண்டனைச் சட்டம் 124-வது பிரிவின் கீழ் அவரை நீதிமன்ற காவலில் வைக்க எந்த முகாந்திரமும் இல்லை – அரசு தரப்பு அதற்கான எந்த ஆவணமும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி விடுதலை செய்தார்.

முதலமைச்சர் – கலெக்டரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது, தூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி கோரி ஐ.நா-வில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு சட்ட ஆலோகராக இருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது, எட்டு வழி சாலை எதிர்த்த விவசாயிகள் கைது, நடிகர் மன்சூர் அலிகான் கைது, விவசாயிகளை பார்க்கவந்த யோகந்திர யாதவ் கைது, எட்டு வழி சாலை படம்பிடித்த சன் செய்தி பத்திரிகையாளர் மீது போலீஸ் தாக்குதல், கர்ப்பினி பெண்ணை எட்டி உதைத்து கொன்ற போலீசை விமர்ச்சித்தவர் கைது என கடந்த நான்கைந்து மாதங்களாக கைதுகளும் வழக்குகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. போலீசின் கைது நடவடிக்கைகளில் கூட சட்டப்படி விதிமுறைகள் பின்பற்றுவதில்லை.

எடப்பாடி அரசால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இந்த இழிநிலை நினைத்து உலக அரங்கில் ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனியும் நிலை உள்ளது. இது சட்டத்தின் ஆட்சி அல்ல. இதுவரை அடைந்த நாகரிக சமூகத்தை பின்னோக்கி இருண்ட காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சி நடக்கிறது என்பது நக்கீரன் கோபால் உள்ளிட்ட எல்லா கைது நடவடிக்கைகளும் நமக்கு உணர்த்துகிறது. இந்த இழிவை துடைப்பதற்கும், ஆபத்தை எதிர்ப்பதற்கும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது, செயல்பட வேண்டியுள்ளது.

இவண்,
வழக்கறிஞர் சு. ஜிம் ராஜ் மில்டன்,
செயலர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

* சந்தானம் கமிஷன் விசாரணை அறிக்கை வெளியிடத் தடை கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அந்த வழக்கை நடத்தி வருகிறது.

4 மறுமொழிகள்

  1. தேசவிரோத கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகத்தை பற்றி கவலைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது, சில நாட்களுக்கு முன்பு தான் இதே வினவில் இந்திய ஜனநாயகத்தை பற்றி கேவலமாக பேசி கட்டுரை வந்தது இன்று ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமாம்… இந்திய ஜனநாயகத்தை அழித்து கம்யூனிஸ்ட் சர்வாதிகாரத்தை கொண்ட வர வேண்டும் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்கள் எங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை அவர்கள் நாட்டு (சீனா) ஜனநாயகத்தை பற்றி பேசட்டும்.

  2. தமிழில் கவுரவமான முறையில் நடத்தப்படும் மஞ்சள் பத்திரிக்கை நக்கீரன். இந்த பத்திரிக்கை கருணாநிதி குடும்பத்தின் ஆசனவாய் என கருதப்படுகிறது. அதை நடத்தும் நக்கீரன் கோபால் மிகவும் அருவருப்பானவன். இவனுக்கு ஆதரவளிப்பது என்பது பத்திரிக்கை தர்மத்தை கேவலப்படுத்துவது ஆகும். ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைப்பதாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க