துரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு (SAVE MKU COALITION) சார்பாக ஊழலை ஒழிப்போம்! உயர்கல்வியைக் காப்போம்!
என்ற முழக்கத்தின் கீழ் மதுரை கே.கே.நகர், நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 04.05.2018 அன்று மாலை அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

ம.கா.ப.க.பா கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் பெ. விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். “தெ.பொ.மீ.,மு.வ.,வ.சுப. மாணிக்கம் போன்ற அறிஞர்கள் அமர்ந்து கண்ணும் கருத்துமாக வளர்த்த இந்தப் பல்கலைக் கழகம் இன்று கிரிமினல்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து பல்கலையை மீட்கிற பொறுப்பும் கடமையும் நம் எல்லோருக்கும் இருக்கிறது” என்று கூறினார்.

தலைமை ஏற்றுப் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் . சீனிவாசன் பேசும்போது, ”பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருந்தினர் மாளிகையில் நிர்மலா தேவியை தங்க வைத்ததற்கு யார் பொறுப்பு? பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் துணை வேந்தருக்குத் தெரியாமல் இது நடக்குமா? அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

பேராசிரியர் அ. சீனிவாசன்

ஒரு பல்கலைக் கழகம் இப்படி பாலியல் பிரச்சினையில் சிக்கிச் சீரழியும் நிலையில் நாம் யாரை நம்பி நம் பிள்ளைகளை அனுப்புவது? நாங்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் இணைந்து போராடி பல்கலைக் கழகத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ம.கா.பல்கலைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் பேசியதாவது:

சி.பி.சி.ஐ.டி.க்கு சில கேள்விகள்

”நிர்மலா தேவி கூறிய அந்த உயர் அதிகாரிகள் யார்? துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள் தானே. அவர்களை எல்லாம் இதுவரை ஏன் விசாரிக்கவில்லை? பல்கலைக் கழக வளாகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன. அவற்றை ஏன் ஆய்வு செய்யவில்லை? சி.பி.சி.ஐ.டி.விசாரணை கண்துடைப்பு நாடகம். நிர்மலா தேவி, முருகன், கருப்பையாவை வைத்து வழக்கை முடித்துவிடலாம் என்று முயற்சி நடக்கிறது.

சாப்பாடு முதல் அனைத்து ஏற்பாடுகளையும் மனித வள மேம்பாட்டு மைய இயக்குனர் கலைச்செல்வன் தான் பார்த்துக்கொள்கிறார், அதற்கு ஆதாரம் இருக்கிறது. அப்படியானால் சி.பி.சி.ஐ.டி.விசாரணை என்ன ஒழுங்கில் நடக்கும்? பேராசிரியர் சீனிவாசனைக் கூலிப் படை வைத்துத் தாக்கிய வழக்கிலிருந்து கல்யாணி மதிவாணன் மற்றும் 4 பேரை காவல்துறை நீக்கியது போல இந்த மூன்று பேரை மட்டும் வைத்து வழக்கை முடிக்க முயற்சி நடந்து வருகிறது.”

கவர்னர் விசாரணை கமிசன் அமைக்க சட்டப்படி அதிகாரம் இல்லை :

”பல்கலைக் கழக விதிமுறைகளிலோ, தனியார் கல்லூரி விதிமுறைகளிலோ இடமில்லை. கவர்னர், மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்படுகிறவர். வேறு தனிப்பட்ட அதிகாரம் மாநிலத்திற்குள் அவருக்கு இல்லை. விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. சந்தானம் சிறைக்குள் போய் விசாரணை நடத்துகிறார். நீதிமன்ற காவலில் உள்ள ஒருவரை விசாரிக்க வேண்டுமானால் மாவட்ட நீதிபதியிடம் அனுமதிபெற வேண்டும். சந்தானம் எந்த அனுமதியும் பெறாமல் எப்படி விசாரிக்கிறார். அவர் சாட்சிகளைக் கலைக்க மாட்டாரா?

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்

கடந்த 10 ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதி இல்லாதவர்களை கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் செய்கின்றனர். குற்ற வழக்கில் சிக்கியவர்கள் துணை வேந்தர்களாக வந்தால் எப்படி இருக்கும்? மதுரை காமராசர் பல்கலை துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பெயரால் வழக்குப்போடப்பட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தலைமை நீதிபதியிடம் உள்ளது.

தேடுதல் குழு உறுப்பினர்கள் அர்சத் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர்  கடைசி நேரத்தில் சென்னை கவர்னர் மாளிகை அருகில் உள்ள ‘லெமன் டிரீ’ ஓட்டலில் கன்வீனர் முருகதாஸ் தங்களை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக உயர் நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்துள்ளனர். முறைகேடாகப் பதவிக்கு வந்தவர்கள் முறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு பேராசிரியர்களையும் மாணவியர்களையும் கிரிமினல்களையும் பயன்படுத்துகின்றனர். இது மதுரையின் பிரச்சினை. எல்லோரும் இணைந்து போராடவேண்டும்.”

ம.கா.பல்கலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலாளரும், மதுரைக் கல்லூரியின் மேனாள் முதல்வருமான பேராசிரியர் இரா.முரளி பேசியது:-

”பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு பயனில்லை. மக்களை முற்றுகையிட வேண்டும். உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் நடக்கும் சீரழிவுகளைத் தட்டிக் கேட்க முன்வாருங்கள். போராட வாருங்களென்று மக்களைத் திரட்ட வேண்டும். அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போது அந்தப் பல்கலையின் வரவேற்பு அறையில் 30-க்கும் மேற்பட்டவர்களின் புகைப்படங்களைப் பார்த்தேன். அவர்கள்  அனைவரும் நோபல் பரிசு பெற்றவர்கள். அந்தப் பல்கலையில் படித்தவர்கள்.

பேராசிரியர் இரா.முரளி

ம.கா. பல்கலையில் யாருடைய படத்தை வைப்பது? அதையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமது உயர்கல்வியின் தரம் பாதாளத்தில் இருப்பது தெரிகிறது.

நிர்மலா தேவி விவகாரம் சமூக ஊடகங்களில் வெளிவந்த உடன் பரபரப்பு காணப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் பல்கலை உயர் அதிகாரிகள் என்று நிர்மலா தேவி கூறியுள்ளார். பல்கலை உயர் அதிகாரிகள் துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், டீன் மற்றும் இயக்குனர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாயில் கூட்டம் போட்டு பேசிய சங்க நிர்வாகிகளை இட மாற்றம் செய்துள்ளனர்.

இது அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கை. பல்கலைக் கழகத்தின் மாண்பினைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் நிர்வாகம் மிரட்டுகிறது. பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் உள்ள முன்னாள் பேராசிரியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்திவிடுவதாக மிரட்டுகிறார்கள். அடியாள் ரேஞ்சுக்கு அவர்களது நடவடிக்கை போகிறது. நாம் நடத்துகிற இந்தக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே சுவரொட்டி ஒட்டுகிறார்கள். இதைப் பார்க்கிற மக்கள் அவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.

பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பைப்பின் அரங்கக் கூட்டத்தைக் கண்டித்து நலம் விரும்பிகள் என்ற பெயராலே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

மதுரை காமராசர் பல்கலையை மட்டும் பாதுகாத்தால் போதாது. தமிழ் நாட்டில் உயர் கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர் இந்தப் பல்கலைக் கழகம் நமது தாய் வீடு போன்றது. எவ்வளவு பேருடைய உழைப்பின் பலனாய் விளைந்தது. மீனாட்சி கோவிலைப் போன்றது. வைகையை மட்டும் சுத்தப்படுத்தினால் போதாது ம.கா.பல்கலையையும் சுத்தப்படுத்த வேண்டும்”.

சிறப்புரை ஆற்றிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது,

”மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பாலியல், ஊழல், முறைகேடு சீரழிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அந்த நான்கு மாணவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மதுரை பல்கலைக் கழகம் மட்டும் அல்ல. அனைத்துப் பல்கலைக் கழகங்களும் முடை நற்றம் வீசுகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன் அனுமதி இன்றி தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் அச்சுறுத்துகிறது.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்

வெளிப்படையாக பேசாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் டெல்லியில் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பேராசிரியர்கள் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? பல்கலைக் கழகங்களை விட நீதிமன்றங்கள் முக்கியமானது. விசாரணை அமர்வுகளை அமைப்பதில் வெளியாட்களின் தலையீடு உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த வெளியாட்கள் யார் ? இங்கே உயர் அதிகாரிகள் யார்?

குஜராத்தில் சோராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷா குற்றவாளி. அந்த வழக்கை  விசாரித்த நீதிபதி லோயா மிரட்டப்படுகிறார். தலைமை நீதிபதி மொகித் ஷா லோயாவிடம் 100 கோடி பேரம் பேசுகிறார். அதற்கு சம்மதிக்காத லோயா மர்மமான முறையில் இறக்கிறார். அவர் மாரடைப்பு வந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் சொல்கின்றனர். கேரவன் பத்திரிக்கை இதைப் பற்றி எழுதுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் அது கொலை அல்ல என்று பேட்டி கொடுக்கின்றனர். பேராசிரியர்கள் மட்டும் ஏன் பேட்டி கொடுக்கக் கூடாது? 30/12/2017 -ல் அமித் ஷா விடுதலை செய்யப்படுகிறார். சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யவில்லை. சிறப்புப் புலனாய்வு கோரி வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர். வழக்கு மும்பையிலிருந்து டெல்லிக்குச் செல்கிறது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தானே முன்வந்து எடுத்து அதைத் தள்ளுபடி செய்கிறார். தலைமை நீதிபதியே அப்படி இருக்கிறார்.

பல்கலைக் கழகங்கள் இவ்வாறு சீர்கேடு அடைந்து இருப்பதற்கு காரணம் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டதுதான். தெ.பொ.மீ., மு.வ., லட்சுமண சாமி முதலியார்., மால்கம் ஆதிசேசையா., நே.து.சு., போன்றவர்கள் இருந்தபோது ஊழல் இல்லை. தலைமைச் செயலாளர் முதல் கல்வி அமைச்சர்கள் வரை அவர்களைத் தேடிப் போய்ப் பார்ப்பார்கள்.

ஆனால் இன்றைக்கு துணைவேந்தர்களாக இருப்பவர்கள் கீழ் நிலை அதிகாரிகளின் காலடியில் காத்துக் கிடக்கின்றனர். இதைத் தான் மார்க்ஸ் முதலாளித்துவத்தில் புனிதம் கெட்டுவிட்டது என்று சொன்னார்.

ஆளுனர் புரோகித் மீது குற்றத்தின் நிழல் படிந்துள்ளது. அவரே விசாரணைக் கமிசன் அமைக்கக்கூடாது. “No man can be a judge to his own cause” என்று சொல்வார்கள். நான் நீதிபதியாகப் பணியாற்றிய போது என் மனைவி வேலைசெய்த இடத்திலிருந்து வந்த வழக்கை நான் விசாரிக்கவில்லை.

பேராசிரியர் அ. சீனிவாசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 17.05.2014 அன்று தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான செய்தி

அது போல் எனது மருத்துவர் தொடர்பான வழக்கு வந்தபோதும் நான் வேறு அமர்வுக்கு அனுப்பி விட்டேன். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அருணாசலப் பிரதேச முதல்வர் இறப்பு தொடர்பாக அவரது மனைவி தலைமை  நீதிபதி கேஹருக்கு கடிதம் எழுதினார். அவர் மீது குற்றத்தின் நிழல் படிந்திருந்தது. அவர் அந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என்று ஏ.பி.ஷா குறிப்பிடுகிறார். இது புரோகித்துக்கு முற்றிலும் பொருந்தும்.

தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஒரு வழக்கில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில்  நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக, ஒரிசா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குத்தூஸிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவழக்கில் தீபக் மிஸ்ரா சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதை தள்ளுபடி செய்து அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தார். தற்போது தீபக் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தீர்மானம் தாக்கல் செய்தனர். அதனை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தள்ளுபடி செய்தார். ஆனால் ஹாதியா வழக்கில் தேவை இல்லாமல் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுகிறது.

2009ல் இலங்கையில் இனப் படுகொலை நடந்த போது இலங்கை அரசு உள் நாட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழக சட்ட மன்றத்தில் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் வினோதமான தீர்ப்பை வழங்கியுது. சசி கலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும்  குன்ஹா தீர்ப்பையும் ஜெயலலிதாவுக்கு மட்டும் குமாரசாமி தீர்ப்பையும் வழங்கியது.

நீதித் துறையே சீரழிந்தும் காவி மயமாகியும் வரும்போது பல்கலைக் கழகங்களும் உயர் கல்வித் துறையும் அவ்வாறு மாறுவதில் வியப்பு என்ன இருக்கிறது? நீதித் துறையின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. அவசர கால நிலைமையை விட தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. நீதிபதி கிருஷ்ண பட் மீதான பாலியல் குற்றச்சாட்டு, நீதிபதிகளுக்கு விடப்படும் மிரட்டல், நீதிபதிகள் ஜோசப் குரியன், பால் வசந்த குமார் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் போன்றவர்களுக்கு அவர்கள் காவிக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதாலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

அதுபோலத்தான் தமிழ் நாட்டிலும் சட்டப் பல்கலைக்கு ஆந்திராவிலிருந்தும் அண்ணா பல்கலைக்குக் கர்நாடகாவிலிருந்தும், இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவிலிருந்தும் காவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா கவர்னர் சண்முக நாதன் ஆர்.எஸ்.எஸ்.காரர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர்களின் அதிகாரம் பற்றி அம்பேத்கரின் கருத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிற குடியரசுத் தலைவருக்கே நம்முடைய அரசமைப்பில் அதிகாரம் இல்லை என்கிறபோது அவரால் நியமிக்கப்படுகிற கவர்னருக்கு ஏது அதிகாரம் என்பதுதான். சி.பி.ஐ.விசாரணை மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. சென்னை உயர்  நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கை சி.பி.ஐ. பல ஆண்டுகளாக விசாரித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ம.கா.பல்கலைப் பிரச்சினையில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

தீர்வு என்ன?

மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு மாணவர்கள்தான் முன் நின்று போராட வேண்டும். அதன் பிறகு தான் ஆசிரியர்கள், பொது மக்கள். மக்களுக்கு பணி செய்யத்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனரே தவிர நீதிபதிகளுக்காக மக்கள் இல்லை. அதுபோலத்தான் ஆசிரியர்களும். மாணவர்கள் சங்கமாகத் திரள வேண்டும். ஏற்கனவே மாணவர் சங்கம் இருந்தது. இப்போது இல்லை.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19 (1) சி சங்கம் வைக்கும் உரிமையைத் தருகிறது. இது மாணவர்களுக்கான அடிப்படை உரிமை. அதற்காகப் போராட வேண்டும். வாக்குரிமை வயது வரம்பு 21 ஆக இருந்தது தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது எதனால்? அவர்களுக்கு அரசியல் சமூக புறச்சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் 18 வயதில் வந்துவிடுகிறது என்பதனால்தான்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் படுகொலைக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மணவர்களால் முன்னெடுக்கப்பட்டதுதானே! ”ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த தவறிவிட்டனர்.” என்று பேராசிரியர் சிவகுமார் கூறியது சரிதான். மாணவர்களைஅரசியல்படுத்த வேண்டும்.” இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.

கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி  நிறைவாக, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை துணை வேந்தர், பதிவாளர் பணி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

கூட்டமைப்பின் பொருளாளர் ஆய்வாளர் .ஜெகன்னாதன், உயர்கல்வித் துறையில் சாதியும் மதமும் புகுந்துள்ளது வெட்கக் கேடானது என்ற தனது கருத்தைப் பதிவு செய்தார்.

கூட்டத்தில் 350 பேர்வரை கலந்துகொண்டனர். முன்னாள், இன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், தொழிசங்கங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு இட்துசாரி, புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்கள், இசுலாமியர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஊடகங்கள் நீதிபதியை பேட்டிகண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.
தொடர்புக்கு : 94434 71003.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க