தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE
ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.
தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC), பொது மக்களின் கருத்துக்கேட்பதற்காக பட்டப்படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைப் படி, கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான (BA, BSc, MA, MSc BE/BTech, ME/MTech) படிப்புகளில் கொண்டுவரபோகும் மாற்றங்கள் குறித்த இந்த வரைவு அறிக்கை (தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF)) மீதானக் கருத்தை பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அனுப்புமாறு UGC கூறியுள்ளது.
அதில், தற்போது நடப்பில் உள்ள பட்டப் படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளது. உதாரணமாக தற்போது BSc படிப்பு மூன்று ஆண்டுகள் (ஆறு பருவங்கள்) கட்டாயம் படிக்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ளது. அதை
BSc – சர்டிபிகேட் (ஓராண்டு + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – டிப்ளமோ (ஈரண்டாண்டுகள் + வேலைக்கான 2 மாத பயிற்சி)
BSc – (மூன்றாண்டுகள்)
BSc – ஹானர்ஸ் (நான்காண்டுகள்)
BSc – ஆராய்ச்சி (நான்காண்டுகள், அதில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்) என்று பிரிக்கப் போவதாக வரைவு அறிக்கை கூறுகிறது.
BSc என்ற ஒரு பட்டப் படிப்பு ஐந்து படிப்புகளாக, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்பு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி BSc – வேதியியல் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் வேலைக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால் BSc சர்டிபிகேட் அல்லது BSC டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம். மேற்படிப்பு படிக்க வேண்டு விரும்பினால் BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) நான்காண்டுகள் படிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு படிப்பில் பயிலும் மாணவர் பெற்றிருக்க வேண்டிய கற்றல் பண்புகள் (Graduates attributes) குறித்தும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை Level 5-லிருந்து Level 10 வரை பிரித்துள்ளனர். உதாரணமாக, BSc சர்டிபிகேட் படிக்கும் மாணவருக்கு அவர் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடப்பிரிவு சார்ந்து வேலை செய்வதற்கு தேவையான திறனை கற்றிருக்க வேண்டும். இது Level 5 என்று வரையறுத்துள்ளனர். அதேபோல, BSc (ஹானர்ஸ்/ஆராய்ச்சி) படிக்கும் மாவணர் தான் தேர்ந்தேடுத்த பாடப் பிரிவில் ஆராய்ச்சி செய்வதற்கான முழுத்திறமையை பெற்றிருக்க வேண்டும். இது Level 8 என்று வரையறுத்துள்ளனர். இதனொடு சேர்ந்து Constitutional, Humanistic, Ethical and moral values சார்ந்தவைகளும் பாடமாக படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
இதன் விளைவுகள்
1. இந்த வரைவு அறிக்கை கலை – அறிவியல் படிப்புகளையும் பொறியியல் / தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் ஒரே பார்வையில் அணுகுகிறது. உதாரணமாக BE/BTech மின்னனுப் பொறியியல் (Electrical Engineering) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பிற்கு பிறகு BE-டிப்ளமோ முடித்து வேலைக்கு செல்கிறார் என்றால் BA (தமிழ்/வரலாறு) படிக்கும் மாணவர் இரண்டாண்டு படிப்பான BA-டிப்ளமோ முடித்துவிட்டு என்ன வேலைக்கு செல்ல முடியும்?
பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் இளங்கலை மாணவர்கள் தங்கள் முதல் வருடத்திலோ அல்லது இரண்டாம் வருடத்திலோ தங்களின் படிப்பை துறந்து வேலைக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் என்ன படிப்பை தற்போது படித்துக் கொண்டிருந்தார்களோ அதே துறையில் பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்பு உண்டு..
உதாரணமாக, ஒரு இளங்கலை கட்டிட கலை தொழில் கல்வி (Civil Engineering) படிக்கும் மாணவன் தன்னுடைய படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்வதாக இருந்தால் தனக்கான கட்டிடக்கலையை தேர்ந்தெடுப்பார், இதுவரை தான் படித்த கல்வி அவருக்கு உதவக்கூடும், ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவன் தன் இளங்கலை படிப்பை முதல் அல்லது இரண்டாம் வருடத்தில் படிப்பை துறந்தால் அவர் எந்த வேலைக்கு செல்லவது?
இந்திய அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் 27.1 சதவிகிதம் உள்ளது. இது மற்ற வளரும் நாடுகளை விட (BRICS countries) மிகக் குறைவு. இந்தியாவிலுள்ள மொத்தக் கல்லூரிகளில் 60.1 சதவிகித கல்லூரிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன. இச்சூழலில் இளங்கலைப் படிக்கும் மாணவர்கள் முதல் இரண்டாண்குக்குள்ளாகவே சர்டிபிகெட்/டிப்ளமோ மூலம் வேலைக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவானால் இது கிராமப்புற மற்றும் சமுதாயப் பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய நிலைகளிலிருந்து வரக்கூடிய மாணவர்களை மேற்படிப்புகளை நோக்கி செல்வதற்கு பெரிய தடையாகவே அமையும்.
இவ்வழிகாட்டுதலானது கலை மற்றும் அறிவியல் கல்லூரி கற்கும் மாணவர்களை கூலி தொழிலாளர்களாகவும் சுமாடோ/பிக்பாஸ்கட் போன்றவற்றில் கிக் தொழிலாளியாகவே மாற்றுவதற்கான பரிந்துரையாகவே இது இருக்கும் எனக் கருதுகிறோம்.
2. தற்போதைய பாடத்திட்டங்கள் இளங்கலை/முதுகலைப் படிப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ளவை. உதாரணமாக BA/BSc பட்டப் படிப்பில் ஏதாவதொரு பாடப்பிரிவில் படிக்கும் மாணவரின் பாடத்தினை எடுத்துக் கொண்டால் முதல் வருடம் அப்பாடப்பிரிவின் அடிப்படை கல்வி குறித்த பாடங்களும் இரண்டாம் வருடத்தில் அப்பாடத்தின் வளர்ச்சி குறித்த பாடங்களும் மூன்றாம் வருடத்தில் அப்பாடப்பிரிவில் சமீபத்திய வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் என பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வழிகாட்டுதல் படி ஒரு கல்லூரியில் உள்ள ஒரு துறைக்கான இளங்கலை படிப்பிற்கு (அது இயற்பியலோ/ வேதியியலலோ/ தமிழோ/ பொருளாதாரமோ/ கட்டிடப் பொறியிலோ) ஐந்து பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கும்.
இதுபோல ஒவ்வொரு துறைக்கும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு துறையும் குறைந்த பட்சம் இரண்டு டிப்ளமோ படிப்புகளையாவது நடந்த வேண்டும். கூடவே ஆராய்ச்சிக்கு தகுதியான அளவிற்கு மாணவர்களையும் உருவாக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த தகுதியான மற்றும் போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்களும் கட்டமைப்பு வசதிகளும் நிதி ஒதுக்கீடும் தேவை.
AISHE அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் 80 சதவிகிதம் தனியார்களாலும் 20 சதவிகிதம் அரசினாலும் நிர்வகிக்கப்படுபவை. உயர்கல்விக்கென ஒதுக்கப்படும் மத்திய மாநில அரசின் நிதியும் படிப்படியாக குறைக்கப்பட்டு அதனிடத்தில் தனியார்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதன் விளைவாக அரசு கல்லூரிகள் பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் நிதி ஒதுக்கீடு குறைவாலும் ஊழல் முறைகேடுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளோ இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு அனைத்து விதிமீறல்களுடன் தான் இயங்குகின்றன.
உயர்கல்வியின் இந்த சீரழிந்த நிலையை கொரேனா ஊரடங்கு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இச்சூழலில் UGC-ன் மேற்கண்ட வழிகாட்டுதல்களானது உயர்கல்வியை மேலும் சீரழிப்பதுடன் உயர்கல்வியில் தனியார்களை மேலும் வலுவடையவேச் செய்யும்.
3. வேலைவாய்ப்புக்கு தேவையான திறனுள்ள மாணவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். அதற்காக பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என வாதிடுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தேவையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது அரசின் தரவுகளிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.
மேலும் உருவாக்கப்பட்ட வேலைகளும் படிப்புக்கேற்ற வேலைகளாக இல்லை (Under employment). CMIE அறிக்கையின் படி 2018-ல் 4.7 சதவிதமாக இருந்த வேலையின்மை விகிதம் (Unempolyement rate) 2021-ல் 7.9 சதவிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வேலையின்மையால் 18-30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் MGNREGA திட்டத்தில் கிராமப்புற வேலைகளுக்கு செல்லவது அதிகரித்துள்ளது (last five years average ~8% of total MGNREGA registration). இது அரசின் பொருளாதாரக் கொள்கையின் விளைவு.
கூடவே தற்பொது உயர்கல்வியில் பரவலாக்கப் பேசப்படும் கண்டுபிடுப்புகள் & ஸ்டாடப் என்பதெல்லாம் IIT & IIM-களில் மட்டுமே பிரதானமாக உள்ளது. எனவே மாணவர்கள் போதிய திறமைகள் இல்லாமல் இருப்பதினால்தான் வேலை கிடைக்கவில்லை என்பது வடிகட்டியப் பொய்.
எனவே தேசியக் கல்விக் கொள்கையோ, தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு அறிக்கையோ அல்லது அதிகாரிகளோ மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காகவே பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கிறோம் என்று சொல்வது எதார்த்தத்திற்கு முரணாகவே உள்ளது.
4. Avademic Credit Bank, Blended learning பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது. இவற்றின் மூலம் வருங்காலங்களில் இணையவழிக் கல்வி முறையானது உயர்கல்வியின் ஒரு அங்கம் என UGC அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இணையவழி கற்றல் – கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இணையவழி கற்றல் – கற்பித்தலை ஊக்குவித்து வருகின்றன. இது தனியார் edutech நிறுவனங்களை ஊக்குவிக்கவே பயன்படும் எனக் கருதுகிறோம்.
எனவே, மேற்சொன்ன காரணங்களினால், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு (National Higher Education Qualification Framework-NHEQF) அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்படுத்தும் என்று பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு கருதுகிறது. எனவே இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும் என்று கோருகிறோம்.
Tamil