ல்கலைக்கழக மானியக் குழு (UGC) கலவைமுறைக் கற்றல் (Blended Learning-BL) பற்றி 48 பக்க அறிக்கையை கருத்துக் கேட்புக்காக கடந்த மே 20, 2021 அன்று வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பாடத்திற்கு 30 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதம் வரை இணையவழியில் (online) பாடம் நடத்தலாம் என்றும் மீதமுள்ள பகுதியை மரபுவழி (face to face) முறையில் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதாவது ஒரு பருவத்தில் ஒரு பாடத்திற்கு 120 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால் அதில் அதிகபட்சம் 84 மணி நேரத்திலிருந்து (70%) குறைந்தபட்சம் 36 மணி நேரம் (30%) வரை இணைய வழியிலும் (Online mode) மீதமுள்ள நேரத்தை மரபுவழியிலும் (face to face mode) பாடம் நடத்த பரிந்துரைத்துள்ளது.

படிக்க :
♦ RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

மேலும், பல்கலைக் கழகங்களுக்கான கலவைமுறைக் கற்றல் – கற்பித்தலுக்கான பொதுவழிகாட்டுதலையும் (IPSIT model) அவ்வறிக்கையில் கொடுத்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இணையவழிக் கற்பித்தலுக்கான பாடங்களைத் தயாரித்துக் கொள்ளலாம் எனவும் வழிக்காட்டியுள்ளது.

மே 28, 2021 அன்று பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லுரிகளுக்கு அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கையில், மே 26, 2021 அன்று அரசிதழில் வெளியிட்டுள்ள UGC-ன் புதிய விதிமுறைகளின் படி (University Grants Commission (Credit Framework for Online Learning Courses through Study Webs of Active Learning for Young Aspiring Minds) Regulations, 2021) ஒரு பருவத்திற்கான மொத்தப் பாடத்தில் 40 சதவிகிதப் பாடத்தை SWAYAM நடத்தும் இணையவழிப் படிப்புகளின் மூலம் படித்துக் கொள்ளலாம் என்று வழிகாட்டியுள்ளது. கூடவே SWAYAM வழங்கும் வரும் பருவத்திற்கான (ஜீலை – அக்டோபர் 2021) பாடங்களின் பட்டியலையும் (இளங்கலை-83 பாடங்கள்; முதுகலை-40 பாடங்கள்) வெளியிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு 20 சதவிகிதப் பாடங்கள் வரை SWAYAM தளத்தில் படிக்கலாம் என UGC வழிகாட்டியிருந்தது. கொரோனா ஊரடங்கு ஆரம்பத்தில் அதை 25 சதவிகிதமாக உயர்த்தியது. தற்போது 40 சதவிகிதமாக அதிகப்படுத்தியதோடு அதனை நிரந்தமாக்கி சட்டம் இயற்றியுள்ளது. UGC-ன் மேற்கண்ட பரிந்துரைகள், உயர்கல்வியில் இணையவழிக் கற்பித்தலுக்கும் பட்ட படிப்புகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவதையே காட்டுகிறது.

கடந்த ஒராண்டுக்கும் மேலாக பள்ளிகளும் கல்லூரிகளும் முறையாக இயங்கவில்லை. கல்லூரி வகுப்புகளும் தேர்வுகளும் பெரும்பான்மையாக இணையத்தின் மூலமாகவே நடத்தப்படுகிறது. ஆகையால் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகள் இணையம் மற்றும் மின்னணுச் சாதனங்களை அவர்கள் பெறுவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகள், மேல்தட்டு மக்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகள் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் மாணவர்களின் இணையவழியிலான கற்றலில் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கூடவே, ஒவ்வொரு குடும்பத்திலுள்ள சமகாலத்திய பொருளாதார நெருக்கடியும் மாணவர்களின் கல்வி கற்றலை வெகுவாக பாதித்துள்ளது.

இவைகளின் விளைவாக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருப்பதாகவும், பள்ளி/கல்லூரி இடைநிற்றல் அதிகரித்திருப்பதாகவும் உயர்படிப்புகளுக்கு மாணவர்கள் செல்வது குறைந்திருப்பதாகவும் ஆய்வு மாணவர்கள் ஆய்வை விட்டு வேலைகளுக்கு சென்றிருப்பதாகவும் கள ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், இந்த எதார்த்த நிலமைகளை UGC-யோ அல்லது மத்திய கல்வி அமைச்சகமோ அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. மாறாக இதுவரை பின்பற்றி வந்த கற்றல்-கற்பித்தல் முறை மாணவர்களுக்கு எதிராக இருந்தது போலவும் (Teacher centeric, one-size-fits-all) கலவைக் கற்றல் முறை/இணையவழிக் கற்றல் முறையே மாணவர்கள் நலன்களுக்கானது (Student cnteric, liberate the students) என்றும் UGC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழத்தின் Academic Council, கலவைமுறைக் கற்பித்தலுக்கான வழிகாட்டுதலின் அடிப்படையில் இணையவழிப் பாடத்திற்கான (module) தயாரிப்புகளுக்கு ஒப்புதலை வழங்கலாம் என UGC கூறுகிறது. ஆனால், இணையவழி கற்பித்தல் என்பது மரவுவழி கற்பித்தலைப் போன்று ஆசிரியரின் அறிவுத்திறமையை மட்டும் பொறுத்தல்ல.

கூடுதலாக இணையவசதி, மென்பொருள்கள் (simulation, audio-video recording and processing, VR), இவற்றை கையாளுவதற்கான திறன் சக்திகள் இவையனைத்தையும் பொறுத்தது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இதற்கான கட்டமைப்பை உருவாக்க நிதியாதாரங்கள் மிக அவசியம்.

கடந்த ஒருவருடகாலமாக இணையவழி கற்பித்தலுக்காக அரை டஜனுக்கும் அதிகமான சுற்றறிக்கைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள UGC இதுவரை அதற்கான நிதி உதவி எதுவும் வழங்கவில்லை. இணையவழிக் கல்வி கட்டமைப்பிற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுகின்ற நிதி கூட SYAWAM, NMEICT போன்ற திட்டங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

ஆகையால் நிதியாதாரங்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் திறமையான பேராசிரியர்களின் பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் மாநிலப் பல்கலைக்கழகங்களில் இணையவழிக் கற்பித்தலுக்கான பாடத்தினை (module) உருவாக்குவதென்பது மிகவும் கடிமான ஒன்றாகும்.

ஆகையால், இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள ஒரு கல்லூரியில் கற்பிக்கப்படும் இளங்கலை வேதியியல் பாடத்திற்கான பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, தேர்வுகள் அனைத்தையும் மத்திய கல்வி அமைச்சகமே தீமானிப்பதாக இருக்கும். இதனை அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வரலாறு பாடங்களுக்கும் விரிவுப்படுத்தினால் இதன் பரிமாணத்தைப் புரிந்துக் கொள்ள முடியும்.

இப்போக்குகளின் வளர்ச்சியானது ஏறத்தாழ பாடத்திட்டம், தேர்வுகள் மற்றும் கற்பித்தல் முறை ஆகியவற்றில் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமையை பறிப்பதும் மொத்த அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிப்பதிலேயே முடியும். இது உயர்கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயகப்படுத்துவதற்கும் எதிரான செயலாகும்.

கொரோனா ஊரடங்கினால் ஒப்பந்த மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாணவர்களிடமிருந்து முழுமையானக் கட்டணத்தை வசூலித்த கல்லூரிகள் ஊரடங்கை காரணம் காட்டி ஆசிரியர்களின் ஊதியத்தை வெகுவாகக் குறைத்துவிட்டனர். இதனால், ஆசிரியர்கள் வேறுவேலைகளுக்கு செல்வதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், 40 சதவிகித இணையவழி கற்பித்தல் கட்டாயம் என்ற UGC வழிகாட்டுதல் ஆசிரியர்களின் வேலையிழப்புகளையே அதிகமாக்கும். இவர்களின் வழிகாட்டுதல்கள் தனியார் கல்லூரிகளின் நலன்களுக்கானதாகவே உள்ளது.
கற்றல்-கற்பித்தல் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்டுத்துவதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், மத்திய அரசின் அணுகுமுறையோ மரபுவழி கற்றல்-கற்பித்தல் முறைக்கு மாற்றாக இணையவழி கற்றல்-கற்பித்தலை முன்தள்ளுவதாக உள்ளது. உயர்கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பதிலாக இணையவழி படிப்புகளின் மூலமே உயர்கல்வியை பரவலாக்க முடியும் என நம்புகிறது. இதன் வெளிப்பாடாகவே UGC-ன் பரிந்துரைகள் உள்ளது.

இதனடிப்படையிலேயே 2030-க்குள் உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தை (GER) 50 சதவிகிதமாக்கப்போவதாக, அதாவது தற்போதுள்ள அளவைவிட (26%) இருமடங்கு, கல்வி அமைச்சர் கூறுகிறார்.

கடந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இணையவழிப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை UGC வழங்கியுள்ளது. சந்தையில் கிராக்கியுள்ள படிப்புகளை (Mechine learning, Data science, AI, IOT) மட்டுமே வழங்கும் இக்கல்விநிறுவனங்கள், பல லட்சங்களை இப்படிப்புகளுக்கான கட்டணமாக வசூலிக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களில் இந்திய கல்வி தொழில்நுட்பத் துறையில் பல்லாயிரம் கோடி தனியார் முதலீடுகள் வந்துள்ளன. சந்தை தரவுகளின் படி, கொரோனா காலத்தில் மட்டுமே 1.73 பில்லியன் டாலர் (13,172 கோடி) மதிப்பில் 36 கல்வி தொழில்நுட்ப (Edutech) நிறுவனங்களின் இணைப்புகள்(M&A) நடந்துள்ளன.

படிக்க :
♦ வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

மத்திய அரசினுடைய இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கான வழிகாட்டுதல்கள் கல்வி கடைச் சரக்காவதை மேலும், தீவிரபடுத்தியுள்ளதே தவிர UGC சொல்லிக் கொள்வதைப்போல உயர்கல்வியைப் பரவலாக்குவதற்காகவோ அல்லது மாணவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவோ இல்லை என்பதே எதார்த்தம்.

ஆகவே, மாணவர் நலங்களுக்கு எதிரான மாநில/பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கின்ற கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கின்ற, கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி வெளியிட்டுள்ள, UGC-ன் இந்த வழிகாட்டுதல்களை நாம் ஓரணியில் நின்று எதிர்த்தாக வேண்டும்.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு CCCE-TN