அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதைக் கண்டித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. இப்பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே பல கேள்விகளுக்கு உரிய சரியான பதிலை பல்கலைக்கழக நிர்வாகமோ மாநில அரசோ கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். குறிப்பாக,
1. எம்.டெக். பயோடெக்னாலஜி படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா? அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதா என்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, முறையான ஒப்புதல்களோ அல்லது அறிவிப்புகளோ இல்லாமலே முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்? – மாணவர்கள் கேள்வி எழுப்பியதனால் “மத்திய அரசின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாநில அரசு ஏற்றுக்கொள்ளாதால்” – மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழகம் விளக்கம் கூறியது. குறிப்பாக மாணவர்கள் நீதிமன்றம் சென்றதன் விளைவாகவே 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது. இதில் பல்கலைக்கழக நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
படிக்க :
♦ அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
2. அண்ணா பல்கலைக்கழகம் ஓரு மாநில பல்கலைக்கழகம். பல்கலைக் கழகத்திற்கான மொத்த நிதியும் மாநில அரசாலேயே வழங்கப்படுகிறது. மாநில அரசின் நிதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிதி என இரண்டும் சேர்த்துதான் ஒவ்வொரு ஆண்டும் இப்பல்கலைக்கழகத்திற்கு பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. மத்திய உயிரித் தொழில்நுடபத் துறையுடன் அண்ணா பல்கலைக்கழகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் இவ்விரண்டு எம்.டெக். படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இம்மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டுக்கும் சில லட்சங்களை மத்திய அரசு ஒதுக்குகிறது. மற்றபடி அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கூடவே UGC-ன் சமீபத்திய சுற்றறிக்கையானது மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துவிட்டது. இருப்பினும் 69 சதவிகித இடஒதுக்கீடு கைவிட்டு போனது ஏன்?
மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் போதிய ஆதாரங்களை முன்வைத்து உறுதியான வாதங்களை முன்வைக்காத காரணத்தினாலேயே 49.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. மாநில அரசும் பல்கலைக்கழகத் தரப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஏன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை?
இத்தீர்பின் மூலம் மிகவும் பிறபடுத்தப்பட்ட(MBC) பிரிவினர், பிற்படுத்தப்பட்ட–முஸ்லீம் பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான உள் ஒதுக்கீடுகள் அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து அவ்விடத்தில் வெளிமாநிலத்தவரையும் உயர்சாதியினரையும் கொண்டுவந்துள்ளனர்.
3. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் எம்.டெக் படிப்பிற்கான மாணவர் பட்டியலை 10 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக வெளியிட்டுள்ளது. இது குறித்து உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியும் பல்கலைக்கழக நிர்வாகம் மலுப்பலான பதிலையே தந்துள்ளது. 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து சிண்டிகேட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என சிண்டிகேட் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இவ்வளவு விதிமீறல்களோடு 10 சதவிகித இடஒதுக்கீட்டை துணைவேந்தரும் பதிவாளரும் ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும்?
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் உயர்சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. யாருடைய ஒப்புதலோடு இந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினர்?
மேற்சொன்ன விவரங்களிலிருந்து சில முடிவுகளுக்கு நாம் வரமுடியும். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இச்சிக்கலின் தொடக்கத்திலிருந்தே மத்திய அரசு ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசோ மாநிலத்தின் உரிமைக்காக போராடாமல் தங்களுடைய ஆட்சியின் நலன்களிலிருந்து சமரசமாகவே கையாண்டுள்ளனர். இதன் விளைவு, மாநிலப் பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீடுகளில் மத்திய அரசு தலையிடலாம் என்பதற்கு சட்ட அங்கீகாரத்தை இவர்கள் பெற்றுத்தந்தது.
***
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது தடைப்பட்டதிற்கு இடஒதுக்கீடே முதன்மைக் காரணியாக அமைந்தது எனலாம். தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு உத்திரவாதம் கொடுத்திருப்பதாகக் கூறிய எடப்பாடி அரசு பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான வேலையில் இறங்கியது. ‘சிறப்புத் தகுதி விதிகளின்படி மாநில இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது’ என சூரப்பா உறுதி கூறினார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களோ சிறப்புத் தகுதி கிடைத்தால் ஆயிரம் கோடி நிதி கிடைக்கும் உலகத்தரத்திலான ஆய்வுகளைச் செய்யமுடியும் என்று சிறப்புத் தகுதிக்கு பிரச்சாரம் செய்தனர். ஆனால் மத்திய அரசோ 69 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எந்தவித எழுத்துப் பூர்வமான உறுதியையும் அளிக்க முன்வரவில்லை. மேலும் சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளோ, ‘மத்திய அரசின் இடஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும்’ எனக் வலியுறுத்துகிறது. இதனை CCCE வெளியீட்டில் விரிவாக விளக்கியுள்ளோம்.
சட்ட ரீதியான வாய்ப்புகள் இருந்தும் எம்.டெக். படிப்புகளில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை கோட்டை விட்ட சூரப்பா, இடஒதுக்கீட்டுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாக உள்ள மத்திய அரசின் சிறப்புத் தகுதி கிடைத்தால் எவ்வாறு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்? இக்கேள்வி பலத்தரப்புகளிலிருந்தும் எழுப்பப்பட்ட பிறகும் கூட எடப்பாடியோ அல்லது பல்கலைக்கழகத் தரப்போ அதற்கு பதில் சொல்லத் தயாராக இல்லை.
உலகத்தரம் என்ற போர்வையில் சிறப்புத் தகுதியை ஆதரித்த பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர் எம்.டெக் பிரச்சனையில் வாய்திறக்கவில்லை. சூரப்பாவின் மீதான ஊழல் விசாரணையை கண்டித்தும் ரத்து செய்யக்கோரியும் அறிக்கை அம்புகளைத் தொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் எம்.டெக் இடஒதுக்கீடு பிரச்சனையில், மாணவர்கள் உதவி கோரியும், வாய் திறக்க மறுத்துவிட்டனர்.
உலகத்தரம், சிறப்புத்தகுதி, ஊழல்எதிர்ப்பு இறுதியாக மத்திய அரசு ஆதரவு இவைதான் இவர்களை இணைக்கும் புள்ளி. எனவேதான் இவர்கள் மாநில உரிமையையோ, சமூகநீதி கொள்கைகயையோ, இந்துத்துவ எதிர்ப்பையோ பெரிதாக கண்டு கொள்வதில்லை. இப்போக்குகள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தெளிவாகவே வெளிப்பட்டுள்ளன.
எம்.டெக். விவகாரத்தை சூரப்பாவும் எடப்பாடியும் கையாண்ட விதத்தை பார்க்கும் போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி கிடைத்திருந்தால் பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடமே ஒப்படைத்திருந்திருப்பார்கள் என்ற முடிவுக்கே வரமுடியும்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களை சமகால அரசியல் சூழலோடு இணைத்துப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்திய அரசினுடைய நிறுவனங்கள் அனைத்தும்(Government Institutions) பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. அவர்களின் முதல் தாக்குதலே உயர்கல்வி நிறுவனங்களிலிருந்துதான் ஆரம்பித்தன.
படிக்க:
♦ பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
♦ ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
பல்கலைக்கழகங்களை இந்துத்துவக் கொள்கைப்பிரச்சாரத் தளங்களாகப் பயன்படுத்தபடுவதோடு மட்டுமல்லாமல் தனியார்மயத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை ஆதரவு, மாநில உரிமைகள் பறிப்பு, ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர் இயக்கங்களை ஒடுக்குவது என தங்களுடைய பாசிச நடவடிக்கைகளையும் பல்கலைக்கழகங்களுக்குள் முன்தள்ளுகின்றனர்.
இதற்கு தகுந்த துணைவேந்தர்களும், பதிவாளர்களும், கவர்னர்களும் நியமிக்கப்படுகின்றனர். ஜே.என்.யு–வை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஜெகதீஸ் குமார் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா அவ்வளவுதான்.
சூரப்பா ஊழலற்றவர் என்ற வாதத்தின் மூலம் இடஒதுக்கீட்டு மற்றும் தமிழகத்திற்கு எதிரான அவரின் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. கடந்த மூன்று வருடகாலமாகவே துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையாக நடப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் பிஜேபி/ஆர்.எஸ்.எஸ் கடைக்கண் பார்வையில்லாமல் யாரும் துணைவேந்தர் ஆக முடியாத என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஊழலைவிட சமூகநீதியும் மாநில உரிமையும் பறிபோவது மிகவும் ஆபத்தானது.
ராஜன்
CCCE-TN