ல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு (EWS) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை (basic structure of Constitution) மீறவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார். நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பினால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.

நீதிபதி ரவீந்திர பட் தனது மாறுபட்ட தீர்ப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சினோ கமிஷன் அறிக்கையை சுட்டிக் காட்டி இருக்கிறார். அவ்வறிக்கையின்படி, நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.

இதில் தாழ்த்தப்பட்டோரின் (SC) எண்ணிக்கை 7.74 சதவீதம் ஆகும்; அதாவது அந்த சமுதாய மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். பழங்குடிகளில் (ST) 48 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 4.25 கோடி பேர். பிற்படுத்தப்பட்டோரில் (OBC) 33.1 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 13.86 கோடி பேர். பொது பிரிவினரில் (உயர் சாதிகளில்) 5.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்; அதாவது அந்த சமுதாய மக்களில் 18.2 சதவீதத்தினர். இந்தப் புள்ளிவிவரங்களை அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், நீதிபதி ரவீந்திர பட் “பொருளாதார ரீதியான பின்னடைவு தான் இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் முதுகெலும்பாக இருக்கும் போது இதில் பட்டியலினம், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதல்ல; அனுமதிக்கதக்கதும் அல்ல” என்றும் “சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி யு.யு. லலித் தனது தீர்ப்பினை வெளியிடாமல் நீதிபதி ரவீந்திர பட்டின் அவர்களின் தீர்ப்பை தான் முழுமையாக ஆமோதிப்பதாகக் கூறிவிட்டார்.

படிக்க: இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

மோடி அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. ஆனால், தீர்ப்பு வருவதற்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில், அதாவது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதே, மத்திய பல்கலைக்கழகங்களிலும் சில மாநில பல்கலைக்கழகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி நடைமுறைப்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கூறியிருந்தது. தற்போது மோடி அரசின் முடிவு சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் “இந்தத் தீர்ப்பு சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது” என்று கூறியுள்ளார். விசிக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகக் கூறியிருக்கின்றன. சிபிஐ கட்சியும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இட ஒதுக்கீட்டு பிரச்சினைகளை நீதிமன்றத்தில் தீர்த்து விட முடியாது என்றும் அரசியல் களத்தில் வைத்துத் தான் தீர்க்க முடியும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பாஜக அரசு தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், பொதுத்துறை நிறுவனங்கள் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க