கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 24,600 இடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. அதில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு (மேனேஜ்மென்ட் கோட்டா) அவர்கள் ஒதுக்கிய மொத்த இடங்களில் 135 இடங்கள் இ.டபிள்யு.எஸ் (EWS) எனப்படும் ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய’ பிரிவினருக்கான (‘உயர்சாதி ஏழை’களுக்கான) இட ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது.
இ.டபிள்யு.எஸ் இட ஒதுக்கீட்டின் விதிகளின்படி பார்த்தால் அதில் பயன்பெறுபவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆனால் மேற்குறிப்பிட்ட 135 மேனேஜ்மென்ட் கோட்டா சீட்களுக்கு அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் கோடிகளில் வருகிறது.
சான்றாக புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்.எஸ் ஆர்த்தோபெடிக்ஸ் படிப்பு முழுமைக்கும் ரூ. 1.6 கோடி வரை கல்விக் கட்டணம் இ.டபிள்யூ.எஸ் தேர்வாளருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 1.6 கோடியை மூன்று ஆண்டுகளுக்கு பிரித்துக் கொண்டால் ஆண்டிற்கு சராசரியாக 50 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டும். ஆண்டிற்கு 50 லட்சம் கட்டுபவர் எப்படி இ.டபிள்யூ.எஸ் இன் ஆண்டு வருமான வரம்பான “8 லட்சதிற்குக்கும் குறைவு” என்ற வரம்பிற்குள் வரமுடியும்.
அப்படி என்றால் இந்த EWS சான்றிதழ் மோசடியாக வழங்கப்படுகிறது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. இதை அந்த தனியார் கல்லூரிகளும் அங்கீகரிப்பதென்பது அந்த திருட்டில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்கிறது.
இதன் மூலம் EWS என்பதே மிகப்பெரிய மோசடி என்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது.
தகுதி திறமை என்னும் நாடகம்
நீட் தேர்வு என்பது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலானது என்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கிக் கும்பலும் அவர்களின் அடிவருடி ஊடகங்களும் இன்று வரை பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் தேர்வுத் தாள் மோசடி முதல் மதிப்பெண் மோசடி வரை நடைபெற்று நாடே இவர்களின் முகத்தில் காரி துப்பியது. அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்தாது தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் ‘உயர்’ சாதியினர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விட மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ இடங்களைப் பிடிப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அதற்கு வழி வகுத்ததும் இந்த இ.டபிள்யூ.எஸ் என்னும் மோசடிதான். இந்த மோசடியைத் தோண்டினால் தற்போது மேனேஜ்மன்ட் கோட்டாவில் மோசடி செய்து ‘உயர் சாதி ஏழைகள்’ சேர்ந்துள்ளதைப் போன்று இன்னும் பெரிய பூதங்கள் கிளம்பும்.
நீட் தேர்வு என்பதே மோசடியானது அது பல மோசடிகளை உள்ளடக்கியதுதான் என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதில் இவர்கள் தகுதி வாய்ந்தவர்களை திறமையானவர்களை உருவாக்கப் போவதாக நம்மிடம் வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். அவர்களை நம்புபவர்கள் நம்பாதவர்கள் அனைவருக்கும் மோசடி என்னும் கத்தி கழுத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நீட் என்ற மோசடியையும் இ.டபிள்யு.எஸ் என்ற மோசடியையும் சேர்ந்தே ஒழிப்போம். வாருங்கள்!!
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram