1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு மருத்துவக் கல்வியை அலட்சியப்படுத்தும், மாநில உரிமையை நசுக்கும் பாசிச பிஜேபி அரசின்  கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.

”நிகழாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணைய வழி மற்றும் நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் புறம்பானவை. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று சாம்பு சரண் குமார் அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.


படிக்க: நீட் எனும் மோசடித் தேர்வு: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர “0” மதிப்பெண் போதுமாம்!


இந்த உத்தரவால் நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர் இடங்கள் ஐந்தரை ஆண்டுகளுக்கு காலியாகவே இருக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும் காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கெனவே நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களை மோடி அரசு நிரப்பாமல் போட்டு வைத்துள்ளது. அத்துடன் இந்த 600 இடங்களும் சேர்த்து 2100-க்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு ஏற்கெனவே ஏழை, எளிய மாணவர்கள் எளிதில் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத நிலையை உருவாக்கிவிட்டது. நீட் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  பல லட்சங்கள் செலவிட்டால்தான் மருத்துவப் படிப்பு குறித்த கனவைக் கூட காண முடியும் என்ற நிலை உள்ளது.


படிக்க: நீட் தேர்வு: பிரபஞ்சன்களும் அனிதாக்களும்!


கல்வி, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட விசயங்களில் ஆணையங்களைக் கொண்டு வந்து மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு ஏற்கெனவே பறித்துவிட்டது. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றதால் மாநில அரசுகள் தங்கள் தேவைகளுக்கேற்ப சொந்தமாக முடிவெடுத்து அமல்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உரிமைகளைப் பறித்தது மட்டுமின்றி, தற்போது பல்வேறு விதிமுறைகளைக் காரணம் காட்டி மாணவர்களின் மருத்துவக் கனவை ஈவிரக்கமின்றி குழிதோண்டிப் புதைக்கும் வேலையை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழியாக ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பும் மாநில உரிமைக்கு எதிரானதாகவே உள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வந்து மாநில உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு இன்று மாநில உரிமைகளை அடியோடு பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க