07.02.2021
M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்
அண்ணா பல்கலைக்கழத்தின் உயிரிதொழில் நுட்பத் துறையில் 2020-21ம் ஆண்டிற்கான முதுகலைப் படிப்பு (M.Tech) மாணவர் சேர்க்கையை இடஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக நிறுத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கில் வரும் திங்களன்று எழுத்துப் பூர்வமாகப் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக் கழகத்திலுள்ள உயிரி தொழில்நுட்பத்துறை சார்ந்த முதுகலை படிப்புக்கான (M.Tech/M.Sc) மாணவர் சேர்க்கை அகில இந்திய நுழைவுத் தேர்வான JNU-CEEB-ன் மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்து வந்தது.
படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்
♦ ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !
இந்த ஆண்டு முதல் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின்(DBT) கீழ் இயங்கும் Regional center for Biotechnology(RCB) என்ற அமைப்பு நடத்துகின்ற GAT-B தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் மாணவர் சேர்க்கை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் நடத்திக் கொள்ளலாம் எனவும் RCB அறிவித்துவிட்டது.
ஆனால், மத்திய இடஒதுக்கீடான 49.5 சதவீதம் அடிப்படையில் சேர்க்கை நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ரூபாய் 12000/5000 மாத கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என RCB தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. மாநில அரசோ 69 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த சிக்கலை தீர்க்க முயற்சிக்காமல், இந்த ஆண்டிற்கான M.Tech மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக மாணவர் சேர்க்கைகான தேதி முடிந்த பிறகும் கூட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகம் வாய் திறக்கவில்லை. மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இப்பல்கலைக்கழகங்கள் M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையைக் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசினுடைய 49.5 சதவீதம் அடிப்படையிலேயே நடத்தி வந்துள்ளன. RCB-ன் இந்த ஆண்டு அறிவிப்பில் அந்தந்த கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. மேலும் UGC-யோ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்குப் பிறகும் இப்பல்கலைக் கழகங்கள் 49.5 சதவீதம் இடஒதுக்கீட்டையே அமல்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கூடவே 10 சதவீதம் EWS அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளன.
மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் இயற்றப்படும் மசோதாக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர் பணிநியமனங்கள் ஆகியவை அந்தந்த மாநிலங்களுடைய முழுமையான பங்களிப்பிலும் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலும் இயங்குபவை.
ஆனால், இப்பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.
யாருடைய ஒப்புதலோடு 49.5 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது?
முறையான அறிவிப்பின்றி இந்தாண்டு மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்?
தமிழக அரசு EWS 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. ஆனால் EWS கோட்டாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறமுடியும்?
இவை குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக உயர்கல்வித்துறையும் முறையான விளக்கம் தரவேண்டும்.
படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இடஒதுகீட்டை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துவதோடு, இம்மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். மேலும் அண்ணா பல்கலைகழக MTech உயிரிதொழிட்நுட்பப் பாடப்பிரிவில் நிறுத்தப்பட்டுள்ள இந்தாண்டு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடத்த வேண்டும்.
முகநூலில் இருந்து : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.