“இந்தியாவில் நிலவும் சகிக்க முடியாத ஏற்றத்தாழ்வுள்ள சமூகம் நீடிக்குமானால் ஒரு முதலாளித்துவ அமைப்புக் கூட வெடித்து சிதறிவிடும்” என்கிறார் ஆக்ஸ்பாம் இந்தியா தலைமை செயல் அதிகாரி அமிதாப் பெகர். ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் ”அசமத்துவம் பற்றிய அறிக்கை 2020” குறித்த விவாதத்தில் பத்திரிகையாளர் சன்ஜீக்தா பாசுவிடம் தெரிவித்த கருத்துக்கள் நேசனல் ஹெரால்டு இணையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறோம்.
000
சஞ்சுக்தா பாசு : பிரதமர் மோடி தனது பாராளுமன்ற உரையில் “செல்வங்களை சேர்ப்பவர்களையும் மற்றும் பெரும் செல்வந்தர்களாக இருப்பவர்களையும் அவர்கள் சொத்துகளை குவித்துக் கொள்கிறார்கள் என்பதற்காகவே குறை சொல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
அமிதாப் பெஹர் : எங்களது அறிக்கைகள் முகேஷ் அம்பானி போன்ற பில்லியனர்கள் பற்றி நிறைய பேசியிருக்கின்றன. நமக்கு தனிப்பட்ட முறையில் எந்த பில்லியனர்கள் மீதும் பிரச்சனைகள் இல்லை.
படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
அம்பானியும், அதானியும் தன்னளவில் ஒரு நல்ல மனிதராக இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் நமக்கு தேலையில்லை. ஆனால் நமது குற்றச்சாட்டு மோசமான ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பைப் பற்றியதுதான். இவ்வாறு உழைக்கும் மக்கள் குமுறும்போதும் மோடியின் மன்கிபாத் சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதை கவனிக்காமல் விடமுடியாது.
இந்த நாட்டில் மொத்த சமூகமே சேர்ந்து செல்வத்தை உற்பத்தி செய்யும்போது, உற்பத்தியாகும் செல்வங்கள் அதற்க்கேற்றவாறு எப்படிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது? நாம் இருக்கும் இந்த அமைப்பில் உற்பத்தியாகும் மொத்த செல்வங்கள் நாட்டு வளங்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அதிக சதவீதத்தில் குறைந்த அளவே இருக்கக் கூடிய மேல்மட்ட பணக்காரர்களுக்கு சென்று சேருகிறது.
உதாரணமாக, நமதுப் பொருளாதாரம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வளர்கின்றது என்று வைத்துக் கொண்டால் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கக் கூடிய மேல்மட்டப் பணக்காரர்களுக்கு 800-900 மில்லியன் அளவுக்கு அதன் பங்கை எடுத்துக் கொள்கின்றனர். மீதி இருக்கும் இந்த நாட்டின் 99 சதவிகித மக்கள் மிச்சம் மீதியாக இருக்கும் வெறும் 100 மில்லியன் டாலர்களையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
000
சஞ்சுக்தா பாசு : பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சேகர்குப்தா பிரதமரின் பேச்சை ஆதரித்து எழுதியிருந்தார். இந்தியா இன்னமும் செல்வ நிலையில் வளர வேண்டியுள்ளது. ஏனெனில், செல்வம் இல்லையெனில் நம்மிடம் இருக்கும் வறுமையைதான் சம்மாகப் பங்கு போட வேண்டியிருக்கும் என்று எழுதியிருந்தார்.
அமிதாப் பெஹர் : இங்கு அடிப்படையான கேள்வியே செல்வம் எப்படிப் பங்கிடப்பட வேண்டும் என்பதுதான். வறுமையைச் சம்மாகப் பங்கிடவேண்டும் என்பதுதான் நோக்கம் என்ற அவரது பார்வையை நான் ஏற்கவில்லை. 24 சதவீத இந்திய மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ.3,000-ற்கும் குறைவாக வைத்துக் கொண்டு வாழ்க்கைக்காகப் போராடும் நாட்டில் ஒரு மணி நேரத்தில் ஒரு தனிநபரால் ரூ.90 கோடி சம்பாதிக்க முடியும் என்பதை எப்படி அனுமதிப்பது?
உண்மையான பிரச்சனை என்னவெனில் உழைப்புக்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? மூலதனத்திற்கு எவ்வளவு மதிப்பளிக்கப்படுகிறது? என்பதுதான். மூலதனம் போடுவதாக சொல்லும் சிலர் 90 சதவீதம் பலனைப் பெறுகின்ற போது, அங்கே தனது உழைப்பைச் செலுத்தும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த அளவு ஊதியமும் எப்போதாவது தரப்படும் போனஸ் போன்றவைதான் சரியான விகிதாச்சாரமா?
அதனால், நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு நியாயமான விநியோக அமைப்புக்குதானே தவிர எல்லோரையும் ஏழைகளாக்குவது என்ற கற்பனையான கருத்துக்களுக்கல்ல.
000
சஞ்சுக்தா பாசு : அப்படியானால் சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் பிரச்சனை என்கிறீர்களா?
அமிதாப் பெஹர் : பல்வேறு வகைப்பட்ட “சுதந்திர சந்தைகள்” நிலவுகின்றன. ‘சுதந்திர சந்தைகளின்’ புனித்தலமாகக் கருதப்படும் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum -WEF) பங்கேற்கும் மிகப் பெரிய பில்லியனர்கள் கூட இந்த ஏற்றத்தாழ்வான சமசீரற்ற அமைப்பை சரி செய்ய வேண்டியிருக்கிற தேவை இருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். ‘பங்குதாரர் மூலதனத்திலிருந்து’ ‘பங்கேற்பாளர் மூலதனத்திற்கு’ மாறவேண்டிய தேவையை வலியுறுத்துகிறார்கள்.
உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரே, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காலம் முடிந்துவிட்டதாக சொல்கிறார். அமெரிக்காவில் ‘சுதந்திர சந்தை’ நிலவுகின்றனர். ஆனாலும், அங்கும் கூட வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு இயக்கங்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அந்த சமயத்தில், நான் அமெரிக்காவில்தான் இருந்தேன். வால்ஸ்டிரீட் அருகே அமெரிக்க மக்கள் “1:99 பொருளாதாரம் கதைக்குதவாது” என்ற முழக்க அட்டைகளைப் பிடித்திருப்பதைப் பார்த்தேன். IMF நிறுவனமும் ‘பெருமளவிலான சமச்சீரற்ற தன்மை இருக்கக் கூடாது’ என்கிறது.
நீடிக்க முடியாத அளவிற்கு சமமின்மையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அது சமூக ரீதியிலான அமைதியின்மையை வெளிப்படுத்துகிறது. உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த வேளையில் மக்கள் வாழ்வாதாரத்திற்காக குறைந்தபட்ச உணவுத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது தரவரிசையில் முதல் 10 இடத்திலிருக்கும் பில்லியனர்கள் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எந்த சந்தைப் பொருளாதார வகையாலும் நியாயப்படுத்த முடியாது.
இன்றைய பொருளாதார நடவடிக்கைகள் மூலம் செல்வம் படைத்தவர்கள் மேலும் மேலும் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும்போது மோசமான நிலையில் வாழும் மக்களின் நிலையோ மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது அல்லது மாற்றமே இல்லாமல் இருக்கிறது.
79 நாடுகளில் 295 தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டோம். அதில் சர்வதேச பொருளாதார வல்லுநர்களான ஜெயதி கோஷ், ஜெப்ரி சாக்ஸ் மற்றும் கேப்ரிஒயல் சக்மன் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் எல்லோரும், “நிலவுகின்ற இந்த தன்மையான பொருளாதாரம் அனுமதிக்கக் கூடியதல்ல. மேலும் இவை உலகிற்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாகும்” என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.
000
சஞ்சுக்தா பாசு : ‘நீடிக்க முடியாத’ சமசீரற்ற தன்மை என்று கூறுகையில் அதன் பொருள் என்ன ? பெரும் பணக்காரர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?
அமிதாப் பெஹர் : தனிப்பட்டரீதியில், என்னைப் பொறுத்தவரை இது அறவுணர்வு குறித்த கேள்வி. பத்து ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் வறுமைப் பற்றிய கணக்கீடுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், சமீபத்திய கணக்கீடுகளைப் பார்க்கும்போது 20-22 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதாகத் தெரிகிறது. அதுவும்கூட கல்வி, சுகாதாரம், இருப்பிடம் மற்றும் பல வாழ்வாதாரங்களை வைத்துக் கணிக்கப்பட்ட பலகோணங்களிலான வறுமைக்கோடு குறித்த கணக்கீடு என்று சொல்லமுடியாது.
15 ஆண்டுகளுக்கு முன் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி அறிக்கை (முறைசாரா தொழிலாளர்களின் வாழ்விடங்களில் வேலை மற்றும் முன்னேற்றம் பற்றிய நிலைமைகள் பற்றி) கூறியதென்ன? இந்தியாவில் 83 கோடியே 60 லட்சம் மக்களின் தனிநபர் நுகர்வு ஒரு நாளைக்கு ரூ.20-க்கும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மேம்பட்ட உலகத்தை படைப்பதற்காக சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கிறதாம். ஆனால், அவர்கள் உருவாக்க விரும்பும் மேம்பட்ட உலகம் இப்படித்தான் காட்சியளிக்குமா? இது ஒரு சமூக அல்லது அரசியல் ரீதியான கேள்வியும் கூட. இப்படிப்பட்ட இந்த அமைப்பு இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தையும், நீடித்த சமூகப் பதட்டத்தையும் மற்றும் உள்நாட்டு குழப்பங்ளையும் உருவாக்கவிருக்கிறது. இந்த அரசியல் அமைப்பு மட்டுமல்ல, நிலவுகின்றப் பொருளாதார அமைப்பு முறையும் கூட முற்றிலும் சிதைந்துவிடும்.
தீவிர இடதுசாரி சிந்தனையுள்ள சில நண்பர்கள் “இந்த சமூக ஏற்றத்தாழ்வு பற்றிய அறிக்கைகள் எல்லாம் உண்மையில் நிலவுகின்ற தங்களின் அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துப் போகக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை எச்சரிக்கை செய்யத்தான் உதவி செய்வதோடு, அதன் கொதிநிலையை தணியச் செய்வதற்குமே உதவும். சமச்சீரற்ற சமூக அமைப்பு இருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றும் ஆனால் மிக அதிகமான சமனற்ற சமூக அமைப்பு கூடாது என்றும் நாங்கள் கூறுவதாக எங்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த அமைப்பை இந்த பூமியினாலேயே தாங்கிக் கொள்ள முடியாது. உத்ரகாண்ட் மாநிலம், சமோலியில் சமீபத்தில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு, சுற்றுச் சூழல் சமநிலைக்கு எதிரான பாகாசுர வளர்ச்சித் திட்டங்களின் விளைவுதானே.
000
சஞ்சுக்தா பாசு : ஏற்றத்தாழ்வான சமசீரற்ற வளர்ச்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி சிந்தித்தீர்களா? பாலினம் சாதி மற்றும் மத சிறுபான்மையினர் இவர்களுக்குள்ளும்
அமிதாப் பெஹர் : இந்த அறிக்கையில், நீங்கள் சொல்லக் கூடிய அந்த வகை மக்கள் பிரிவினரை பற்றி தனித்தனியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், சமூகத்தின் மிக பலவீனமான நிலையிலுள்ள அந்த மக்கள் நிச்சயமாக மற்ற எல்லோரை காட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற முடிவுக்கு எளிமையாக வந்தடைய முடியும்.
முசுலீம்கள் அனைத்து சமூக பொருளாதாரக் குறியீடுகளிலும் பின் தங்கியிருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டி அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், இந்தப் பெருந்தொற்றில் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எங்களது அறிக்கைப்படி அமெரிக்காவில் வெள்ளை இன அமெரிக்கர்களின் மரண விகிதத்தின் அளவிற்கு கறுப்பின மக்களின் மரண விகிதம் இருந்திருக்குமானால் 22,000 கறுப்பின மக்களைக் கொடூரமான சாவிலிருந்து மீட்டிருக்க முடியும்.
பிரேசிலில் வசிக்கும் ஆப்பிரிக்க சந்ததியினர், வெள்ளைநிற சந்ததியினரை காட்டிலும் 40 மடங்கு அதிகமாக கொரோனாவிற்கு பலியாகியிருக்கிறார்கள். சமமின்மையைப் பொருத்தவரையில் பாலின மற்றும் இன ரீதியான பரிமாணம் தெளிவாக இருக்கிறது.
000
சஞ்சுக்தா பாசு : இந்த அமைப்புப் படுகுழியில் சிக்கி இருப்பதாக சொல்கிறீர்கள்? இதை யார் எப்படி மீட்டெடுக்கப் போகிறார்கள்?
அமிதாப் பெஹர் : மிகப்பெரும் பணக்காரர்கள் மற்றும் இந்த அரசு ஆகியோருக்கு இன்றைக்கு நிலவுகின்ற அபாயமான நெருக்கடிளை இயன்றளவு அப்படியே பிரதிபலித்துக் காட்டுவதன் மூலம் விழித்தெழச் செய்வதற்கான முயற்சிதான் இந்த அறிக்கை. மிகப் பெரும் பணக்காரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நியாயமான வரிகளை முழுமையாக கட்ட வேண்டும்.
‘வரி நியாய வலைப்பின்னல்’ என்ற அமைப்பின் ஒரு அறிக்கைபடி, உலக நாடுகளுக்கு வரியாக வர வேண்டிய வருமானம் கிட்டத்தட்ட 427 பில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பின் காரணமாக இழக்கப்படுவதாகக் கூறுகிறது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் என்ற பெயரில் நாட்டின் வருமானத்தை சூறையாடிக்கொண்டு வரி ஏய்ப்பு செய்வதற்காக புதிய புதிய வழிமுறைகளைக் கையாள்கின்றன.
வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களிடம் வசூல் செய்வதற்கான இன்னமும் திறன் வாய்ந்த வரி வசூல் அமைப்பை அரசு கொண்டிருக்க வேண்டும். பெரும் பணக்காரர்களிடம் “கோவிட் உப வரி” கட்டாயம் வசூலிக்க வேண்டும். அர்ஜென்டினா இதைச் செய்திருக்கிறது.
முன்னெப்போதும் கண்டிராத நெருக்கடி காலகட்டம் இது. மேலும் 40 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கியிருப்பதாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் – ஐ.எல்.ஓ. (ILO) எச்சரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் செல்வம் சேர்த்திருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். வரி வசூலைக் கட்டாயமாக்க வேண்டும்.
தமது மூலாதாரங்களை எந்தந்த துறைகளில் அரசு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. சமச்சீரான வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள், இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
கல்வி, சுகாதாரம் ஆகியற்றுவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதன் பலனாக மிக அதிக அளவில் அங்கு சமத்துவம் காணப்படுகிறது. இதற்கு மாறாக இந்தியா, சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்குவதில் உலக நாடுகளில் கடைக் கோடியிலிருக்கும் நாடுகளில் 4-வது நாடாக விளங்குகிறது. கல்வி, சுகாதாரம் இரண்டுக்கும் சேர்த்தே மொத்த ஜி.டி.பி.(GDP)யில் 5-6 சதவிதத்திற்கு மேல் ஒதுக்கீடு செய்ய முடியாமல் இருக்கிறது.
நமது நாட்டு மக்களுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையை உத்திரவாதபடுத்த நாம் “குறைந்தபட்ச ஊதியம்” என்பதிலிருந்து “வாழ்வதற்கான ஊதியம்” என்ற கட்டத்துக்குள் போகவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இந்த நாட்டின் உண்மையான நிலையை கொரோனா வைரஸ் பெருந்தொற்று அம்பலப்படுத்தியது.
இந்த நாட்டின் தொழிலாளர்கள் பெருமளவு முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை. அவர்கள், தங்கள் சொந்த கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கின்ற அவலத்தை நாம் பார்த்தோம். நம்மால் ஏன் இன்னும் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்போ வேலை உத்திரவாதமோ உறுதிபடுத்தி தரமுடியவில்லை ?
000
சஞ்சுக்தா பாசு : இம்மாதிரியான மாற்றங்களை உருவாக்கி முன்மாதிரியாக நடந்து கொண்ட நாடுகள் இருக்கின்றனவா?
அமிதாப் பெஹர் : குறிப்பாக, என்னால் சொல்ல முடியாது என்றாலும், நியுசிலாந்தைப் பாருங்கள். “வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை” என்றழைப்பதை “நலவாழ்வுக்கான நிதிநிலை அறிக்கை” என்று குறிப்பிடுகின்றனர். பில்லியனர்களை மட்டும் கணக்கில் கொண்டு போடப்படும் பட்ஜெட்டாக இல்லாமல், ஒவ்வொரு குடிமகனின் நலனையும் மையப்பொருளாக வைத்து பட்ஜெட் போடப்படுவது ஒரு அடிப்படையான மாறுதல் ஆகும். பூடானில் ஜிடிபி(GDP) இலக்கை அடைய அவர்கள் ஓடுவதில்லை. மொத்த மக்களின் மகிழ்ச்சிக் குறியீட்டு இலக்கை (Happiness Index) எட்டுவதை நோக்கமாகக் கொண்டு வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கின்றனர்.
அர்ஜென்டினாவில் பெரும்பணக்காரர்களுக்கு அதிகபட்ச வரிவிதிப்பு செய்யப்படுகிறது. தென்கொரியாவும், வியட்நாமும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்குப் போராடுவதையே தங்களின் திட்டங்களின் மையமாக வைத்துள்ளார்கள். இந்த பிரச்சனை குறித்து விழிப்படைந்த நாடுகள் இருக்கின்றன. அவை சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
000
படிக்க :
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !
சஞ்சுக்தா பாசு : இந்தியா விழித்துக் கொண்டதா?
அமிதாப் பெஹர் : உண்மையை சொல்வதென்றால், இந்த அரசாங்கத்திலோ அல்லது இதற்கு முன்னால் இருந்த அரசங்கங்களிடமோ இதற்கான எந்த நிகழ்ச்சி நிரலையும் பார்க்க முடியவில்லை. இன்றைய இந்தியாவில் இருக்கும் சமமின்மையின் அளவு, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த அளவிற்கு உச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி.
“1990 வரை இந்தியா நிதானமாக வறுமையை குறைத்துக் கொண்டு வந்தது. ஆனால், தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளி விரிவடைந்துக் கொண்டே போகிறது” என்கிறார் தாமஸ் பிக்கெட்டி.
000
தமிழாக்கம் : மணிவேல்
மூலக்கட்டுரை : National Herald
முதலாளிகளுக்கு எச்சரிக்கைவிடும் முதலாளித்துவ அறிவாளிகளின் ஆய்வுகளையும் கருத்துக்களையும் இடதுகள் ஏன் தூக்கிச் சுமக்கிறார்கள்? சாப சங்கல்பம் ஏதும் பாக்கி உள்ளதா?!