ந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்குவது, அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள 218 நிலக்கரி பிளாக்குகளில் 41 பிளாக்குகளை தனியாருக்கு கொடுப்பது, அதற்கு உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் ஆதிக்கம் புரியும் கார்ப்பரேட்டுகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது, அவர்களின் மூலம் ஆண்டுக்கு 225 மில்லியன் டன் உற்பத்தி செய்வது, அதன் மூலம் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 250 மில்லியன் டன் நிலக்கரியின் அளவை ஈடு செய்வது (மூச்சு முட்டுகிறதா) என்று “ஆத்ம நிர்மான் பாரத்” கூச்சல் போடும் மோடி அறிவித்துள்ள திட்டம் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும், நிலவும் போலி ஜனநாயக அரசமைப்பின் தோல்விக்கும் துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

ஊரடங்கு காலத்தில் மக்களிடம் பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமின்றி கமுக்கமாக ஏலத்தை நடத்தி முடித்து விடலாம் என்ற நோக்கத்துடன் முதலில் ஜூன் 11ம் தேதியை ஏல நடப்பு தேதியாக அறிவித்தார் மோடி. ஆனால் அவரது எண்ணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மண்ணள்ளிப் போட்டு, முகத்தில் கரியை பூசி விட்டார்கள்!

இந்த ஏல தேதிக்கு முதல் நாளான ஜூன் 10ம் தேதியன்று அகில இந்திய அளவிலான போராட்டம் நடந்தது. நிலக்கரி சுரங்கங்கள் உள்ள 8 மாநிலங்களில் 535 சுரங்கங்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றரை லட்சம் பேர் ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். இந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி CIL எனப்படும் கோல் இந்தியா லிமிடெட், SCCL எனப்படும் சிங்கரேணி கொலிரெஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தச் செய்திகள் அனைத்தும் ஊடங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டது.

இந்த சூழலில் மோடி ஜூன் 11 ஏலத்தை ஒத்திப் போட்டு விட்டார். ஏலத்தில் கலந்து கொள்ள தயங்கிய எஜமானர்களின் மனங்குளிர பல சலுகைகளை அறிவித்து தாஜா செய்து மறு வாரமே, ஜூன் 18ல் இ- ஏலத்தை துவக்கினார் மோடி. பழங்குடி மக்களின் வாழ்வு மலரும், 2.8 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு ஏற்பட்டு மின்னுற்பத்தி ஓகோ என உயரும் என்று வழக்கமாக சரடுகளை அள்ளிவிட்டார். ஆனால்  இவற்றினால் சுரங்க தொழிலாளர்களை ஏமாற்ற முடியவில்லை.

ஜூன் 10ம் தேதி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிந்தாலும், பின் வாங்காத மோடியின் திமிர்தனத்தை எதிர்த்து ஜூலை 2,3,4 என 3 நாட்கள் மீண்டும் சுரங்கத் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 5.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இதில் மைய தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு மற்றும் கங்காணி கூட்டமான ஆர்எஸ்எஸ்-சின் கீழ் செயல்படும் பிஎம்எஸ் என 5 மையசங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. அரசு பொதுத்துறை நிறுவனங்களான CIL மற்றும் SCCL நிலக்கரி நிறுவனங்கள்தான் நாட்டின் 92% நிலக்கரியை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றின் துணை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒரே மாதத்திற்குள் அடுத்தடுத்து, நாடு தழுவிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் இரண்டு வேலை நிறுத்தங்கள் நடந்தேறியுள்ளது. கொரானா கால ஊரடங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை.

படிக்க:
கழிப்பறை கட்ட துப்பில்லை ! ஸ்மார்ட் சிட்டியாம்… திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு !
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!

தோண்ட தோண்ட கரி! கொட்டுது கொட்டுது பணம்!!

நிலக்கரி சுரங்கங்களை பற்றி புரிந்து கொள்ள 1980ம் ஆண்டுகளில் வந்த காலா பத்தார் என்ற இந்தி படம் பார்த்தால் தனியார் சுரங்கம் எத்தனை கொடூரமான கொத்தடிமத்தனத்தைக் கொண்டது எனத் தெரியும். மிசா கால சாஸ்நல்லா சுரங்க விபத்தின் கோரம் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு, தனியார் சுரங்க கோரங்கள் பற்றி தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த அனுராக் காஷ்யப்பின் ‘கேங்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர்’ என்ற படமும் சுரங்கக் கொடூரங்களை மையப்படுத்தி வந்த படமே. இவற்றைப் பார்க்க முடியாதவர்கள் நம்மூர் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் கொத்தடிமைத்தனத்தை செய்திகளில் படித்திருக்கலாம் .

சங்கர் குகா நியோகி

உண்மையில் நிலக்கரி சுரங்க கொத்தடிமைத்தனம் என்பது மிகமிக கொடூரமானதும் அதில் நடக்கும் சுரண்டல் கொடுமை பூதாகரமானதுமாகும். இந்த சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய சங்கர் குகா நியோகி என்ற பிரபலமான தொழிற்சங்க தலைவர் படுகொலை செய்யப்பட்டது பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். அவரின் வழியில் சுரங்கத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடிய பெண் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் இன்று மோடியால் தன்னைக் கொல்ல சதி செய்ததாக பொய் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 விதமான கனிமங்கள் பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. இந்தியாவில் 3100 சுரங்கங்கள் உள்ளதாகவும் அதில் 550 நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்க பயன்படுவதாகவும், மற்றவற்றில் 560 உலோக சுரங்கங்களாகவும், 1990 உலோகமல்லாத சுரங்கங்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கவனியுங்கள்! அரசிடம் இது பற்றி துல்லியமான விவரம் கிடையாது.

1970-கள் வரை இந்த சுரங்கங்களில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை தனியாரிடமே இருந்தது. 1973ல் இந்திரா காந்தி பிரதமராயிருந்த போது நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அதன் பிறகு 1993 ல் அதே காங்கிரசு அரசே அரசாணை மூலம் பல சட்ட திருத்தங்களைச் செய்து தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கியது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேலும் தாராளமாக்கப்பட்டு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை எனக் கூறி இந்த நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன. பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் காலத்தில் நடந்த நிலக்கரி ஏல ஊழல்கள் ஊழல்களின் மகாராணி என்று அழைக்கப்பட்டது. சிஏஜி அறிக்கை மூலம் நாடு முழுதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘கோல்கேட்’ ஊழலின் பிரம்மாண்டம் 10.7 லட்சம் கோடி என்பதிலிருந்து நிலக்கரி சுரங்கம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதிலுள்ள யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் பராளுமன்றத்திற்கு அதே சிஏஜி அறிக்கை தந்தபோது ஊழலின் அளவு 1.82 லட்சம் கோடி என சுருங்கிப் போனது பற்றி எதிர்க்கட்சியான பா.ஜ.ககூட கேள்வி எழுப்பவில்லை. ஆனால் பா.ஜ.கவின் பினாமியான ஊழல் எதிர்ப்புக் கோமாளி அன்னா ஹசாரே போராட்டத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க கும்பல்.

இப்போது தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மிகவும் துணிச்சலாக இந்த ‘டோல்கேட்’ ஊழலையே சட்டப்படி செய்யத் தொடங்கியுள்ளது. சந்தேகமிருப்பவர்களுக்கு மோடியின் வீடியோ கான்பரன்சில் பங்கேற்றவர்களின் பெயரைப் பாருங்கள் – இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சங்கமான ஃபிக்கி (FICCI)-யின் தலைவர், வேதாந்தா, டாடா சன் குழுமம்… என நீள்கிறது. இதிலும் சந்தேகமிருப்பின் அவர்கள் கூறியதைக் கேளுங்கள்: “5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் மிகப்பெரும் அடிவைப்பு இது” – என்கிறது டாடா சன் குழுமம். ”இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்திருத்தம்” “நாட்டின் கனிம வளங்களைத் திறந்துவிட்டு, பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதோடு, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதற்கான கிரியா ஊக்கியாக இது அமையும்” – என்கிறார் ஃபிக்கி தலைவர்.

மன்மோகன் சிங் ‘கோல்கேட்’ ஊழலில் 100 நிலக்கரி தொகுதிகள் டாடா, ஜிண்டால், பிர்லா, எஸ்ஸார், அதானி, லான்கோ……..என பலருக்கும் ஒதுக்கப்பட்டதை நினைவில் கொண்டு தற்போது ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளின் நிலைமை என்ன ஆகும், யாரிடம் போகும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

பாரடா சுரங்கத்தின் பரப்பை! கேளடா அதன் கதையை!

1971 முதல் கட்டமாகவும் 1973ல் இரண்டாம் கட்டமாகவும் சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டது. இந்த சுரங்கங்களின் மூலம் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இந்தியாவின் தேசிய வருவாயில் சுரங்கத் துறை ஆண்டுக்கு 2.4% முதல் 2.7% வரை பங்களிப்பு செலுத்துகிறது. இதிலும் குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களின் மூலம் 2020 மார்ச் முடிய இருந்த முதல் காலாண்டில் 6,024 கோடி லாபம் கிடைத்துள்ளது. பொதுத்துறையான கோல் இண்டியா நிறுவனம் இதில் முக்கிய பங்களிக்கிறது. கோல் இண்டியா நிறுவனம் 2019ல் 607 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் நமது ‘தேச பக்தி’ கும்பல் மறைத்து நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவு அடைய தனியார் முதலீடு அவசியம் என்று சுதேசி பஜனை புரிகிறது. அதுமட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும், அதற்கு தேவையான நிலக்கரி உற்பத்திக்கும் தனியார் தான் ’ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன்’ எனவும் சதிராடுகிறது.

இந்த சதிராட்டங்களின் பின்னே முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார காரணம் உள்ளது. அதை போராடும் தொழிசங்கங்கள் பார்க்க மறுக்கின்றனர். 1990 களில் உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத் துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப் பட்டது. அந்த வழியில் தான் இப்போது பட்டவர்தனமாக 33,000 கோடி முதலீடு அதுவும் 100% அன்னிய முதலீடு அவசியம், அதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இதற்காகவே சர்வதேச டெண்டர் என்றெல்லாம் நியாயப்படுத்துகிறது மோடி கும்பல்.

ஆனால் மின்சாரத் தேவைகள் பற்றிய களநிலைமைகள் இன்று மாறி விட்டது எனக் கூறுகிறார் அரசு நிறுவனமான தேசிய காணுயிர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், சத்புதா பவுண்டேசன் என்ற சுற்றுச் சூழல் அமைப்பின் நிறுவனருமான கிஷோர் ரித் என்பவர். 2012ம் ஆண்டில் மின்சார தேவையானது உற்பத்தியை விட அதிகமிருந்தது. அதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் தனியார் பலரும் மின்னுற்பத்தி செய்ய அனுமதி கோரினர். பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் என்பதால் நிலக்கரி பயன்பாடும் அதிகரித்தது. ஆனால் இன்று மாற்று எரிசக்தி கொண்டு மின் உற்பத்தி செய்ய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராகி விட்டது. இந்த நேரத்தில் காலாவதியாகிப் போன முறையில் மின் உற்பத்தியில் இறங்கினால் லாபம் கொழிக்க முடியாது என்று கைவிட்டு விட்டனர். அதுமட்டுமின்றி 2020 மார்ச் 24ம் தேதிய நிலவரப்படி மின்தேவை 40% ஆக வீழ்ந்து விட்டது. இதனால் தான் அரசு எதிர்பார்த்த அளவு நிலக்கரி சுரங்கத் தொகுதி ஏலத்திற்கு பெரியளவு தனியார் முதலாளிகள் வரவில்லை. இந்த கொரோனா காலத்தில் முதலீடு செய்ய லாப உத்திரவாதம் உள்ள துறைகளையே கார்ப்பரேட்டுகள் தேடியலைகிறது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

’சுரங்க அனுபவம் இல்லாதவர்களும் டெண்டரில் பங்கேற்கலாம்; லாபம் உடனடியாக கிடைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ள சுரங்கங்களை ஏலம் விடுகிறோம்; என CILன் சொந்த அமைப்பான மத்திய சுரங்க திட்டம் & வடிவமைப்பு நிறுவனத்தை தனித்து, சுயேச்சையாக செயல்பட சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம் சுரங்க மற்றும் நிலக்கரி உற்பத்தியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்நிறுவனம் உதவும் என்று வேறு அறிவித்துள்ளனர். கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடும் வகையில் சுரங்க சட்டங்களில் 1992 முதல் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றி சில விவரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்

“நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரை வார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.

அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகை செய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.

93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.” (ஜூலை 5, 2012 வினவு-லிருந்து)

இப்போது மோடி அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் முழுக்க சுரங்கத்தில் 100% அன்னிய முதலீட்டுக்கு தடையற்ற அனுமதி மற்றும் உற்பத்தியை வணிக நோக்கில் பயன்படுத்த அனுமதி என ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தான் தேசத் துரோகம் என போராடும் நிலக்கரி சுரங்க சங்கங்கள் எதிர்க்கின்றன. இல்லை இது வளர்ச்சிக்கானது என மத்திய அரசு கூறுகிறது. யாருடைய வளர்ச்சி? கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி!

சட்டம் அதன் கடமையை செய்யாது! அரசியல் போராட்டமே விடிவை தரும்!!

இந்த சுரங்க ஏலங்களை எதிர்த்து சட்டப்பூர்வ வாய்ப்புகளை பயன்படுத்தலாமே என சில அறிவாளிகள் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைப் போல சில மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்துள்ளனர். பெரும்பான்மையாக ஆதிவாசி மக்கள் வாழும் ஜார்கண்ட் மாநில அரசு உச்ச நீதி மன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் முதல் பாயிண்ட்டாக ‘எல்லா அரசியல் சட்ட விதிகளுக்கு எதிராக, பரந்த நிலப்பரப்பில் சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து, இயற்கை, மக்களின் வாழ்வை தாராளமாக சூறையடிக் கொழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு தாராள அனுமதியளிக்கிறது இந்த ஏல அறிவிப்பு’ என்கிறது அதன் நீதிமன்ற மனு.

மேலும் முக்கியமாக அரசியல் சட்டத்தில் வரையறுத்துள்ள “ஷெட்யூல்ட் பகுதி”, வரம்புகள், மாநில உரிமைகள், பழங்குடி மக்களின் உரிமை, அடர்ந்த வனப்பகுதி, நிலச் சீர்திருத்த சட்ட விதிகள், தேசிய விலங்கான புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் பகுதி என பல அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏல நடவடிக்கையின் சட்ட விரோத தன்மைகளை எதிர்த்து மனு செய்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு. ஏறக்குறைய இதே போன்ற வாதங்களை முன்வைத்து மகாராட்டிர மாநிலம், மபி, சட்டிஸ்கர் என மாநிலங்கள் எதிர்த்து வழக்குகளைத் தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும், மின் உற்பத்தி கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்சு, அதானி பவர் உள்ளிட்ட கொள்ளைக் கூட்டத்தை பாதுகாப்பதையும், வோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சார்பான தீர்ப்புகளையும் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கையில்லை.

மக்களின் போராட்டங்களை கண்டு சிறிதும் பின் வாங்காத மோடி ஏல நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை. ஜூன் 18ம் தேதி ஏலம் நடப்பதற்கான துவக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஏலம் முடியவில்லை. ஏனென்றால் அப்போதும் அரசு எதிர்பார்த்த அளவு ஏலதாரர்கள் வரவில்லை. எனவே தனது கார்ப்பரேட் சேவையில் சிறிது மனம் தளராத மோடி ஆகஸ்டிலிருந்து ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளார்..

நிலத்தடி நீர் அரசுக்குச் சொந்தம் என விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என சட்டம் போட்டுள்ள இந்த அரசுதான், நிலத்திற்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் சொந்தம் என்ற அடிப்படை அரசியல் சட்டத்தைத் திருத்தி, அந்த கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததோடு, அதை தனது லாபமிக்க வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என கூவிக் கூவி நாட்டையே விற்கிறது. தேசபக்தி, சுய சார்பு பொருளாதாரம் போன்ற பித்தலாட்டங்களுக்கு முடிவு கட்டாமல் சுரங்கங்களை மட்டுமல்ல நாட்டையும் காப்பாற்ற முடியாது!

இதற்கு வழக்கமான சட்ட பூர்வ போராட்டங்கள், மொட்டை மாடி, அட்டை ஏந்தி போராட்டம், போலீசு அனுமதியுடன் அடையாளப் போராட்டம் போன்றவை உதவாது. ஸ்பெயினில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் போராடியதைப் போல போர்க்குணமுடன் போராடுவதும் சுரங்க தொழிலாளர்களின் போராட்டத்தை இதர பிரிவு பொதுத்துறை தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைப்பதும், அரசியல் ரீதியாக நாட்டை மறுகாலனியாக்காதே! என போர்க் குரலுடன் வீதிக்கு வந்து போராடுவதும் காலத்தின் கட்டாயமாகும். தொழிற்சங்கங்களின் பணி குறுகிய பொருளாதாரவாத அணுகுமுறையில் இருந்து விடுபட்டு நாட்டையும் மக்களையும் காக்கும் போராக மாற வேண்டும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க