திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 39-வது வார்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கார் உடைக்கும் கூலித் தொழிலாளர்கள். இங்கு போதிய இடவசதி இல்லாததால் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு போதிய இட வசதியோ, பணமோ இல்லாதவர்கள். பொதுக்கழிப்பிடமும் இல்லாத காரணத்தால் ஆண், பெண் அனைவரும் அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். மழைக்காலங்களில் நோய்த்தொற்றுக்கும் உள்ளாகிறார்கள்.

மேலும் இப்பகுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க வருபவர்கள் இப்பகுதி பெண்களிடம் குடித்து விட்டு தவறான முறைகளில் நடந்து கொள்கிறார்கள். இது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்ற சுகாதாரப் பணிகளை செய்வதில்லை.

இப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் இப்பிரச்சினை குறித்து பொது மக்களிடம் பேசி பொதுமக்கள் சார்பாக அருகில் உள்ள கோட்ட அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. “பொது கழிப்பறை கட்டுவதற்கு தற்போது மாநகரட்சியில் பணம் ஒதுக்கவில்லை. வேண்டுமானால் தனி நபர் இல்ல கழிவறை கட்டித்தருவதாக” மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். “தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கான போதிய இட வசதி இல்லாத காரணத்தால்தான் பொதுக் கழிப்பறை வேண்டும் என்கிறோம்” என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இந்திரா நகர் பகுதியில் குளியளறையுடன் கூடிய பொதுக்கழிப்பிடம் அமைப்பதற்கு போதிய நிதி ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் நேற்று (09.07.2020) மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் லெ.செழியன் தலைமையில் பகுதி மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் பெயரில் மாநகராட்சியின் மைய    பகுதிகளில் அலங்கார விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சாலையோர பூங்காக்கள், நடைபாதையை அலங்கரிப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களில் செய்யப்படுகிறது. அதுவே சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை கூட செய்துகொடுக்க மறுக்கிறார்கள் அல்லது அதற்காக பெரும் போரட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. அப்படி தொடர்ச்சியாக வழியுறுத்தியதன் பின்புதான் தற்போது மின் விளக்குகளும், தண்ணீர் குழாய்களும் சரி செய்யப்பட்டுள்ளது. தனிநபர் கழிப்பறை கட்டவோ மக்களிடம் இடம் இல்லை. அதிகாரிகளிடமோ பொது கழிப்பறை என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் தூய்மை இந்தியா. “நல்லா இருக்கு திட்டமெல்லாம் எழுதி வச்சு நக்க சொன்னான்…” எனும் ம.க.இ.க பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க