மதுரை மாநகராட்சியுடன் மதுரை சுற்று வட்டார ஊராட்சிகள் மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி இணைப்பு!
மதுரை மாநகராட்சியுடன் ஊராட்சி மன்றங்களை இணைப்பதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை (நிலை) எண்: 201 மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் கடித எண் : 2044/2024/அ2. நாள்: 21/12/2024 கடிதத்தின் படியும் 31/12/2024 அன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, கருப்பாயூரணி, நரசிங்கம், காதக்கிணறு, அரும்பனூர் (பகுதி), கொடிக்குளம் (பகுதி), செட்டிக்குளம், கோவில்பாப்பாக்குடி, ஆலாத்தூர், பேச்சிக்குளம், விரகனூர், நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய 16 ஊராட்சிகளும், பரவை பேரூராட்சியும் மாநகராட்சியாக அமைய உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஊராட்சிகள் மாநகராட்சியாக மாறினால்,
1.100 நாள் வேலை ரத்து செய்யப்படும்,
- வீட்டு வரி, குழாய் வரி பல மடங்கு உயரும்,
- சொத்து மதிப்பு உயர்வதோடு இல்லாமல் வியாபாரிகளின் கடை வரி மற்றும் பத்திரப் பதிவு கட்டணம் பல மடங்கு உயரும்,
- வீடுகள் கட்ட கட்டிட அனுமதி உயர்த்தப்படும்,
- ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படுவர்,
- ஊராட்சிக்கு கிடைக்கப்பெறும் மத்திய அரசின் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும்.
ஊராட்சிகள் மாநகராட்சியாக மாறுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகள் மக்களுக்குச் சுமையாக அமையும் என்பதால் ”வேண்டாம் மாநகராட்சி வேண்டும் ஊராட்சி” என்று யானை மலையான் வணிகர் சங்கம் மற்றும் இராஜ கம்பீரம் – ஒத்தக்கடை ஊராட்சி மக்கள் சுவரொட்டி அடித்து நகரம் முழுவதும் ஒட்டி தங்களது எதிர்ப்புணர்வை காட்டியுள்ளனர். மேலும் மதுரையில் கோவில்பாப்பாக்குடி மக்களும் மாநகராட்சி வேண்டாம்” என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஊராட்சிகளைப் பொறுத்தவரை, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 100 நாள் வேலைக்குச் சென்று வருவது, ஊராட்சியில் இலவச வீடு கட்டிக் கொடுப்பது, மத்திய மாநில அரசுகளின் நலத் திட்டங்கள், மானியங்கள் போன்றவை மக்களுக்குக் கிடைத்துவரும் நிலையில் எதற்காக மாநகராட்சி என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 100 மாநகராட்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று ஒப்பந்த அடிப்படையில் வணிக வளாகம், காய்கறி மார்க்கெட் அமைத்து வருவதும், தண்ணீரை தனியார்மயப்படுத்துவதற்கு பிரெஞ்சு கார்ப்பரேட்டு நிறுவனமான சூயஸ்-க்கு தாரை வார்ப்பது என கோவையில் எடப்பாடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டதும் மதுரையில் குடிநீரைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் செயல்படுவதும், மாநகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி, குப்பை வரி, பாதாளச் சாக்கடை வரி, பத்திரப் பதிவு கட்டணம் அதிகமாக இருப்பதும் மக்களுக்குச் சுமையாக இருக்கும் என அபாயம் உள்ளதாலும், இதனால் மக்கள் மேலும் வாழ்வாதாரத்தை இழந்து கடன் நெருக்கடியில் சிக்க வைப்பதும் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதுமே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே மாநகராட்சியில் குடிநீர் சரியாக வருவதில்லை, பாதாளச் சாக்கடை முறையாக கிடையாது, சாலை வசதி கிடையாது, மழைக்காலம் வந்தால் மழைநீர் வெளியே செல்வதற்கு எந்தவிதமான ஓடைகளும் கிடையாது, மாநகராட்சி சுகாதாரமாக இல்லாமல் இருப்பது என மாநகராட்சி மக்களே புலம்பி வருகின்றனர். ஒருபக்கம் வரி வசூலித்து மாநகராட்சி நிர்வாகம் கொள்ளையடிக்கவும் இன்னொருபக்கம் வணிக வளாகம், பாதாளச் சாக்கடை, காய்கறி மார்க்கெட், குடிநீர் போன்றவற்றை ஒப்பந்தம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்து வருகிறது.
ஊராட்சியினை மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாநகராட்சியில் வரி வசூலித்துக் கொள்ளையடிப்பதும் கார்ப்பரேட் நலனும் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசின் கொள்ளைக்கு எதிராகவும் தனியார்மயத்திற்கு எதிராகவும் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் மக்களுக்கு விடிவில்லை!
மக்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram