தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகளுடன் 158 நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளை இணைக்க கடந்த ஜனவரி 1 அன்று தி.மு.க. அரசு உத்தேச உத்தரவைப் பிறப்பித்தது. இது மக்கள் மீது வரி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை என எதிர்ப்பு தெரிவித்து, இந்த உத்தேச உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பன் ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான உத்தரவு தி.மு.க. அரசால் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மையப்பன் ஊராட்சியைச் சேர்ந்த ஓச்சேரி, ஆலங்குடி, வடபாதி, தென்கால், எலங்குடி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நடவடிக்கையால் தங்கள் மீது வரிச் சுமை ஏற்றப்படுவதுடன் நூறு நாள் வேலைத் திட்டம் பறிபோய் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் எதிர்க்கின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 8 அன்று அம்மையப்பன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக 300-க்கும் அதிகமான மக்கள் கூடி இந்த உத்தரவைத் திரும்பப்பெறுமாறு முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, 2024 டிசம்பர் 31 அன்றே இந்த உத்தரவைத் திரும்பப்பெறும்படி எலங்குடி கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மையப்பன் கிராம மக்களின் இத்தொடர் போராட்டத்தில் திருவாரூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் தட்டாங்குட்டை ஊராட்சியை இணைத்தால் விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாக மாறிவிடும் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி உயர்ந்துவிடும் எனவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள் கருத்து தெரிவிக்கையில், “இந்நடவடிக்கையால் தங்களது தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. நிர்வாக வசதி என்று பார்த்தாலும் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சியுடன் இணைப்பதனால் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளை அணுக முடியாத சூழல் உருவாகிறது. எனவே தட்டாங்குட்டை ஊராட்சி தனி ஊராட்சியாகவே நீடிக்க வேண்டும்” என்றார்.
போராடிய மக்களுடன் போலீசு சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் அமைதி வழியில் போராடிய 200-க்கும் மேற்பட்ட மக்களை போலீசு கைது செய்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சியைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் நல்லூர் ஊராட்சியானது அதன் அருகில் உள்ள பாடியநல்லூர் ஊராட்சியுடன் இணைக்கப்பட்டு பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பறிபோகும் என்றும் இத்திட்டத்தால் தங்கள் பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், வீட்டு வரி, சொத்து வரி, கட்டண வரி உள்ளிட்ட வரிகளும் கட்டணங்களும் பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது ஊராட்சியை பாடியநல்லூர் ஊராட்சியுடன் இணைக்கக் கூடாது எனவும் தங்களின் ஊராட்சியின் பெயரிலேயே பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.
அதேபோல், திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் ஊராட்சியின் 15-வது வார்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் வரி உயர்வு ஏற்படும், நூறு நாள் வேலை பறிபோகும் என எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், வெங்கத்தூர் ஊராட்சியின் 15-வது வார்டை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில், லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளக்குடி, அப்பாதுரை உள்ளிட்ட ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்டம் கைவிடப்படும் என்பதாலும் அதிகளவில் வரிக்கட்ட வேண்டும் என்பதாலும் மக்கள் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று (10 ஜனவரி 2024) 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராம மக்கள் தங்களது கால்நடைகளுடன் திருச்சி லால்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களை முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 500-க்கு மேற்பட்ட மக்கள் இப்போராட்டத்தில் திரண்டதால் அப்பகுதியில் போலீசு குவிக்கப்பட்டது. “வேண்டாம் வேண்டாம்; நகராட்சி வேண்டாம்”, “எம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கைவைக்காதே” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முழக்கமிட்டனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி கிராம மக்கள் தங்கள் ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவை மட்டுமின்றி தி.மு.க. அரசின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசோ தற்போதுவரை மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து உத்தரவைத் திரும்பப்பெறவில்லை.
எந்தவித வரைமுறையும் முறையான திட்டமுமின்றி, ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் மாற்றி அதன் மூலம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதே தி.மு.க. அரசின் நோக்கமாக உள்ளது. ஏற்கெனவே, பாசிச மோடி அரசின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மக்கள் தலையில் வரிச் சுமைகளை ஏற்றி வருகிறது தி.மு.க. அரசு. இந்நிலையில், இந்த உத்தரவு மக்களின் வரிச் சுமையை மேலும் அதிகரிக்கும்.
ஆளும் தி.மு.க. அரசானது ஒன்றிய மோடி அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய வரியை முறையாகப் பெறுவதற்குப் போராடுவதை விடுத்து, நலிவுற்ற மக்களிடம் வரிக்கொள்ளையில் ஈடுபடுவதென்பது, அப்பட்டமான பார்ப்பனிய அடிமை சிந்தனையாகும்.
மேலும், இந்நடவடிக்கையின் மூலம் நூறு நாள் வேலைத்திட்டத்தை மட்டுமின்றி விளைநிலங்களையே கொள்ளையிடுவது தி.மு.க. அரசின் முக்கிய நோக்கமாகும். தி.மு.க. ஆட்சிக்கும் வந்தபிறகு தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதும் நகரமயமாக்கலும் மிகத் தீவிரமாக நடந்தேறி வருகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் அல்லாத பிற ரியல் எஸ்டேட், கர்ப்பரேட் தேவைகளுக்காக விற்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு தி.மு.க-வின் கார்ப்பரேட் நலக் கொள்கையே முக்கியக் காரணமாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்காக நிலங்களை வரைமுறையின்றி கையகப்படுத்துவதற்காக நில ஒருங்கிணைப்பு சிறப்புச் சட்டத்தையும் தி.மு.க. அரசு கொண்டுவந்தது. பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கிராமப் பகுதிகளையும் விளைநிலங்களையும் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டம் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடி வருவது இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும்.
இதன் அடுத்தகட்டமாகவே தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அம்பானி-அதானிகளுக்கு இந்திய நாட்டையே படையலிடும் பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தி.மு.க. பா.ஜ.க. வழியிலேயே கார்ப்பரேட் சேவையில் ஈடுபடுகிறது, மக்களை தங்களது நிலங்களிலிருந்து விரட்டியடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அகதிகளாக்குகிறது.
இதற்கு எதிராக, தங்களது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளச் சொந்த முறையில் களத்தில் போராடிவரும் மக்களுக்கு நாம் துணைநிற்க வேண்டும். பா.ஜ.க-வை எதிர்க்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தி.மு.க-வின் இந்த அப்பட்டமான மக்கள் விரோதத் தன்மைக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இத்தகைய இருமுனை போராட்டம் தற்போதையச் சூழலில் பாசிச எதிர்ப்பில் அவசியமானதாகும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram