தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் !
ண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப்  பதவியேற்றுள்ள பேரா. வேல்ராஜ் பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில் ‘கலவை கற்றல்-கற்பித்தல் (Blended Teaching and Learning) முறையும், இரண்டு வகையான பொறியியல் பாடதிட்டமும் கொண்டுவரப்போவதாக தெரிவித்துள்ளார்.
கலவை கற்றல்-கற்பித்தல் முறையைப் பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு பாடத்தில் புலமை பெற்ற 4 அல்லது 5 பேராசிரியர்களைக் கொண்டு பாடம் எடுக்கப்பட்டு அது பதிவு செய்யப்படும். அந்த வீடியோவை மற்ற பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்குவார்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘பொறியியல் படிக்கும் மாணவர்களில் 20% மாணவர்களால்  மட்டும்தான் பாடத்தினை புரிந்து கொள்ள முடிகிறது மீதமுள்ள 80% மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்பதால் 20% மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமும் (இது முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி) 80% மாணவர்களுக்கு மற்றொரு பாடத்திட்டமும் (திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு) கொண்டுவரப்படும்’ என்று கூறியுள்ளார்.
படிக்க :
UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE
மே மாதத்தில் கலவை கற்றல் முறை (Blended Learning-BL) பற்றிய அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (UGC) வெளியிட்டு அதன்மீது கருத்து கேட்டிருந்தது. அதில் ஒரு பாடத்தில் 30 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகித வகுப்புகளை இணைய வழியில் (online) நடத்தலாம் என்றும் மீதமுள்ள வகுப்புகளை மரபு வழியான (face to face) முறையில் நடத்தலாம் என்றும் வழிகாட்டியிருந்தது.
மேலும், பல்கலைக்கழகங்கள் இணையவழிக் கற்பித்தலுக்கான பாடங்களைத் தயாரித்துக் கொள்ளவதற்கான பொதுவழிகாட்டுதலையும் (IPSIT model) கொடுத்திருந்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த வழிக்காட்டுதலுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பல ஆசிரியர் அமைப்புகளும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இணையக் கட்டமைப்பு இல்லாமை, இத்திட்டத்திற்கு பின்னாலுள்ள தனியார்களின் லாபநோக்கம், ஆசிரியர்களின் வேலையிழப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர் சங்கங்களும், CCCE உள்ளிட்ட பல உயர்கல்வி அமைப்புகளும் கலவை கற்றல்-கற்பித்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கல்வி தொடர்பாக வந்துள்ள பல அறிக்கைகள் (NSSO report, USDIE report, Azim premji University report  மற்றும் பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகள்) இணைய வழியிலான கற்றல்-கற்பித்தலின் வழியே, வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடிகிறதென்றும், சமுதாய – பொருளாதார நிலையில் பின்தங்கிய, கிராமப்புற, விவசாய பின்புலத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களால் கல்வியை சரிவர தொடர முடியவில்லை என்றும் நிரூபித்திருக்கின்றன.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய இணையவழித் தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வியடைந்தற்குக் கூட இணையக் கட்டமைப்பு போதாமையும் ஒரு காரணமாக பேசப்பட்டது.
இணையவழிக் கற்றல் முறையின் பாதிப்புகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இருந்தும், துணைவேந்தர் கலவை கற்றல்-கற்பித்தல் முறையை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறுவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
‘பொறியியல் படிக்கின்ற மாணவர்களுக்கு பாடங்கள் புரிவதில்லை, திறமையானவர்களாக இருப்பதில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் கடந்த பத்தாண்டுகளாகவே குறிப்பாக திறன் மேம்பாட்டு (Skill development) அறிவிப்புகளுக்குப் பிறகு பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பான்மை மாணவர்களுக்கு பொறியியல் பாடங்கள் புரியாமல் இருப்பதற்கும், துறை சார்ந்த திறமைகள் எதிர்பார்க்கின்ற அளவிற்கு இல்லாமல் போனதற்கும் காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த மேதைகள் வாய்திறப்பதில்லை.
பல்கலைக்கழகங்களின் ஊழல் முறைகேடுகள், கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்ட தனியார் கல்லூரிகளுக்கு முன்னுரிமை, தகுதியற்ற ஆசிரியர்கள் நியமனங்கள், குறைந்த சம்பளத்திற்கும் மோசமான பணி சூழலிலும் வேலைச் செய்யும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள், ஆய்வகங்கள் உள்பட போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் ஆகிய காரணங்களை, மாணவர்களின் பொறியியல் திறமைக் குறைபாடுகளுக்கான பிரதானக் காரணிகளாகக் கூறலாம்.
பொறியியல் கல்லூரிகளை கண்காணிக்கும் AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழகமோ, இப்பிரச்சனைகளைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், உயர்கல்வித் துறை அதிகாரிகளோ அல்லது கல்விச் சந்தையின் லாபத்தினால் வழிநடத்தப்படும் ‘கல்வியாளர்களோ’ மாணவர்களைக் குற்றஞ்சுமத்துகிறார்கள். துணைவேந்தரோ பாடத்திட்டத்தினை பிரிப்பதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்ற தீர்வை முன்வைக்கிறார்.
கடந்த முப்பதாண்டு கால தனியார்மயக் கொள்கைகளின் விளைவால் பணம் உள்ளவனுக்கே தரமான கல்வி என்ற நிலை எதார்த்தமாகியுள்ளது. கூடவே சமூக – பொருளாதார நிலைமைகளில் மிகவும் ஏற்றத்தாழ்வான இந்திய சூழலில் இரண்டு வகையானப் பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதென்பது மேற்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பென்பது ஒரு சாராருக்கும், பொறியியலின் அடிமட்ட வேலைகள் மற்றொரு பிரிவினருக்குமானது எனும் பிரிவினையையே ஏற்படுத்தும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ள இரண்டு திட்டங்களுமே உயர்கல்வி குறித்து NEP-2020 அறிக்கையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரதான வழிகாட்டுதல்களாகும் (Skill based training, vocationalisation of education, online education, ODL). தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு அமல்படுத்தப் போவதில்லை என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கூடவே, மாநிலத்திற்கு என தனியான கல்விக் கொள்கையை உருவாக்கப்போவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
படிக்க :
தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவிப்பு மாநில அரசின் நிலைப்பாடிற்கு எதிராக உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுபோல சுயசார்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கான பாடத்திட்டத்தினை கொண்டு வருவதையும் நாம் வரவேற்கிறோம். ஆனால், பொறியியல் கல்வியின் தரத்தினை மேம்படுத்த தடையாக உள்ள மேற்சொன்ன பிரச்சனைகளை களைவதற்குப் பதிலாக தொழில்நுட்பத்தையும் பாடத்திட்டத்தையும் தீர்வாக முன்னிறுத்துவது சிக்கலை இன்னும் ஆழப்படுத்தவே செய்யும் எனக் கருதுகிறோம்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு CCCE-TN

1 மறுமொழி

  1. நல்ல கட்டுரை..! இது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க