த்திய அரசு அக்டோபர் 12 ஆம் தேதி சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணைய (சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல்) ஒழுங்குமுறைகள், 2022 என்ற தலைப்பில்  இந்திய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி சர்வதேச கிளை வளாகங்கள் (International Branch Campuses – IBCs) மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்கள் (Offshore Education Centres – OECs) குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள Gujarat International Finance-Tec City-யில் (GIFT City) அமைக்கப்பட உள்ளன.

இதன்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிஃப்ட் சர்வதேச நிதி சேவைகள் மையத்தில் (GIFT International Financial Services Centre) தங்கள் சர்வதேச கிளை வளாகங்களை (IBCs) அமைத்துக் கொள்ளலாம். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லாத கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு கல்வி மையங்களை (OECs) கிஃப்ட் சிட்டியில் அமைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உலகத் தரத்திலான கல்வியை அளிக்கப் போகிறார்களாம்.

இந்தியாவில் வளாகத்தை (IBC) அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் நிதி நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் QS உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (QS World Universities ranking) முதல் 500 இடங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆனால் வேடிக்கையாக, இவ்விதிமுறைகளின்படி, OEC-களை அமைக்கும் நிறுவனம் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; பெயரளவிற்கு ஏதாவது ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலே போதுமானது.

படிக்க: உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !

இந்த வளாகங்கள் நிதி மேலாண்மை, ஃபின்டெக் (fintech), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்கிக் கொள்ளலாம். மேலும், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் என்னென்ன பாடத்திட்டங்களை வழங்குகின்றனவோ அதையேதான் இங்கும் வழங்க வேண்டும்.

பொதுவாக ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது வளாகத்தை அமைக்க முற்பட்டால், சில முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அதை செய்ய முடியும். குறிப்பாக கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு, இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுடன் லாப நோக்கற்ற நிறுவனமாகவும் (not-for-profit entity) அது இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், லாபம் ஏதாவது இருப்பின் அதனைத் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தங்களுக்கு விருப்பமான கல்விக் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் வழங்கி இருக்கிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission – UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education – AICTE) ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டியதும் இல்லை; குஜராத்தின் காந்திநகரை தலைமை இடமாகக் கொண்ட சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (International Financial Services Centres Authority – IFSCA) தான் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற உயர்கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. அவை தொடர்ந்து நமது பிள்ளைகளை புறக்கணித்து வரும் கொலைநிலங்கலாக இருக்கின்றன. எந்தவித கட்டுப்பாடும் அற்ற IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு யாருக்காக சேவை செய்யும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

படிக்க: புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

சர்வதேச நிதி சேவைகள் மையம் (IFSC) என்பது சிறப்பு பொருளாதார மண்டல சட்டம், 2005-இன்கீழ் (Special Economic Zone Act, 2005) அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) என்பது தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கையின் கீழ் அமைக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் குட்டி காலனியாகும். கல்வித்துறையை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முழுமையாக அர்ப்பணிக்கும் நடவடிக்கைகளின் அடுத்தகட்ட நகர்வே இந்த கிஃப்ட் சிட்டி!


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க