வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

0

தேசபக்தியை வளர்க்க புராணக் குப்பைகளாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று சமூக அறிவியலுக்கான பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க அமைக்கப்பட்டிருக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சின் (NCERT) உயர்மட்டக் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இது குறித்த செய்தி நவம்பர் 21 அன்று வெளியாகியுள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) என்.சி.இ.ஆர்.டி பாடப் புத்தகங்களை புதுப்பிக்க அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு தான் தற்போது 7-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதத்தை சேர்க்க வேண்டும் என்று ஒரு முட்டாள்தனமான பரிந்துரையை வழங்கியுள்ளது.

மேலும், வேதங்கள் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பான பாடங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை ஆண்ட அனைத்து பேரரசுகள் குறித்த தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய என்.சி.இ.ஆர்.டி-யின் சமூக அறிவியல் குழுவின் தலைவர் பேராசிரியர் சி.ஐ.ஐசக், “தேசப்பற்று இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை பெறுகின்றனர். எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்துகொள்வதற்கும், தங்கள் நாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் அன்பை வளர்ப்பதற்கும் இந்த மாற்றங்கள் அவசியம். இப்போது சில கல்வி வாரியங்கள் மாணவர்களுக்கு ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கற்பித்தாலும், அதை ஒரு கட்டுக்கதையாகவே அவர்கள் கற்பிக்கின்றனர். இந்தக் காவியங்களை மாணவர்களுக்குக் கற்பிக்காவிட்டால் கல்வி முறையே நோக்கமற்றதாகிவிடும்; அது தேசத்திற்கு சேவை செய்யாது” என்று கூறியுள்ளார்.

பேராசிரியர் சி.ஐ.ஐசக்-இன் கூற்று, என்.சி.இ.ஆர்.டி-யின் உயர்மட்ட குழுவானது ஆர்.எஸ்.எஸ்-இன் காவி பாசிச சித்தாந்தத்தில் ஊறிப்போனவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை கட்டுக்கதைகள் என்று சொல்லி கற்பிக்கிறார்கள் என்று இவர் வருத்தப்படுகிறார். அவற்றை வரலாறாக மாற்ற வேண்டும் என்றும் விரும்புகிறார். இது இவரது விருப்பம் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலின் விருப்பம்.

ஆனால், எதார்த்தத்தில் இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

இப்புராணங்கள் சாதியை – வர்ணாசிரம (அ)தர்மத்தை உயர்த்திப்பிடிப்பவை. பார்ப்பன மேன்மையையும், சக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையையும் நிலைநிறுத்தும் இவை, கட்டுக்கதைகளாகக் கூட பாடப்புத்தகங்களில் இடம்பெறத் தகுதியற்றவை ஆகும்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி குழுவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பாடப் புத்தகங்களில் ”இந்தியா” என்பதற்குப் பதிலாக ”பாரத்” என்று மாற்ற இக்குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக 25 நிபுணர் குழுக்களை என்.சி.இ.ஆர்.டி உருவாக்கியுள்ளது. அவற்றில் ஒன்று தான் இந்த கேடுகெட்ட பரிந்துரையை வழங்கியுள்ள 7 நபர்களைக் கொண்டுள்ள சமூக அறிவியல் குழு.

இக்குழுக்களின் பரிந்துரைகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமைக்கப்பட்ட 19 நபர் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்றல், கற்பித்தல் திட்டக்குழு (National Syllabus and Teaching Learning Material Committee – NSTC) பரிசீலித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டதிலிருந்து கல்வியைக் காவிமயமாக்கும் தங்களது நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றன.


படிக்க: காவிமயமாகும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள்: தங்களது பெயர்களை நீக்கக்கோரும் தலைமை ஆலோசகர்கள்!


என்.சி.இ.ஆர்.டி-யின் நிபுணர் குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் பாடச்சுமையைக் குறைப்பதாகக் கூறி காவி கும்பல் விரும்பாத பல பாடங்கள் பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

என்.சி.இ.ஆர்.டி-யின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம், மக்கள் இயக்கங்களின் எழுச்சி, ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டன. அதேபோல் 2002 குஜராத் கலவரம், காந்தியின் படுகொலை குறித்த குறிப்புகளும் நீக்கப்பட்டன.

மேலும், பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து இஸ்லாமியர்களின் எழுச்சி நீக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்திலிருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு, வேதியியல் பாடத்திட்டத்திலிருந்து பீரியாடிக் டேபிள் ஆகியன நீக்கப்பட்டன.

கல்வியைச் சீர்குலைக்கும், வரலாற்றைத் திரிக்கும் என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த நடவடிக்கைகளை கல்வியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், மாணவர் அமைப்புகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். என்.சி.இ.ஆர்.டி ஆலோசகர்களாக இருந்த யோகேந்திர யாதவ், சுஹாஸ் பால்ஷிகர் போன்றோர் தேசிய பாடநூல் மேம்பாட்டுக் குழுவிலிருந்தே விலகியுள்ளனர்.

கல்வியைக் காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிஸ்டுகளை தடுத்து நிறுத்த இந்த எதிர்ப்பினை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. நாடு தழுவிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது. அப்போது தான், கல்வியை இந்த அறிவியல் விரோத பாசிச கும்பலிடமிருந்து காப்பாற்ற முடியும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க