கடந்த ஜூன் 9 அன்று, அரசியல் விஞ்ஞானிகளான சுகாஸ் பால்சிகர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி) அரசியல் விஞ்ஞான பாடப்புத்தகத்தில் இருந்து தங்கள் பெயர்களை நீக்குமாறு வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
இவ்விருவரும் 2006–2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட என்.சி.இ.ஆர்.டி-இன் 9 – 12 வகுப்புகளுக்கான அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்திற்கான தலைமை ஆலோசகர்களாகப் பணியாற்றினர். தற்போது பாடப்புத்தகங்களில் பாசிச மோடி அரசு செய்துள்ள மாற்றங்களைக் கண்டிக்கும் விதமாக தங்களது பெயர்களை அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்தத் திருத்தங்களை எதிர்த்து “சிதைக்கப்பட்ட, கல்வி ரீதியாக முடமாக்கப்பட்ட இந்த பாடப்புத்தகங்களில் எங்கள் பெயர்களைத் தலைமை ஆலோசகர்கள் என குறிப்பிடுவதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்று பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோர் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.
என்.சி.இ.ஆர்.டி இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் பால்சிகர் மற்றும் யாதவ் “பாடப்புத்தகத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை; மாற்றங்கள் குறித்து தகவல்களைக்கூடத் தெரிவிக்கவில்லை. அடிக்கடி செய்யப்படும் இந்த தொடர் மாற்றங்கள் தர்க்கமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன” என்று கூறியுள்ளனர்.
படிக்க: என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!
மேலும், “நாங்கள் பங்களிப்பு செய்த 6 பாடப்புத்தகங்களில் இருந்து எங்களை விலக்கிக் கொள்கிறோம். பாடப்புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அவற்றை அடையாளம் தெரியாத அளவிற்குச் சிதைத்து விட்டன. இதனால் எங்கள் பெயர்களைப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி விடுமாறு என்.சி.இ.ஆர்.டி-யிடம் கோருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக பள்ளிப் பாடத்திட்டங்களை எளிமையாக்குவதாக் கூறி அரசியல் விஞ்ஞானம் பாடப்புத்தகத்தில் இருந்து என்.சி.இ.ஆர்.டி பல பகுதிகளை நீக்கியது. 12-ஆம் வகுப்பு அரசியல் விஞ்ஞானம் பாடத்திட்டத்தில் இருந்து 2002 குஜராத் கலவரம் குறித்த பகுதியும், 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, முக்கிய போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள், ஜனநாயகத்தின் சவால்கள் ஆகிய பகுதிகளும், 8-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து தேசத்துரோகம் குறித்த பகுதியும் நீக்கப்பட்டது.
அதேபோல், என்.சி.இ.ஆர்.டி 12-ஆம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக்கப்பட்டது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத்திட்டத்தில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு நீக்கப்பட்டது.
இந்நிலையில், பால்சிகர் மற்றும் யாதவ் ஆகியோரின் கடிதத்திற்குப் பதில் அளித்த என்.சி.இ.ஆர்.டி “இவ்விருவரின் பங்களிப்புகளை என்.சி.இ.ஆர்.டி அங்கீகரிக்கிறது. இவர்களின் பங்களிப்புகள் கூட்டு முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதால் இவர்களின் பெயர்களை நீக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்று கூறிவிட்டது. மேலும், இவர்களின் ஆலோசகர் பதவி புத்தகங்கள் வெளியிடப்பட்ட உடனேயே காலாவதியாகிவிட்டது என்றும் கூறியுள்ளது.
படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!
ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு மாணவர்களுக்குச் சுமையாக உள்ள பகுதிகளைத் தற்காலிகமாக நீக்கிக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. அதனைக் காரணமாக வைத்துக்கொண்டு காவிக் கும்பலுக்கு ஒவ்வாத பல பகுதிகள் அப்போது நீக்கப்பட்டன. இந்நீக்கங்கள் தற்போது நிரந்தரமாக்கப் படுகின்றன.
பாடத்திட்டத்தில் நீக்கங்கள் செய்யப்படுவது குறித்துப் பேசிய ‘சுயேச்சை அமைப்பான’ என்.சி.இ.ஆர்.டி-இன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி “தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டல் படி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. நாங்கள் அதனை அமல்படுத்துகிறோம்” என்று கூறியுள்ளார். அதாவது, பாசிச மோடி அரசின் காவி கல்விக் கொள்கையைத்தான் அமல்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.
புதிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்ட போதே அதில் தங்களின் பரிந்துரைகளில் 60 – 70 சதவிகிதம் இடம் பெற்றுள்ளன என்று ஆர்.எஸ்.எஸ் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தான் தற்போது என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் செய்து வரும் மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளை இளம்பருவத்திலேயே இந்துத்துவ சித்தாந்திற்கு ஆட்படுத்தும் பொருட்டே பாடத்திட்டத்தில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொம்மி