என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு!
காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!
சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பகுதி நீக்கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCRET) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் உத்தரப்பிரதேச மாநில கல்வி வாரியமும் இதனை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு வரலாறு, குடிமையியல் மற்றும் இந்தி பாடத்திட்டங்களில் பல்வேறு பகுதிகளை என்.சி.ஆர்.டி நீக்கியுள்ளது. குடிமையியல் பாடப்புத்தகத்தில் இருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவின் அரசியல்’ என்ற புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களை நீக்கியுள்ளது.
அதாவது – ‘மக்கள் இயக்கத்தின் எழுச்சி’ மற்றும் ‘தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’ ஆகிய தலைப்புகளும், இந்தியாவில் சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி மற்றும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் காங்கிரசின் ஆட்சி ஆகிய தலைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
வரலாறு பாடப்புத்தகத்திலிருந்து முகலாய சாம்ராஜ்ஜியம் குறித்த முழு அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஆளும் மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவா கருத்துக்களைத் திணித்து வந்த நிலையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த அறிவிப்பானது நாடு தழுவிய அளவில் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாகும். ஒரு வரலாற்றழிப்பு நடவடிக்கையாகும். சட்டப்பூர்வ வழியிலேயே கல்வித்துறையின் மூலம் வரலாற்றை தங்களுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்து கொண்டு வருகிறது காவி பாசிசக் கும்பல்.
கோடிக்கணக்கான மாணவர்களை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அற்றவர்களாகவும், ஜனநாயக உணர்வற்றவர்களாகவும், வரலாற்றுணர்வு அவற்றவர்களாகவும் மாற்றுவதன் மூலம் தங்களின் பாசிச அடியாட்படையாக கட்டமைக்கும் பணியை விரைவுபடுத்துகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
அபாயத்தை நினைத்து அழுது கொண்டிருக்க முடியாது. கையறு நிலையை பேசிக் கொண்டிருக்கவும் நேரமில்லை. நாம் தயங்கி நிற்கும் ஒவ்வொரு நொடியும் பாசிசக் கும்பல் முன்னேறத்தான் பாதை அமைக்கும்.
நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காவி பாசிஸ்டுகளை வேரோடு ஒழித்துக் கட்டியே தீர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாணவர்கள் மத்தியிலும், உழைக்கும் மக்கள் மத்தியிலும் விரைந்து கொண்டு செல்ல வேண்டிய தருணமிது.
இனியன்