“இந்தியா அல்ல பாரத்” – NCERT-இன் கரசேவை!

ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERT-இன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ”இந்தியா” என்ற சொல்லுக்குப் பதிலாக “பாரத்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பரிந்துரைத்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 3 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேசிய பாடத்திட்டத்தில், பள்ளிப் பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் பொருட்கள் ஆகியவற்றைச் சீரமைப்பதற்காக அண்மையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவானது புதிய பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கான இறுதிக்கட்டப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கண்ட பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் ஐசக் “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கனவே, இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று கூறுகிறது. பாரதம் என்பது பழைமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது பாடப்புத்தகங்களில் நமது தோல்வியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முகலாயர்களையும் சுல்தான்களையும் நாம் வெற்றி கொண்ட வரலாறு இடம்பெறவில்லை. எனவே புதிய பாடப்புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிளாசிப் போருக்கு பிறகுதான் பயன்பாட்டிற்கு வந்தது. எனவே தான் ”பாரத்” என்ற பெயரை பாடநூலில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


படிக்க: உண்மை வரலாறுகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கும் என்.சி.இ.ஆர்.டி!


பிஜேபி கும்பலின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைத்திருப்பவும் தனது தோல்வி முகத்தை மூடி மறைக்கவும் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி உருவானதிலிருந்து  “பாரத்” என்ற பெயரை வைத்து ஒரு நிகழ்ச்சிநிரலை கட்டமைத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERTஇன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக மதங்களைக் கடந்து சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவின் உண்மையான தியாகம் நிறைந்த மரபை ஒழித்துக்கட்டிவிட்டு, சுதந்திரப் போராட்டத்தை மதரீதியான ஒன்றாக கட்டமைக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவார கும்பல். இன்னொரு பக்கம் இந்துக்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் பிரிட்டிஷாருக்கு செய்த அடிவருடி வேலையை மறைக்கப் பார்க்கிறது. இதுதான் புதிய பாடத்திட்டத்துக்கான குழுவின் தலைவர் ஐசக் சொல்வதன் உள்ளடக்கம்.

அரசுக்கட்டமைப்பின் எல்லா அங்கங்களிலும், குறிப்பாக அதிகார வர்க்கத்தின் எல்லா அடுக்குகளிலும் நுழைந்து விட்ட ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எப்படியாவது தன்மீதான மக்களின் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்புகளையும் மடைமாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கேற்ப எந்தவித தடையுமின்றி அரசுக் கட்டமைப்பை வைத்தே நடவடிக்கைகளை முன்நகர்த்துகிறது.

நாம் மக்களின் ஜனநாயகத்துக்கான, வாழ்வுரிமைக்கான போராட்டங்களை நிகழ்ச்சிநிரலுக்கு கொண்டு வருவதன் மூலமே, வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் என்பதை மக்களின் முழக்கமாக மாற்றுவதன் மூலமே பாசிஸ்டுகளை எதிர்கொள்ள முடியும்.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க