புதிய கல்வி கொள்கை உயர்ந்த வாக்குறுதிகளை முன்வைக்கிறது, ஆனால் சமத்துவத்தின் இலக்குகளை யதார்தத்தில் கொண்டுவருவதற்கான  தெளிவான பார்வை அதனிடம் இல்லை.  COVID-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டிருக்கும் வேளையில், ஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளித்ததுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி “இது ஒரு கால தாமதமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கல்வித்துறைச் சீர்திருத்தம்” பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றக்கூடியது” என்றும் ட்வீட் செய்திருந்தார்.

“அறிவின் சகாப்தத்தில் (era of knowledge), கற்றல், ஆராய்ச்சி மற்றும் அறிவு ஆகியவை முக்கியமானவை, இந்த புதிய கொள்கை இந்தியாவை ஒரு புதிய அறிவு மையமாக மாற்றும் (New knowledge hub)” என்று அவர் ட்வீட் செய்திருந்தார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், இந்த வரைவுக் கொள்கையின் மீது 2.25 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவை உலக அறிவு வல்லரசாக மாற்ற வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கோடு இந்த கல்வி கொள்கை ஒத்துப்போவதாக அவர் ட்வீட் செய்திருந்தார். மோடி ட்வீட்டின் படி, புதிய கல்வி கொள்கையானது (NEP) “சமத்துவம், தரம், குறைந்த செலவு” ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. “கல்வி நம் தேசத்தை பிரகாசமாக்கி, அதை செழிப்புக்கு இட்டுச் செல்லட்டும்” என்று அவர் ஒரு தீர்க்கதரிசி போல கூறினார். ஆனால், கல்விக் கொள்கையை  கூர்ந்து  நோக்கையில் மோடியின் கூற்றை இது பொய்யாக்குகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 66 பக்க கல்விக் கொள்கை ஆவணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்துரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த மிகப்பெரிய வரைவின்(483 பக்கம்) சுருக்கப்பட்ட வடிவாகும். இதற்கு முன்பு 1986-ல் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அது 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சிக்காலமான அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் பள்ளி பாடப்புத்தகங்களில், குறிப்பாக வரலாற்று பாடப்புத்தகங்களில் பல மாற்றங்களைச் செய்தது. ஆனால் கல்விக் கொள்கையை மாற்றுவது பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. புதிய கொள்கையைத் தயாரிப்பதற்கான வேலைகள்  2016-ம் ஆண்டில், மோடி பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது. மறைந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சரவை செயலாளர், “புதிய கல்விக் கொள்கைக்கான வளர்ச்சிக் குழுவின் (Committee for the Evolution of a New Education Policy)” தலைவராக நியமிக்கப்பட்டார். அக்குழுவினுடைய அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் ஆரம்ப வரைவைத் தயாரித்தது. கஸ்துரிரங்கன் தலைமையிலான புதிய குழு, மே 2019-ல் வரைவை இறுதி செய்தது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை
♦ தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்

இவ்வரைவு மீது உள்ளீடுகள் மற்றும் கருத்துக்களை பெற பொது தளத்தில் வெளியிடப்பட்டது. சாராம்சத்தில், இக்கொள்கை மேலிருந்து கீழ் நோக்கும் (Top-Down) தன்மைக் கொண்டது. இது, உயர்கல்வி நிறுவனங்களுக்களை கட்டுப்படுத்த ஒற்றை கட்டுப்பாட்டாளர், பட்டப்படிப்புகளில் பல நுழைவுகள் மற்றும் வெளியேறுவதற்கான வாய்ப்புகள், MPhil  படிப்பு நீக்கம், பள்ளி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களை அமைத்தல், இணையவழியிலானப்  பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை இக்கல்விக் கொள்கை முன்வைக்கிறது.

அனைவருக்குமான தரமான கல்வி வழங்க முயற்சிக்கும் எந்தவொரு கொள்கையும் அக்கல்வியை அனைவரும் பெறக்கூடியதாக மாற்ற வேண்டும். ஆனால் புதிய கொள்கையோ இந்த அம்சத்தைப் பற்றி மிக சொற்பமாக பேசுகிறது. இந்தக் கொள்கையானது கல்வியை “இந்தியாவினுடைய தொடர் வளர்ச்சி மற்றும் உலகளவில் முன்னணி நாடாவதற்கான ஒரு திறவுகோலாக உருவகப்படுத்துகிறது. ஆனால் கல்வியின் நோக்கமே பகுத்தறிவை ஊக்குவிப்பதும்  சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை மேம்படுத்துவதும் தான். “கலாச்சார பாதுகாப்பு” என்ற குறிக்கோளே, சங்க பரிவாரத்தினுடைய கலாச்சார தேசியத்திற்கான திட்டத்தையே குறிக்கிறது. இக்கல்விக் கொள்கையின் பின்னாலுள்ள “அரசியல்” நோக்கமானது, பண்டைய இந்தியாவில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தது, அனைவரும் கல்வியறிவு பெற தடையேதும் இல்லை என்று கூறுகிற பண்டைய இந்தியாவின் பெருமை பற்றிய அதன் நீண்ட பத்தியில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. இப்புதியக் கொள்கையின் முக்கிய அம்சமே, தனிநபர் வளர்ச்சிக்காக உயர்தர கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்துள்ளது தான்.

முழுமையான மறுசீரமைப்பு :

2030 – நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் (2030 sustainable development goals-SDG) திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கல்வி இலக்குகளை அடைவதற்கான நோக்கத்தின் அடைப்படையில் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி, இந்த இலக்குகளை அடைய இந்தியாவிலுள்ள கல்வி அமைப்பையே “முழுமையான மறுசீரமைப்பு” செய்ய வேண்டும்.  SDG புதிய “அறிவு மற்றும் வேலைவாய்ப்புக்கான தளத்தை” முன்வைக்கிறது, அதற்காக இந்தியக் கல்வி அமைப்பு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், “என்ன கற்றுக்கொள்வது” என்பதை விட “எப்படிக் கற்றுக்கொள்வது” என்பதே முக்கியமானது எனவும் கூறுகிறது. கல்விக் கொள்கை முழுவதுமே பொருளற்ற வாசகங்களை ஒன்றாக சேர்த்துள்ளனர்.

உதாரணமாக, கல்வியில் குறைவான பாடத்திட்டமே வைக்கப்படும் அதேவேளையில் இவை விமர்சனக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும்  மக்களுக்கு உதவ வேண்டும் என்கிறது. நிர்ணயிக்கப்படும் கல்வி இலக்குகள் மற்றும் அதன் வெளிப்பாட்டுக்கு  இடையிலான இடைவெளியை சீர்திருத்தங்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் எனக் கல்விக் கொள்கைக் கூறுகிறது. ஆனால் இந்த இடைவெளிகள் உருவாதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய எந்தவித விமர்சன மதிப்பீடும் செய்யவில்லை. கல்வி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் திருத்துவது மற்றும் மாற்றியமைப்பதை பற்றி இக்கொள்கை பேசினாலும் அதன் அழுத்தம் முழுவதும் கல்வியை நிர்வகிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறை அம்சங்களை(regulatory aspects) அகற்றுவதாகும்.

இக்கொள்கை ஆசிரியர்களை பணியமத்துவது மற்றும் சிறந்த மற்றும் திறமையானவர்கள் ஆசிரியராகுவதை ஊக்குவிப்பவிப்பதை பற்றி பேசுகிறது. ஆசிரியர்கள் தான் “கல்வி அமைப்பினுடைய  அடிப்படை சீர்திருத்தங்களின் மையமாக” இருப்பார்கள் எனக் கொள்கைக் கூறுகிறது. இக்கல்விக் கொள்கை ஆசிரியர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும் அவர்களின் கவுரவத்தையும் சுய உரிமையையும் உறுதி செய்வதாகவும் கூறுகிறது. அஆனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்காலிக பொறுப்பில் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள்.

மாணவர்களை கல்வியைவிட்டுத் துரத்து தேசிய கல்விக் கொள்கை – 2020

பாரதீய ஜனதா (பிஜேபி) ஆளும் மாநிலங்களில் கூட. இதே நிலை தான். இவர்களைப் பற்றி இக்கல்விக் கொள்கை எதுவும் பேசவில்லை.  ஆசிரியர்களின் ” கவுரவம், சுயமரியாதை மற்றும் சுகந்திரம்” என்று வாய்ச்சவடால் அடித்த போதிலும், செப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இணையவழி மற்றும் திறந்த புத்தகத் தேர்வுகளில்(open book exam) உள்ள சிரமங்கள் மற்றும் நெறிமுறை சிக்கல்கள் குறித்து ஆசிரியர்கள் எழுப்பிய சந்தேகங்களை அரசாங்கம் முற்றிலுமாக புறக்கணித்தது.

இந்த கல்விக் கொள்கையில் 22 அடிப்படைக் கொள்கைள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை “கற்பித்தல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை விரிவான பயன்படுத்துவது”, “தளார்வான மற்றும் கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்பு”, “இந்தியாவின் பெருமை மற்றும் அதன் வளமான பண்டைய மற்றும் நவீன கலாச்சாரம், அறிவு அமைப்புகள் மற்றும் மரபுகள்”, “அரசு கல்வி நிறுவனங்களில் கொடையாளர்கள், தனியார், சமூகப் பங்களிப்பு ஆகியோர் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்” போன்றவையாகும். கல்வித்துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தரப்படும் முக்கியத்துவமானது  கற்றல் கற்பித்தலில் இணையவழி முறையையே பிரதானமாக முயற்சிப்பதாகவே தோன்றுகிறது.  இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பற்றிக் குறிப்பிடுகையில், மத்திய காலமானது  வெளிப்படையாக தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு: பொறுப்புகளை சுருக்கிக் கொள்ளுதல்

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தரமான ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (Early Child Care and Education) கிடைக்கவில்லை என்று ஆவணம் கூறுகிறது. ஆனால் அனைவருக்கும் தரமான, மலிவாகக் கிடைக்கக் கூடிய மற்றும் பெறுகின்ற வகையிலான கல்வியை கொடுப்பது அரசின் கடமை என்பதை இந்த கல்விக் கொள்கை எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆரம்பகால குழந்தை பராமரிப்பு வழங்குவதை சிக்கலானது என இந்த அறிக்கை பார்க்கிறது. இந்த கல்விக் கொள்கையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்ட (ICDS) மையங்கள் அல்லது அங்கன்வாடிகள் அனைவருக்குமான ஆரம்பகால குழந்தை பராமரிப்பை எட்டுவதற்கான இணைப்பு  நிறுவனங்களாக செயல்படும்.

மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் பராமரிப்பை வழங்குவதற்காக ICDS செய்துவரும் வேலைகளைப் பற்றி இந்தக் கொள்கை சிறிதளவு பேசுகிறது. ஆனால் ICDS மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களைப் பற்றியும் அவர்கள் வழங்கப்பட்டு வரும் மிகக் குறைந்த ஊதியத்தைப் பற்றியும் இந்தக் கல்விக் கொள்கை பேசவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெருகிவரும் தனியார் குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது தனியார் பள்ளிகளை ஒழுங்கமைப்பது பற்றி இந்த கல்விக் கொள்கையில் எந்த முயற்சியும் இல்லை. சுருக்கமாக சொன்னால், புதிய கொள்கையின் பார்வையானது அனைத்து சமூக மற்றும் பொருளாதார பின்னணியிலிருந்தும் வரும் குழந்தைகள் ஒரே மாதிரியான கல்வியைப் பெறுவதற்கான பொது பள்ளி முறையை உருவாக்க வேண்டும் என்பதாக இல்லை. பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் படிக்கும் சலுகை பெற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயமாக இது பாதகமாக அமையும்.

பழங்குடிப் பகுதிகளில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியானது “ஆசிரமங்களின்” மூலம் நடத்தப்படும் என கொள்கை கூறுகிறது, ஆசிரமம் என்பது பள்ளிகள் மற்றும் கற்றல் மையங்களை குறிக்கின்ற சமஸ்கிருதச் சொல். தனித்துவமான கலாச்சார மரபுகளைக் கொண்ட பழங்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளை ஏன் ஆசிரமங்கள் என்று அழைக்க வேண்டும்? இது சங்க பரிவாரத்தின்  சித்தாந்தத்துடன் பொருந்திப்போகிறது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !

மேலும், அனைவருக்குமான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை எட்டுவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்வதற்காக தன்னோடு சக வயதுடையவர்கள் அல்லது வயது மூத்தவர்களின் உதவியோடு கற்பிப்பதற்கான (Peer tutoring) திட்ட பரிந்துரைத்ததின் வாயிலாக எழுத்தறிவு கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் அதற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் அரசை விடுவித்துள்ளது. ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியில் 100 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைவது குறித்து இக்கொள்கை பேசுகிறது, ஆனால் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய தர அளவீடுகள் (standards) மற்றும் தேவைகளை (requirements) தளர்த்தியுள்ளது. சமூக-பொருளாதார பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து “பள்ளியை குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது” என்ற கொள்கைக்கு பதிலாக, பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கு முறைசாரா பள்ளிப்படிப்பை (non formal schooling) இக்கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது.

இக்கொள்கையில் மறைந்திருக்கும் நடுநிலையின்மை அதன் மொழிகள் குறித்த பகுதியில் வெளிப்படுகிறது. இந்திய மொழிகள், “மிகச் செழிப்பான, , மிக அறிவியல் பூர்வமான, மிக அழகான மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உலகிலேயே மிக தகுந்த மொழியாகும். பண்டைய மற்றும் நவீன இலக்கியங்கள் (உரைநடை மற்றும் கவிதை), திரைப்படம் மற்றும் இசை ஆகியவை இம்மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவினுடைய அடையாளம் மற்றும் செல்வமும் ஆகும். அனால் மொழி, கலை, இசை மற்றும் அழகியல் துறைகளில் மத்திய கால பங்களிப்பை புறக்கணிப்பது உள்நோக்கத்திடனே செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழி மற்றும் பிராந்திய மொழிகளின் பட்டியலிலிருந்து உருதுவை நீக்கியதோடு, பள்ளிகளில் உருதுவை விருப்பப்பாடமாக மாற்றியுள்ளனர்.

வெளிநாட்டு மொழிகளின் பட்டியலில், மாண்டரின் இடம்பெறவில்லை, ஆனால் ரஷ்ய, பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானிய, போர்த்துகீசியம், ஜெர்மன், கொரிய மற்றும் தாய் கூட சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  மூம்மொழித் திட்டத்தில் இந்தி மூன்று மொழிகளில் ஒன்றாக குறிப்பிடுவதை இக்கொள்கை தெளிவுபடுத்தும் அதே வேளையில், மூன்று மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதத்தை வலியுறுத்துவதை சில அரசாங்கங்கள், குறிப்பாக இரு மொழிக்கொள்கையை பின்பற்றும் மாநிலங்கள் மற்றும் சமஸ்கிருதத்தை  “அடிப்படை” மொழியாகக் ஏற்றுக் கொள்ளாத மாநிலங்கள் எதிர்கின்றன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மூலம் பள்ளி கல்விக்கான பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான பெரிய திட்டங்களை இந்த கொள்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. பாடத்திட்ட ஒருங்கிணைப்பு பிரிவில், “இந்திய அறிவு” குறித்த துணைப்பிரிவில் இந்திய அறிவு குறித்து பேசும் போது பண்டைய இந்தியா அறிவுத்துறை பங்களிப்பு பற்றியும் நவீன இந்தியாவிற்கு அது அளித்துள்ள பங்களிப்பு குறித்தும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவுக் கொள்கை மறுபடியும் மத்திய காலம் அறிவுத் துறை பங்களிப்பை பற்றி குறிப்பிடாமல் பண்டைய காலத்திலிருந்து நவீன இந்தியாவுக்கு தாவிச்செல்கிறது. “இந்திய அறிவு முறைமைகள்(Indian knowledge System)” பற்றிய ஒரு பாடத்தினைச் சேர்க்க இக்கொள்கை பரிந்துரைக்கிறது. அதில் “பழங்குடிகளின் அறிவு மற்றும் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய கற்றல் வழிகள்” ஆகியவை அடங்கும். இவைகள்  பள்ளி பாடத்திட்டத்தில் உள்ள கணிதம் முதல் பொறியியல், மொழியியல் வரையிலான பல்வேறு பாடங்களை கற்பிப்பதற்கான கற்பித்தல் கருவிகளாகப் பயன்படுத்தப்படும்.

உயர்கல்வி பகுதியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வினாத்தாள்களை தயாரிக்கும் பொறுப்புகளை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களிடமிருந்து பறிப்பதிலிருந்து இக்கல்விக்கொள்கை ஆரம்பிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் சுமையைக் குறைப்பதற்காக, தேசிய தேர்வு நிறுவனம் (National Testing Agency) என்ற அமைப்பை இக்கொள்கை முன்வைத்துள்ளது. இது தேசிய அளவில் திறனாய்வுத்தேர்வுகளை நடத்தும். மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகள் ஆகியவற்றை NTA நடத்தும். பல்கலைக்கழகங்கள் விரும்பினால் NTA தேர்வு மதிப்பீடுகளை மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.  தனியார் துறை/கொடைவள்ளல்களுக்கு முன்னுரிமை இந்த கல்விக் கொள்கை கல்வியில் தனியார் துறையை ஊக்குவிப்பதில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.

இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை முன்மொழிகின்ற அதேவேளை, அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கின்ற மற்றும் ஒழுங்குப்படுத்துகின்ற பள்ளி கல்வித் துறையை கடுமையாக விமர்சிக்கிறது. இக்கல்விக் கொள்கையின் படி, தற்போதைய பள்ளி கல்வி அமைப்பு “கருத்துக்களுகிடையேயான மோதல்களுக்கும் (conflicts of interest), அதிகப்படியான அதிகார மையப்படுத்தலுக்கும், திறமையற்ற மேலாண்மைக்கும்” வழிவகுத்துள்ளது. தற்போதைய ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory System) கல்வி வணிகமயமாக்கல் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பொருளாதார சுரண்டலை பார்க்கத் தவறிவிட்டது. மேலும் பொது நல நோக்கோடு தனியார் கொடைவள்ளல்கள் பள்ளிகள் ஆரம்பிப்பதை ஊக்குவிப்பதில் கவனக்குறைவாக இருந்துள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகள் “தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளை அணுகும் முறைகளில் மிக அதிகமான சமச்சீரற்ற தன்மை இருப்பதாக” இகல்விக் கொள்கை கூறுகிறது. தனியார் துறை / கொடைவள்ளல்களை பள்ளிக் கல்வியில்  ஊக்குவிப்பதையும் பள்ளிக் கல்வியில் அவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்ற நோக்கத்தை NEP வெளிப்படுத்துகிறது. ஒரு கல்வி கொள்கை தனியார் பள்ளி முறையை வெட்கமின்றி ஆதரிப்பது இதுவே முதல் முறை.

படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

வருகிறது இணையவழி கல்வி முறை

2040-ம் ஆண்டிற்குள் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் (HEI) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கையை கொண்டதாகவும் பல்வேறு பிரிவுகள் சார்ந்த படிப்புகளை வழங்கக்கூடியதாகவும் மாற்றுவதே NEPன் நோக்கம் எனக் கூறுகிறது.  ஒரே பிரிவு படிப்புகளை (பொறியியல் படிப்பு மட்டும், கலை அறிவியல் படிப்புகள் மட்டும், மருத்துவப் படிப்புகள் மட்டும்) வழங்கக்கூடிய உயர்கல்வி நிறுவனங்கள் படிப்படியாக அகற்றப்படும். ஆனால் உயர்கல்வியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆயிரக்கணக்கில் இருக்க வேண்டும். எனவே அத்தகைய இலக்கை அடைய நீண்ட காலம் ஆகும் என்பதை உணர்ந்த இக்கவிக் கொள்கை, “இந்த செயல்முறை அதிக காலம் எடுக்கும் என்பதால், முதலில் 2030-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பல பிரிவு படிப்புக்களை (பொறியியல், கலை-அறிவியல், மருத்துவம், மேலாண்மை என அனைத்து படிப்புகளையும் ஒரே கல்லூரி வளாகத்திற்குள் வழங்குவது) வழங்கக்கூடியதாக மாற்றி பின்பு படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்” எனக் கூறுகிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 2035-க்குள் 26.3 சதவீதத்திலிருந்து (2018) 50 சதவீதமாக உயர்த்துவதே நோக்கம் எனக் கூறுகிறது. இணையவழி கற்பித்தலை முந்தள்ளுவதற்காக, உயர் கல்வி நிறுவனங்கள் திறந்த வழி தொலைதூர படிப்புகளும் இணைய வழி படிப்புகளும் ஊக்குவிக்கப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது.

இக்கல்விக்கொள்கை பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியில் இணையவழி கற்றலை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன்மூலம் கல்வி பெறுதலில் பல வகைகளை உருவாக்குகிறதே கல்விக் கொள்கை கூறுகின்ற சமூக மற்றும் பொருளாதார பிளவுகளை இணைக்க உதவாது. அனைவருக்கும் பொதுவான மற்றும் வேறுபாடற்ற வகையில் கல்வியை வழங்குவதற்கு பதிலாக, வழமையான முறை; முறைசாரா முறை; மாற்று கல்விமுறை; இணையவழி முறை, போன்ற பல வகைப்பட்ட கல்வி கற்கும் முறைகளை உருவாக்குவதையே இக்கல்விக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கல்விக் கொள்கை உயர்கல்வி நிறுவனங்கள் இலவசமாக கல்வி வழங்க ஊக்குவிக்கும் அதேவளையில், அக்கல்வி நிறுவனங்களே “கட்டணத்தை நிர்ணயிக்கும் வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் ” பரிந்துரைக்கிறது. இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தனது “செலவினங்களை மீட்டெடுப்பதோடு தங்களது சமூக கடமைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கு” வழிசெய்கிறது.

ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சியளிக்கும் திட்டமானது இந்தியாவில் இணைய வசதிகளை பெறுவதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை(digital divide) முற்றிலுமாக கணக்கில் கொள்ளவில்லை. , இந்த ஏற்றத் தாழ்வுகள் பழங்குடி கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் அதிகமாகவே உள்ளது. பொது சுகாதாரத்தைப் போலவே, இந்தியாவில் கல்வியும் மிகவும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 45.2%மாணவர்கள்  தனியார் சுயநிதிக் கல்லூரிகளிலும், 21.2% மாணவர்கள் தனியார் நிர்வகிக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் படிக்கின்றனர். தொழில்முறை படிப்புகளில் 60% க்கும் அதிகமான மாணவர்கள் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். . முன்பெல்லாம்  அரசு உயர்கல்வி நிறுவனங்களில் தான் அதிகமான மாணவர் சேர்க்கை நடந்தது.

தேசிய கல்விக் கொள்கையில் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் வலதுசாரி பிரதிநிதியாக கலந்து கொண்ட ஒரு கல்வியாளர், அரசாங்கம் “உலக வர்த்தக கழகத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால் ” தேசியக் கல்விக்கொள்கையும் அந்த நிபந்தனைகளுக்கு தகுந்தாற் போல இருக்கும் என்றார். புதிய கொள்கையை தெரியப்படுத்தும் தத்துவமானது கல்வியை ஒரு சேவையாக இல்லாமல் ஒரு சரக்காகப் பார்க்கச் சொல்கிறது.

கட்டுரையாளர் : டி.கே.ராஜலட்சுமி
தமிழாக்கம் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
நன்றி : பிரண்ட்லைன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க