மிழக அரசானது 2022 – 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் இல்லம் தேடிக் கல்வி, முன்மாதிரிப் பள்ளிகள், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளை தமிழ்நாட்டில் திறப்பது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம், ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டங்களில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற திட்டம் மட்டும் பேசு பொருளாகி உள்ளது. அதுவும் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக கொடுக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. மற்ற திட்டங்களை பற்றி பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற சில கல்வியாளர்களை தவிர மற்றவர்கள் யாரும் பேசவில்லை.
மற்றபடி மொத்த பட்ஜெட்டை பற்றியும் திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆகா ஓகோ என்ற வரவேற்பும் ஆரவாரமும்தான் உள்ளது. எனவே பள்ளிக் கல்வித்து றையில் மேற்கூறிய 5 திட்டங்களின் உண்மையான நோக்கங்களை பற்றி நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
படிக்க :
♦ மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !
♦ கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
ஐஐடி, எய்ம்ஸில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் இளநிலை படிப்பிற்கான செலவை தமிழக அரசே ஏற்பது.
”ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்” என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் இரண்டு நுழைவுத்தேர்வுகளை கடந்து செல்ல வேண்டும். 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் எல்லாம் சேர முயற்சி எடுப்பதில்லை.
இளங்கலை படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் படித்துவிட்டு GATE எனும் தேர்வை எழுதி அதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வாங்கினால் PG COURSE ஐஐடி போன்ற நிறுவனங்களில் படிக்க முடியும். இந்த முறையை பின்பற்றிதான் நிறைய மாணவர்கள் ஐஐடியில் படிக்கின்றனர்.
இத்தகைய நுழைவுத்தேர்வுகளில் தனியார் பயிற்சி நிலையங்களில் பல இலட்சம் கட்டிப்படிக்கும் பணக்கார மாணவர்களால் மட்டுமே எளிதாக தேர்ச்சிபெற முடியும். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோருக்கு இத்தகைய பயிற்சிகள் எட்டாக்கனியாகவே இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை படிப்பிற்கான செலவை அரசே ஏற்கும் என்னும் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடையக் கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் (MIT,CEG,SAP,ACT ) படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று சொல்லலாமே. அப்படி அறிவித்தால் அதிக நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்ற காரணத்தால்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் சேராத ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை அளித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டத்தை அறிவித்ததன் மூலம் திமுகவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நல்லது செய்கிறார்கள் என்ற வெற்று பிம்பம்தான் உருவாகி உள்ளது. அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள்.
முன் மாதிரிப் பள்ளிகள்
”அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல், தொழிற்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெறும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன் மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. தற்போது கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் இந்த முன்மாதிரிப் பள்ளிகள் 125 கோடி செலவில் தொடங்கப்படும்” என்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மாதிரிப் பள்ளி திட்டம் 2018-ம் ஆண்டு அதிமுக அரசு இருக்கும்போதே அறிவிக்கப்பட்டது. அப்போதைய அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்வாகத்தை மேம்படுத்த ரூ.50 இலட்சம் தரும். அப்பள்ளியானது மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போதைய திமுக அரசானது ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு நிதி ஒதுக்குவோம் என்பதை சொல்லவில்லை. இத்திட்டத்தில் முக்கியமானது தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியைபெற வேண்டும் என்பதுதான். அதையும் திமுக அரசானது வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கல்வியாளர்கள் ”மாதிரிப்பள்ளி மற்றும் உயர்கல்வியைத் தொடர தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி என்ற கருத்து அனைத்து குழந்தைகளின் சமமான அணுகுமுறைக்கு எதிரானது. மாதிரிப் பள்ளிகளில் மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கற்றலில் சிறந்தவர்கள் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.
இத்திட்டமானது மாணவர்களின் சமமான அனுகுமுறைக்கு எதிரானது என்றாலும் அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது. பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய பொருப்பிலிருந்து அரசானது படிப்படியாக விலகுதல்.
பள்ளிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டிய அரசானது, தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் குறிப்பிட்ட அளவு பள்ளியை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பள்ளியை முற்றிலுமாக கைவிடுதலில்தான் போய் முடியும்.
இல்லம் தேடிக் கல்வி
தமிழ்நாட்டில் பொதுமுடக்க காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பெற்றோர்களும் பிள்ளைகளை அச்சம் இல்லாமல் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இச்சூழலில் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களின் கல்வித்திறனை எப்படி மேம்படுத்துவது என்று யோசிக்காமல் மீண்டும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது திமுக அரசு.
இத்திட்டம் தொடங்கிய காலத்தில் இது புதிய கல்விக் கொள்கையின் அங்கம் மற்றும் முறை சார்ந்த கல்வியை ஒழிகும் என்று ஆசிரியர்கள் வைத்த விமர்சனத்தையும், தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மாணவர்களை சென்றடைய வாய்ப்புள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் செயல்பாடு உள்ளது.
அசாம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் காவிமயமாக்குவதற்கு ஓராசிரியர் பள்ளிகள்தான் உதவிகரமாக இருந்தன. அதேபோல் இத்திட்டத்தை இங்கே தொடர்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குச் சாதகமாக அமையும்.
முதலில் இல்லம் தேடிக் கல்வி திட்டமானது பொதுமுடக்க காலத்திற்கு என்று மட்டும் கூறிவிட்டு தற்போது மீண்டும் அறிவிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதாவது புதியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு நைச்சியமாக அமல்படுத்துவதை, பாஜக எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்-ஐ நைச்சியமாக வளரவிடுவதை இச்சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள்
உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் கிளைகள் தமிழ்நாட்டில் திறக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் புதியக் கல்விக் கொள்கையின் அங்கம்தான். கல்வியை வியாபார சரக்காக மாற்றும் நோக்கம்தான்.
அரசுக் கல்லூரிகள் மட்டுமிருந்த சூழலில் படிப்படியாக தனியார் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. தனியார் கல்லூரிகள் தரத்தில் சிறந்தவை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் படிப்படியாக விதைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசுக் கல்லூரி என்றாலே பொறுக்கி கல்லூரி என்ற சிந்தனை உருவாக்கப்பட்டது. அரசானது அரசுக் கல்லூரிகளுக்கு படிப்படியாக நிதி ஒதுக்குவதை குறைத்து, நிர்வாகக் கட்டமைப்பையும் ஊழல்மயப்படுத்தி சீரழித்தது.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
மேற்கூறியவாறுதான் கல்வித்துறையில் தனியார்மயம் படிப்படியாக புகுத்தப்பட்டது. அதற்கேற்ப மக்களின் மனநிலையும் படிப்படியாக மாற்றப்பட்டது. இச்சூழலை உருவாக்கிவிட்டுதான் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் உள்ளே வருகின்றன.
எனவே இத்திட்டமானது புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு அதை மறைமுகமாக அமல்படுத்தும் திமுக அரசை மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
மொத்தமாக தொகுத்து பார்க்கும்போது மேற்கூறிய திட்டங்கள் எல்லாம் திமுக அரசின் புதியக் கல்விக்கொள்கையை அமல்படுத்தலையும், கவர்ச்சிவாத அரசியலையும்தான் பட்ஜெட் முன்மொழிகிறது என்று தெரிய வருகிறது. திமுக-விற்கு முற்போக்கு சாயம் பூசுபவர்கள்தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க