மலையம்பாக்கம் அரசுப் பள்ளியின் அவலநிலை ! மெத்தனமாக இருக்கும் அரசு !
தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகள் சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியால் தான் இயங்கிவருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய அரசோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, வடக்கு மலையம்பாக்கம் என்ற ஊரில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு வரை தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரையில் பெயர் குறிப்பிட விரும்பாத கல்வி நலன்விரும்பிகளின் முன்முயற்சியால் தான் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர், கம்ப்யூட்டர், புரோஜெக்டர், ஸ்பிக்கர் பாக்ஸ் போன்றவை அனைத்தும் இத்தகைய நலன் விரும்பிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகம் மட்டும் அல்லாமல் தமிழ், கணிதம், ஆங்கிலம் பயிற்சிகளுக்கு தேவையான நூல்கள் பிரதி (ஜெராக்ஸ்) எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வகுப்பறைகளில் புரோஜெக்டர் உள்ளது.
இந்த பள்ளியில் ஆண்களுக்கு 2 கழிவறைகள் மற்றும் பெண்களுக்கு 2 கழிவறைகள் என மொத்தம் 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன. கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கவேயில்லை. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 350 மாணவர்களுக்கும் சேர்த்து நான்கு கழிப்பறைதான் இருக்கிறது.
கல்வி நலன் விரும்பி ஒருவரின் உதவியுடன் பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர பேருந்து ஏற்பாடு செய்து தினமும் அழைத்து வரப்படுகின்றனர். இதனால் தினமும் 2 கி.மீ நடந்து வர வேண்டிய சிரமம் மாணவர்களுக்கு இல்லாமல் உள்ளது. மேலும், இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2013-ம் ஆண்டு முதல் 90%-க்கு கீழ் குறையாமல் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பெறுகின்றனர். தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதன் காரணமாக 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளிக்கு 2011-ம் ஆண்டு கட்டிடம் கட்ட அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை ஏற்கெனவே பல பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அரசு ஒதுக்கிய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர். ஆனால் சுமார் 20 செண்ட் அளவிலான மாட்டுப்பண்ணை மட்டும் அகற்றப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு 5 செண்ட் அளவிலான பள்ளி நிலம் அருகில் உள்ள கோயிலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
பள்ளி திறந்து செயல்பட ஆரம்பித்த பிறகும் மாட்டுப்பண்ணை அகற்றப்படவில்லை. பள்ளிக்கு புரவலர்களாக இருந்து வரும் ஆர்வலர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தால் அரசானது 27.6.21 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
பள்ளி வளாகத்திற்கு முன்னால் விளையாட்டு மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் மழை பெய்யும் போது எல்லாம் 3 அடிக்கு தண்ணீர் தேங்கிவிடுகிறது. மழை விட்ட பிறகும் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி விடுகிறது. தற்போது 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் தேங்கிய தண்ணீரை கொரோனா ஊரடங்கால் அப்புறப்படுத்தாமல் அப்படியே ஒன்றரை மாதமாக விட்டுவிட்டனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பள்ளி திறக்கப்படுவதால் கிராமப் பஞ்சாயத்து சார்பாக தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
1 of 6
தண்ணீரை எப்படி தேங்கவிடாமல் தடுப்பது என்பது பற்றி நிரந்தர தீர்வாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றிய அக்கறையும் அரசுக்கு இல்லை. மண்ணைப் போட்டு அந்த விளையாட்டு மைதானத்தை மேடாக்குவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும். ஆனால் அதற்கு பணம் செலவழிக்க அரசு தயாராக இல்லை.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் நிறைவடையவில்லை. முகப்பு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் குடிகாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு, பள்ளி வளாகத்தில், மதுபாட்டில்களும், குடிகாரர்கள் விட்டுச் செல்லும் மீந்து போன உணவுப்பொருட்களும் ஆங்காங்கி சிதறிக் கிடக்கின்றன.
அரசு செய்துதர வேண்டிய பல்வேறு அவசியப் பணிகளை சமூக ஆர்வலர்கள் தங்கள் முயற்சியால் நிறைவேற்றிவந்த போதும், விளையாட்டு மைதானத்தை சீர்செய்தல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட அதிக செலவு கோரும் பணிகளைக் கூட அரசு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகள் அங்குள்ள ஆசிரியர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றவர்களின் முன்முயற்சியால் தான் இயங்கிவருகின்றன. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டிய அரசோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.