13.12. 2023
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொது வினாத்தாள்:
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திமுக அரசுக்குக் கண்டனங்கள்!
இரண்டாம் பருவத் தேர்வு எழுத இருக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் வினாத்தாள் சம்பந்தமான சுற்றறிக்கை ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. இந்த இரண்டாம் பருவத் தேர்விலேயே பொது வினாத்தாள் முறையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலமாக வினாத்தாளைத் தயார் செய்து தேர்வின் போது வழங்குவர். இதுதான் ஏற்கனவே இருந்த நடைமுறை.
தற்போது இரண்டாம் பருவத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு அரசு இணையதளத்திலிருந்து வினாத்தாள்களை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. தற்போது நடைமுறையில் இருக்கின்ற அந்தந்த பள்ளிகளே வினாத்தாள் தயார் செய்வது என்ற நிலையில் இருந்து பொது வினாத்தாள் என்ற நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காலத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விதமாக மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப் போகிறோம் என்று அறிவித்த உடனே ஆசிரியர்களும் ஜனநாயக சக்திகளும் பல்வேறு இயக்கங்களும் கண்டித்துக் குரல் எழுப்பினர். அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அதன் விசுவாசிகளாக இருந்தவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு எடப்பாடி அரசு வாய் திறக்காமல் அத்துடன் நிறுத்திக் கொண்டது.
படிக்க: பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!
ஆனால் நாங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை கொண்டு வரப்போகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்த ‘திராவிட மாடல்’ அரசு தொடக்கம் முதலே புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளையும் நடைமுறைப்படுத்தி வந்தது. இப்போது இன்னும் தீவிரமாக எடப்பாடி அரசு என்ன நிலை எடுத்ததோ அதே இடத்திற்கு வந்துள்ளது திமுக அரசு.
முன்பு பேசியவர்களின் வாய்கள் எல்லாம் இப்போது ஏன் பேசவில்லை? புதிய கல்விக் கொள்கையும் கார்ப்பரேட்மயமாக்கலும், உழைக்கும் மக்களின் குழந்தைகளை கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவதும் இவர்களுக்குச் சம்மதம்தானா?
புதிய கல்விக் கொள்கை எனும் கார்ப்பரேட் கொள்கையுடன் சமரசம் செய்து கொள்ளும் இந்த திமுக அரசு உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக நிற்கும் போது, பாசிசக் கும்பல்களுடன் சமரசம் செய்து கொள்கிறதே, அதை ஏற்கிறார்களா?
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி உள்ளே வந்துவிடும் அதனால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பவர்கள், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியின் புதிய கல்விக் கொள்கை உள்ளே வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா?
ஏற்றுக்கொள்ள முடியாத இந்த சமரசத்திற்குப் பலியாகாமல், களத்தில் நின்று போராடுவதும் ஒட்டுமொத்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவதும் தான் ஆர்எஸ்எஸ் – பிஜேபி; அம்பானி அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அவசிய தேவை.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
94448 36642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube