Friday, September 30, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து - ஆய்வுக் கட்டுரை

புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை

-

கடப்பாரையை தொண்டைக்குள் குத்தியிறக்கிவிட்டு சுக்கு கசாயத்தை பரிந்துரைக்கும் புதியகல்விக் கொள்கை!
-இதற்கு சொம்படிக்கும் பார்ப்பன இந்து பத்திரிகை!

புதிய கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் அதற்கெதிரான போராட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்கள், அறைக்கூட்டங்கள் ஆகியவை பல முற்போக்கு அரசியல் இயக்கங்களாலும், கல்வியாளர்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு கடந்த நவம்பர் மாதத்திலிருந்து காட்ஸ் ஒப்பந்தத்தை அடியொற்றி எழுதப்படும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான இயக்கத்தை பல்வேறு மட்டங்களில் – அறிவுஜீவிகளிலிருந்து, மாணவர்கள் மற்றும் மக்கள் வரை எடுத்து செல்வதோடு, வரும் ஆகஸ்டு 30-ம் தேதி கருத்தரங்கமும் நடத்த இருக்கிறது.

கல்வியாளர் வசந்தி தேவி
கல்வியாளர் வசந்தி தேவி

இந்நிலையில், தமிழ் இந்து என்கின்ற பார்ப்பன பத்திரிகை தானும் இக்கொள்கையை படித்து கருத்து கூறப் போவதாக கடந்த வாரம் அறிவித்தது. அன்றையிலிருந்து ‘நம் கல்வி… நம் உரிமை!’ என்ற தலைப்பில் இக்கொள்கைகளின் பல்வேறு அம்சங்களை அம்பலப்படுத்தும் இரா. நடராஜன், வசந்தி தேவி, பிரின்ஸ் கசேந்திர பாபு, ரோஹித் தங்கர் மற்றும் நா. மணி ஆகியோரின் ஐந்து கட்டுரைகளை சனிக்கிழமை வரை வெளியிட்டது. அடுத்து ஞாயிறு வந்தது. அன்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), வித்யா பாரதி, சமஸ்க்ருத பாரதி, காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி மையம், தேசிய சிந்தனைக் கழகம் ஆகிய ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகளின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் சனிக்கிழமை சென்னையில் நடத்திய கூட்டத்தினை முக்கால் பக்கத்துக்கு தமிழ் இந்து கவர் செய்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய கல்வியாளர்(?!) மாலன், “புதிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்புகள் அரசியல் தளத்தில் இருந்துதான் வருகிறது. அறிவார்ந்த தளத்தில் இருந்து வரவில்லை” எனக் கூறினார். ஆங்கில இந்து, இக்கூட்டத்தை “கல்வியாளர்கள் (academicians) புதியகல்விக் கொள்கையை அமுல்படுத்தக் கோரி கருத்தரங்கம்” எனத் தலைப்பிட்டு ஞாயிறன்று செய்தி வெளியிட்டது. தமிழ் இந்து கட்டுரை வாங்கிப் போட்ட இரா. நடராஜன், வசந்தி தேவி, பிரின்ஸ் கசேந்திர பாபு, ரோஹித் தங்கர் மற்றும் நா. மணி இவர்களெல்லாம் மாலனுக்கும் இந்துவுக்கும் கல்வியாளர்களாகப் படவில்லையாம். இவர்கள் அரசியல்வாதிகளாம். அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வியாளர்களின் யோக்கியத்தைப் பாருங்கள்:

மாலன்
பார்ப்பனப் பத்திரிகையாளர் மாலன்

1. பார்ப்பனப் பத்திரிகையாளர் மாலன்-கல்வி பற்றி பத்திரிகையில் பெட்டி செய்தியாவது எழுதியிருக்கிறாரா என எமது சிற்றறிவுக்கு எட்டவில்லை
2. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் இயக்குநர் சதானந்தன்– ’சாக்கு யாவாரி’ என பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவலாக அறியப்பட்ட இவரது நியமனமே விதிகளுக்கு புறம்பானது என குற்றச்சாட்டுக்கு ஆளானவர். எந்த தகுதியுமின்றி ஒருநாள் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் அ.தி.மு.க சிந்தியா பாண்டியன் துணைவேந்தராக இருக்கும் போது விதிகளை மீறி நியமிக்கப்பட்டவர். அப்புறம் இவரது கல்வியியல் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வாசகர்களே கூகுளில் இவரது பெயரை தேடலாம். பல ஆண்டுகள் மூத்த கல்வியாளராக இருந்தவர் ஒரு கட்டுரை கூட எழுதியதாக எங்கும் காணமுடியவில்லை.
3. விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் முதல்வர் பிரேமா மகாதேவன், சென்னை விவேகானந்தா கல்லூரி தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.ராமச்சந்திரன் – கல்வியாளர் ஆக ஆர்.எஸ்.எஸ் கல்வி நிலையங்களில் தலைமையாசிரியராகவும் முதல்வராகவும் இருப்பது தான் தகுதி போலும்.
4. வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் – கல்வி வியாபாரியைப் பற்றி – மன்னிக்கவும் – கல்வியாளரைப் பற்றி தமிழர்களுக்கு நாம் தனியாக கூறவேண்டியதில்லை.
5. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், காமன்வெல்த் அறிவியல் தொழில் நுட்ப கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநருமான ஏ.கலாநிதி – இந்த மாபெரும் கல்வியாளர் 1999-2001 காலகட்டத்தில் அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது நடத்திய ஊழல்கள் காரணமாக ஓய்வுபெற்ற போது ஓய்வூதியம் கூட வாங்கமுடியவில்லை. ஓய்வுபெறும்போது ஓய்வுநிதியை ஒரு அரசு ஊழியர் பெறமுடியாதென்றால் அது எத்தகைய குற்றம் என்பது அத்துறையிலுள்ளவர்களுக்குத் தெரியும். தமிழ்நாடு அரசும் அண்ணாப் பல்கலைக் கழக சிண்டிக்கேட்டும் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் 2003-ல் இவர்மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இன்னும் அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இந்த கல்வியாளர் காலத்தில் தான் அண்ணாப்பல்கலைக்கழக நுழைவுத்தேர்விலும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதிலும் மாபெரும் ஊழல்கள் நடந்தேறியது. இன்று தமிழக பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் (இவர்கள் மொழியில் கூறினால்) ’திறமையற்றவர்கள்’ என முத்திரை குத்தப்படுவதற்கு அடிக்கல் நாட்டிய பெருமையும் இவரையே சேரும். ’பிராணாயாமத்தில் பொறியியல் புத்தாக்கம்’ என்ற நூல் இவரது கல்வியியல் வாழ்க்கையின் ஓர் மைல்கல் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

badri-2இப்படி சிலபல திறமைகள் வாய்க்கப்பெற்ற கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட புதியகல்விக் கொள்கை ஆதரவுக் கூட்டத்தைப் பார்க்கும் போது ஒரு பக்கம் எமக்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்து வானரங்களை யாரும் வெளியேயிருந்து அம்பலப்படுத்தி அழிக்க வேண்டியதில்லை. இவர்கள் தாமாகவே அம்பலப்பட்டு, அழிந்து போவார்கள் என்பதற்கு இக்கல்வியாளர்களே சாட்சி. நிற்க.

அடுத்தநாள் திங்களன்று பத்ரி சேஷாத்ரி என்னும் கல்வியாளர் நடுநிலை?!?1? தன்மையோடு புதிய கல்விக் கொள்கையை அணுகிய கட்டுரையை தமிழ் இந்து வெளியிட்டது. செவ்வாய்கிழமை, இன்னொரு மிகப் பெரிய கல்வியாளரும் ஞானியுமான கேக்கே மகேஷின் கட்டுரையை வெளியிட்டுள்ளது. முந்தைய எதிர்ப்பாளர்களைப் போலல்லாமல், இந்த நடுநிலையாளரும் ஆதரவாளரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாகப் படித்து வரவேற்றிருக்கின்றனர். இதில் கேக்கே மகேஷ் சற்று கூடுதலாக அவர் வேலை செய்யும் இந்து பத்திரிகை ஏற்கனவே வெளியிட்ட ஐந்து கட்டுரைகளையும் மொக்கை விமர்சனம் எனக் கிண்டலடிக்கிறார். அடுத்து எஸ்.எஸ். ராஜகோபாலனை, சமஸ் நேர்காணல் நடத்தியிருக்கிறார். கல்விக் கொள்கைக்கு சம்பந்தமில்லாத ’எம்.ஜி.ஆரு-ம் நீங்களும் நெருக்கமா?’ போன்ற மலிவான கேள்விகள் இந்த நேர்காணலில் மலிந்து கிடக்கிறது. ஆசிரியர்கள் பற்றி புதிய கல்விக் கொள்கை வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எதாவது கேள்வி கேட்டிருந்தால் அவர் தக்க பதிலடி கொடுத்திருப்பார். அதைத் தவிர்க்கவும் அதே நேரம் தன்னுடைய நடுநிலைத் தன்மையை படம் போடவும் சம்பந்தமே இல்லாத மொக்கைக் கேள்விகளை அவரிடம் சமஸ் கேட்கிறார். ஆனால் இத்தகைய மட்டரகமான கேள்விகளையும் மீறி கல்வித்துறையில் காணப்படும் கட்டமைப்பு நெருக்கடிக்கான காரணம் அரசின் கொள்கை முடிவுகள் மட்டும் தான் என்பதை ராஜகோபாலன் மிகத் தெளிவாக, ஆணித்தரமாக தன்னுடைய பதிலில் நிறுவியுள்ளார். இதைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத, பொருட்படுத்தாத சமஸ், ஏற்கனவே எழுதிவைத்த திரைக்கதைப்படி, கல்வித்துறை நெருக்கடிக்கான ஒட்டுமொத்தக் காரணமே ஆசிரியர்கள் தான் என்றும், அந்த ஓட்டையை அடைக்காமல் மீண்டும் மீண்டும் அரசிடம் கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவரக் கேட்பது அபத்தமானது என்றும் கூறி நேர்முகத்தை முடிக்கிறார். ஆசிரியர்கள் மேல் சமஸ், கேக்கே, தி இந்து மற்றும் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள கடுப்புக்கு காரணம் என்ன?

எஸ்.எஸ் ராஜேந்திரன்
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன்

இக்கருத்தைப் பிய்த்து மேய்வதற்கு முன் இந்துவின் யோக்கியதையையும் கல்வியாளர்களின் சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்து நாளேடு முதலில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களிடம் கட்டுரையை வாங்கி போட்டுவிட்டது. பின்னர் பத்ரி, கேக்கே மகேஷ் போன்றவர்களின் கல்விக் கொள்கை ஆதரவு கட்டுரைகளை பிரசுரிக்கிறது. கல்விக்கொள்கை பற்றி மிகத்தெளிவான பார்வையுள்ள மூத்த கல்வியாளரான ராஜகோபாலனை சரியாக பயன்படுத்தி கல்விக்கொள்கையையும் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக அவரது கருத்துக்களை நீர்த்து போகச்செய்யும் மொக்கை கேள்விகளை சமஸ் கேட்கிறார். அதையும் மீறி அவர் அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதை மக்கள் புரிந்து கொண்டு அவர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சமஸ் தானாக சம்பந்தமேயில்லாத ஒரு முடிவுரையை நேர்காணலுக்கு பின் பத்திரிகை மரபையும் மீறி எழுதுகிறார். இடையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடத்தப்போகும் நாட்களைத் தெரிந்து கொண்டு அதனையும் இந்து நாளேடு முக்கால் பக்கம் முழுமையாக கவர் செய்கிறது. அதன் நச்சுக் கருத்துகளுக்கு வலுசேர்ப்பதற்காகவே புதிய கல்விக் கொள்கையை வானளாவப் புகழும் கட்டுரைகளை அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுகிறது. கல்விசார் செயல்பாடு என்றால் என்னவென்றே தெரியாத பவர்ஸ்டார் பத்திரிகையாளர்களிடம் கட்டுரைகளைப் பெற்றுப் பிரசுரிக்கும் கேடுகெட்ட அயோக்கியத்தனத்தை இந்து நாளேடு செய்கிறது. இதன் வழி நடுநிலை என்ற பெயரில் வலதுசாரி இந்துத்துவ நச்சை மக்கள் மனதில் உட்செலுத்தும் திருட்டு உத்தியே இது. இதற்குமுன் ஈழம், கூடங்குளம் விவகாரம், தில்லை நடராசர் கோயில் வழக்கு போன்றவற்றிலும் இதே நடுநிலை உத்தியை பின்பற்றி ஆளும்வர்க்க நச்சுக் கருத்துக்களுக்கு சாதகமான தளத்தை இதே இந்து நாளேடு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

privatization-in-educationஒவ்வொரு முறையும் இடதுசாரி அறிவுஜீவிகள் எனத் தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்களும் இந்து நாளேடு கொடுக்கும் பக்கங்களுக்காக சோடைபோவது தொடர்ச்சியாக நடக்கிறது. இப்படி நடப்பதற்கு அடிப்படையான காரணம் இடதுசாரி கல்வியாளர்களின் கல்விக் கொள்கை பற்றிய நிலைபாட்டிலுள்ள சந்தர்ப்பவாதத்திலும் ஒட்டாண்டித்தனத்திலும் தான் உறைந்து கிடக்கிறது. இவர்கள் கல்விக் கொள்கையில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவற்றை சரிசெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற கருத்தைத் தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அதையே அவர்களும் நம்புகின்றனர். அதனால் தான் கூட்டங்களின் தலைப்புகள் ’புதியகல்விக்கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ மீது விவாதம் நடத்தி அதற்கான கருத்துக்களை இவர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு வழங்குவது போன்று தோன்றத் தக்க விதம் உள்ளன.

இதற்கு மாறாக கொள்கை என்ற பெயரில் இந்துத்துவ வானரங்கள் முன்வைப்பது காட்ஸ் நிபந்தனைகளுக்கு உட்பட்ட, அதேநேரம் பார்ப்பனர்களின் கனவான அகண்ட பாரதத்தை நனவாக்கும் முன்நகர்வின் பிரதியே என்பதை மக்களிடம் கொண்டு சொல்வதில்லை. இதில் 60% மேல் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டவை. ’இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேர்கொண்ட, உலக ஏகாதிபத்திய உழைப்பு சுரண்டலுக்கு ஈடுகொடுக்கும் திறன் வாய்ந்த இளம் தொழிலாளர்களை உலக வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றுமதி செய்யத் தகுதியான கல்வியை வழங்குவதையே’ இக்கல்விக்கொள்கை தனது இலக்கு என அப்பட்டமாகக் கூறுகிறது. அதாவது சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட, வர்க்கரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட நவீனக் கொத்தடிமைகளை தேசங்கடந்த தொழிற்நிறுவனங்களின் சர்வதேச வியர்வை தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வதைப் பற்றிய கொள்கை முடிவிது. இக்கொள்கை அப்பட்டமான ஏகாதிபத்திய மற்றும் பார்ப்பனிய நலம் சார்ந்த, மக்கள் விரோத திட்டமே என்பதை இவர்கள் யாரும் அம்பலப்படுத்துவதில்லை. அப்படி அம்பலப் படுத்தியிருந்தால் இதற்கான தீர்வு இந்த அழுகி நாறும் கட்டமைப்புக்குள் இல்லை என்பதையும் மக்களுக்கு சொல்ல வேண்டியிருக்கும். கட்டமைப்புக்கு வெளியே தீர்வு என்ற ஒன்று இருப்பதை இவர்களே முதலில் ஒத்துக் கொள்வதில்லை. அப்படிச் செய்தால் இவர்களுக்கு இந்துப் பத்திரிகை இடம் கொடுத்திருக்குமா என்பது மற்றொரு கேள்வி. இதிலிருந்தே கேக்கே மகேஷின் கட்டுரை இவர்களை மொக்கை விமர்சனம் என ஏன் கேலி செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் நமக்கு இத்தகைய சந்தர்ப்பவாத நிலைபாடுகள் இல்லாததால் நவீன கல்வியாள அவதாரமான பவர்ஸ்டார் கேக்கே மகேஷுக்கான பதிலடி நம்மிடமுள்ளது.

கல்வியைக் காவு வாங்க கட்டுமானத்தை அடித்து நொறுக்கும் கொள்கை

thank-teachersகல்விக் கொள்கையிலுள்ள நல்ல விஷயங்கள் எனப் பட்டியலிடும் கேக்கே, முதலில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் மேலான கண்காணிப்பு பற்றி இக்கொள்கை பேசும் பகுதியை வரவேற்றிருக்கிறார். இதன் பின்னால் ஒளிந்திருக்கும் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தினாலே கேக்கேவ்வின் மீதிக் கட்டுரையில் பட்டியலிடப்படும் நல்ல்ல விஷயங்கள்(?!?!) எப்படி காலாவதியானவை அல்லது கவைக்குதவாதவை என்பது தானே அம்பலமாகும் என்பதால் அதை மட்டும் இங்கு பார்ப்போம். கேக்கே தனது கட்டுரையில், ”………அறிக்கையில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், ஆசிரியர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்த சில பரிந்துரைகள். ‘ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும்’ என்ற பிரிவு ஆசிரியர்களை வாட்டி எடுக்கிறது. ‘பணிக்கு வராமை, பணிப் பொறுப்பின்மை போன்ற தவறுகளைச் செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் ஒழுங்கின்மையையும், வராமையையும் செல்பேசிகள், உடல் அடையாளப் பதிவுக் கருவிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாக்கப்படும். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணித்திறன் கணிக்கப்படுதல் (அப்ரைசல்) கட்டாயமாக்கப்படும். இந்தக் கணிப்பு அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கற்பித்தல் திறன், பாட அறிவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்… இந்தப் பரிந்துரைகளைப் பற்றி எந்த ஆசிரியர் சங்கமாவது பேசியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. வரவேற்க வேண்டாம், கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே… ஏன்? இந்தப் பரிந்துரைகளை எல்லாம் வெளியே சொன்னால், அதை மக்கள் ஆதரித்துவிடுவார்களோ என்ற பயமின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?…”

கல்வித்துறையில் இன்று நிலவும் கட்டமைப்பு நெருக்கடிக்கு ஆசிரியர்கள் மட்டுமே மூலமுதல் காரணம் போல் புதிய கல்விக் கொள்கையும் கேக்கேவும், சமஸும் ஆசிரியர்கள் மேல் வன்மத்தைக் கக்குகிறார்கள். இதில் அரசுக்கோ, அதிகாரவர்க்கத்துக்கோ, அதன் கொள்கை முடிவுகளுக்கோ எந்த பங்குமில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை இது கொடுக்கிறது. ஆனால் உண்மை என்ன?

இந்தியாவில் 1990-களில் அமுல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அதைத் தொடர்ந்து, நாட்டின் உற்பத்தி சார்ந்த தொழில்களான விவசாயம் மற்றும் தேசிய ஆலை தொழிலில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக இளைஞர்கள் எந்த துறையிலும் வேலையின்றி திரிந்தனர். சேவைத் துறை வழங்கிய ஒருசில வேலைவாய்ப்பு கொடுத்த கானல்நீர் போன்ற நம்பிக்கை காரணமாகவும், 2000-ம் ஆண்டிற்கு பின்னர் உலக வங்கி வழிகாட்டுதலில் அரசு மற்றும் நீதித் துறையின் ஒப்புதலுடன் மழையில் முளைத்த காளான்கள் போல் பல்கிப் பெருகிய 500-க்கும் மேற்பட்ட பி.எட் மற்றும் பொறியியல் தனியார் சுயநிதிக் கல்லூரிகளாலும் பெரும்பாலான முதல் தலைமுறை கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்றனர். ஆனால் வெளியில் வந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் அளவிற்கு சேவைத் துறையிலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் அல்லது ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்திய ஐ.teacher-3டி துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக படித்து முடித்த இவ்விளைஞர்கள் தனியார் பள்ளி மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக போவது மட்டுமே அவர்கள் முன்னாலிருந்த ஒரே ஒரு வழி. அவர்களும் வாழ வேண்டுமல்லவா? தற்கொலை பண்ண முடியாதே? இன்றைக்கு இவ்விளைஞர்களின் இரத்தம் தனியார் சுயநிதிக் கல்வி முதலாளிகள் என்னும் அட்டைப் பூச்சிகளால் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

2000-ம் ஆண்டுக்கு முன் வெறும் 17 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும் 12 பொறியியல் கல்லூரிகளுமே தமிழ்நாட்டில் இருந்தன. இப்பொழுதும் இவை மட்டுமே அரசால் நடத்தப்படுகிறது என்பதால், புதிய கல்விக் கொள்கை இக்கல்லூரிகளின் ஆசிரியர்களை உத்தேசிக்கவில்லை என்றே புரிந்து கொள்வோம். மீதமுள்ளது அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மட்டுமே. ஜெயமோகன் தொடங்கி டி.எஸ்.ஆர் சுப்ரமணியனிலிருந்து ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வரை அரசுப் பள்ளிக்கூட வாத்தியார்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள முக்கியமான காரணம் ஒரு காலத்தில் ஆதிக்க சாதி அதிலும் குறிப்பாக பார்ப்பன வெள்ளாள சாதிகளை சேர்ந்தவர்களே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக இருந்தனர். ஒருகாலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் அனைத்துத் துறைகளும் பார்ப்பன –வெள்ளாள சாதி ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது.

ஆனால் சுயமரியாதை இயக்கம் மற்றும் இட ஒதுக்கீடு போன்றவற்றாலும், 60-70 களில் பசுமை புரட்சிக்குப் பின் விவசாயம் நசிந்ததும், ஏகாதிபத்திய நாடுகளின் தொழில்துறையில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக விவசாயத்தைக் கைவிட்டு நகரங்களையும் அதிகார மையங்களையும் நோக்கி பார்ப்பனர்கள் நகர்ந்ததால் கல்வித்துறையில் மட்டுமன்றி உள்நாட்டில் விவசாயம் மற்றும் அரசாங்கத்தின் மூன்றாம், நான்காம் நிலை பணியிடங்களிலும் ஒரு வெற்றிடம் உருவானது. மிஷனரி கல்வி நிலையங்களின் செயல்பாட்டால் தென் தமிழகத்தில் கிருஸ்தவ நாடார்கள் கல்விகற்று 1970 களுக்குபின் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலும் அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர். மற்ற இடங்களில் இடைநிலை சாதி மற்றும் தலித் மக்கள் இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை நிரப்பினர். இதை ஜெயமோகன், அவரது தாசர்களான சமஸ் மற்றும் கேக்கே மற்றும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் இவ்வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

teacher-4இதற்கு மிக எடுப்பான உதாரணம், 1980-களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத் துறைகள் பார்ப்பன துறைத்தலைவர்களால் நிரம்பி வழிந்தது. ஆனால் 2000-ல் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பார்ப்பன துறைத் தலைவர்களே கலைத்துறைகளில் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கலைப் புலத்தில் நடந்த மாற்றம் அறிவியல் புலத்தில் இன்னும் ஏற்படவில்லை. இப்பொழுது தான் அதற்கான மாற்றங்கள் அங்கிங்கு தென்படுகின்றன. ஐ.ஐ.டி நிலவரமும் இது தான். கடந்த ஐந்து வருட காலமாக ஓ.பி.சி இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட பின்னர் தான் ஓரளவு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் பேராசிரியர்களாக உள்ளே வருகின்றனர். இதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே பல பத்து வருடங்களாக தகுதியில்லை எனக் கூறி இன்றும் கூட தலித்துக்களை உள்ளே விடுவதேயில்லை. இம்முறையில் ஓ.பி.சி.க்களை தடுத்து நிறுத்த இவர்களால் முடியவில்லை. ஏனென்றால் பார்ப்பனர்களுக்கு நிகராக அல்லது இன்னும் கூடுதலான தகுதியோடு இவர்கள் இந்நிறுவனங்களை நோக்கி சாரைசாரையாகப் படையெடுக்கின்றனர்.

இதனால் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையால் ஐ.ஐ.டி-ன் தரம் கெட்டுப் போனதாக 2010-ல் அமெரிக்காவில் கூடிய பான் ஐ.ஐ.டியன் ஸம்மிட் இல் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூக்குரல் இட்டார். அந்த வருடமே ஐ.ஐ.டி.யையே பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை முன்வைத்த கடோட்கர் கமிட்டியை அரசாங்கம் அமைத்தது. அதன் பரிந்துரையின் பேரில் அரசே தொழிற்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான மசோதாவை திருத்தியது (Institute of Technology Bill (Amendment) 2012). கடோட்கர் கமிட்டியின் முக்கியமான பரிந்துரையே நிரந்தர பேராசிரியர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தான். மாறாக அரசு நிதியுதவியை முழுமையாக நிறுத்துவது, ஃபினான்ஷியல் அட்டோனமி என்ற பேரில் கார்பரேட்டுகளிடம் ஐஐடியை தாரை வார்ப்பது, இருக்கும் பேராசிரியர்களுக்கு அப்ரைசல் போன்ற முறையை அமுல்படுத்தி ஆண்டுதோறும் பரிசீலிப்பது, ஏழு ஆண்டு வரை தற்காலிக பேராசிரியராக பணியாற்றி விட்டு பின்னர் வெளியேற்றுவது, அடிப்படை சம்பளத்தை மட்டும் அரசு நிர்ணயித்து விட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் பெறப்படும் கன்சல்டன்சி அல்லது பிராஜெக்டிலிருந்து தனக்கான சம்பளத்தை எடுத்துக் கொள்வது, அதையே திறமையாக கருதி இப்படி பெறுபவர்களுக்கு மட்டும் அப்ரைசல் வழங்குவது, தொழில்நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து துறைசார் வல்லுநர்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு ஓரிரு வாரத்திற்கே பல பத்து இலட்சம் மக்கள் பணத்தை தாரைவார்த்து வகுப்பெடுக்க செய்து அதை இ-மாட்யூல் ஆக மற்றி என்பிடிஎல் எனப்படும் மூக்ஸில் பதிவேற்றுவது, பின்னர் ஆன்லைன் வழிக் கல்வியையே முதன்மையான கற்றல் முறையாக்குவது, இதன் வழி முதலில் பேராசிரியர்களை வேலையற்றவர்களாக மாற்றி பின்னர் தேவையற்றவர்களாக்கி துரத்தியடிப்பது, கல்விக்கட்டணத்தை வானளாவ உயர்த்தி நடுத்தர வர்க்கத்திற்குக் கூட ஐஐடியில் நுழைவதை எட்டாக்கனியாக்குவது, மீறி நுழைந்தால் கல்விக்கடன் என்னும் சிலந்தி வலைக்குள் சிக்க வைத்து பெற்றோர்களை மொட்டையடிப்பது, மாணவனை வாழ்நாள் கடனாளியாக்குவது, ஐஐடிக்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு திறந்து விடுவது என இன்றைய புதிய கல்விக்கொள்கைக்கான உள்ளீட்டில் பள்ளிக்கல்விக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கடோட்கர் கமிட்டி அறிக்கை தன்னகத்தே கொண்டிருந்தது.

இந்த அறிக்கை ஏகாதிபத்திய பார்ப்பன நலனை நிரந்தரமாக பாதுகாப்பதற்காகவே காட்ஸ் இன் நிபந்தனைகளை வரிக்கு வரி அடியொற்றி, எழுதப்பட்டது. இத்தகையதொரு அறிக்கையை மாடலாக வைத்து எழுதப்பட்டுள்ள புதியகல்விக் கொள்கைக்கான ஊள்ளீட்டில் சமூக நீதியடிப்படையில் வாய்ப்பு பெற்று, சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து முதல் தலைமுறையாக கல்வி நிலையங்களை நோக்கி அணிநடை போடும் இளைஞர்களான ஆசிரியர்களைத் தவிர வேறு யார் வில்லனாக இருக்க முடியும்? இவர்கள் எலியைப் பிடிக்க இல்லத்தையே சுடுபவர்கள் என்றால் எதோ முட்டாள்களின் செயலாகத் தோன்றும். யதார்த்ததில் மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிப்பவர்களின் சதித் திட்டமிது. அதற்கு ஏற்றாற்போல தனது அணுக்கமான கூட்டாளியான ஏகாதிபத்தியத்துடன் இவை கரம் கோர்த்துள்ளன.

கல்வித்துறையில் கட்டமைப்பு நெருக்கடி இருப்பதாக ஓலமிடும் இவர்கள், அதற்கு மாற்றாக என்ன திட்டத்தை வைக்கிறார்கள்?

Pachiayappa-College-students-struggle-2ஆசிரியனைக் கண்காணிப்பதை மட்டும் தான் இவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அடுத்த வரியிலேயே மாணவனைக் கண்காணிப்பது, அதுவும் தினமும் காலையில் காவல் நிலையத்தில் குற்றவாளியின் கைரேகையைப் பதிவு செய்வது போல ஒன்றாம் வகுப்பிலிருந்து மாணவனின் கைரேகையை வருகைப் பதிவேட்டில் பதிவது (ஜெயலலிதா சமீபத்தில் சட்டமன்றத்தில் இதை அறிவித்துள்ளார்); ஆதார் அட்டையை ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கே கட்டாயமாக்குவது; லிங்தோ கமிட்டி பரிந்துரையை அடியொற்றி கல்வி நிலையங்களில் காவல்நிலையங்களை நிறுவி மாணவனை குற்றவாளி போல் நடத்தி அவனின் அரசியல் செயல்பாடுகளை தடுப்பது, அது போன்றதொரு சிந்தனை முகிழ்வதைக் கூட ஆசிட் ஊற்றி அழிப்பது, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தக்கை மனிதர்களை ‘அதாவது அரசியலற்ற, சாதிரீதியான ஒடுக்குதலை தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும், சுயமாக சிந்திக்க திறனற்ற, நவீன தொழிற்நுட்பக் கருவிகளை ஆன் – ஆஃப் செய்யும் அளவிற்கு மட்டும் திறனுடைய எதிர்த்து கேள்வியே கேட்காத தக்கையான அடிமை இளைஞர்களை உருவாக்கும்’ கொடிய திட்டத்தைத் தான் விவரிக்கின்றது.

இம்மாதிரியான இளைஞர்களிலிருந்து தான் நாளைய ஆசிரியர்கள் உருவாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் ஆரம்பப் பள்ளியிலிருந்தே கண்காணிக்கப்படுவான் என்பதால் ஏகாதிபத்திய பார்ப்பனிய நலனுக்கு விரோதமாக, பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக சிந்திக்கும் சக்தியுடைய ஒரு அறிவுஜீவி கூட உருவாகாமல் தடுக்கும் மிகப்பெரிய சதித்திட்டமிது. அன்று மனுதர்மம் கல்வி கற்றவனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது; நாக்கை பிடிங்கியது. இன்று தொழிற்நுட்பம் வளர்ந்ததால் ஐந்தாம் வகுப்பிலேயே முத்திரை குத்தி, திறன் என்ற பெயரில் முறைசாராத் தொழிலுக்குள் தள்ளிவிடப்போகிறார்கள். அதற்காகவே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தைத் திருத்தி பிறப்படிப்படையிலான வர்ணாசிரம முறையை மீண்டும் நிறுவ எத்தனிக்கிறார்கள்.

கல்விசார் செயல்பாடு என்பதே ஆசிரியரும் மாணவரும் அவர்களுக்கிடையேயான பரஸ்பர உறவிலும் தான் உள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு எதற்காக கட்டிடங்களும், விளையாட்டுத்திடலும், உட்கட்டமைப்பும்? எனவே அவற்றை தனியாருக்கு வாடகைக்கு விடப் பரிந்துரைக்கிறார்கள். ஐந்தாம் வகுப்புவரையான கல்வியை பற்றி – அதாவது 10 வயது வரையான கல்வியை பற்றி மட்டும் தான் கூறுகிறார்கள். இதிலேயே நாட்டின் 99% மாணவர்களும் வெளியேறிவிடுவார்கள். இவர்கள் யார்? கல்வியறிவில்லாத, நிரந்தர வேலையற்ற நாட்டின் 99% உள்ள முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள். இக்கொள்கை முன்வைக்கும் பாடத்திட்டப்படி மீதி 1% மீச்சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றாலே அவர்களின் பெற்றோர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். அத்தகைய சதித்திட்டமும் இந்த கல்விக் கொள்கையிலுள்ளது.

students-1புதிய கல்விக் கொள்கை வியந்தோதும் மாடல் கேந்திரிய வித்யாலயாக்களின் நிலையைக் கொண்டே இதை பரிசீலிப்போம். இங்கு ஆரம்பப் பள்ளியில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தாற்காலிக ஆசிரியர். அதில் நிரந்தர ஆசிரியர் என்.சி.சி, ஸ்கவுட், ரெட் கிராஸ், டிசிப்ளின் கமிட்டி போன்ற பலவற்றிலும் இருப்பதால் மாதத்தில் பாதி நாட்கள் மாணவர்களை அழைத்துக் கொண்டு கேம்பிற்கு செல்ல வேண்டும்.

போதாக்குறைக்கு தேர்தல் பணி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சாலைப் பாதுகாப்பு வாரம் என அரசின் எந்த திட்டம் வந்தாலும் இவர்கள் தான் செய்ய வேண்டும். அது போதாதென்று போதுமான அளவு நிர்வாக ஊழியர்களை அரசு நியமிக்காததால் சம்பள பில் எழுதுவது, தரச் சான்றிதழுக்கான கோப்புகளை உருவாக்குவது, அன்றாட அலுவலகப் பணிகளில் தலையாசிரியருக்கு உதவுவது, நூலகத்தைக் கவனிப்பது, மாணவர் சேர்க்கைக் காலத்தில் அவ்வேலைகளை செய்வது என நிர்வாக வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டும். இதற்கிடையே எங்கே கற்றல் –கற்பித்தல் செயல்பாடு நடக்கும்?

ஆரம்பப் பள்ளியில் மாணவர் ஆசிரியர் விகிதத்தின் உலகளாவிய சராசரி 16:1 தான். ஆனால் இந்தியாவில் 1995-ல் 47:1, 2000-ல் 40:1, இது 2008-ல் 34:1. இதில் ஒருவர் தற்காலிகம்; மற்றொருவர் கற்பித்தல் தவிர மற்ற அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும். நம் வீட்டில் ஓரிரு குழந்தைகளை சில மணிநேரம் கவனிப்பதே அவ்வளவு சிரமமானது. அப்படியிருக்கையில் 60 மாணவர்களை ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் ஓர் ஆசிரியர் அமைதியாக உட்கார வைப்பதே எவ்வளவு சிரமத்துக்குரியது. இவர்களின் நோட்டுகளைத் திருத்த வேண்டும், தேர்வு நடத்த வேண்டும், அதுவும் ஒவ்வொரு மாணவனையும் தொடர்ச்சியான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?

இந்தியாவிற்கே வழிகாட்டும் என்.சி.ஆர்.டி.யின் பாடத்திட்டத்தின் இலட்சணத்தை சொல்ல வேண்டியதே இல்லை. நடைமுறைசார் பாடத்திட்டம் என்ற பெயரில் கணிதத்தில் எலுமிச்சை ஜூஸ் போடுவது எப்படி என்றும், சமூகவியலில் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி என்றும் தான் கற்றுக் கொடுக்கிறார்கள். துணி துவைப்பது, வீடு பெருக்குவது, சமைப்பது போன்றவை தான் வீட்டுப் பாடம். போற்றிப் புகழப்படும் கேந்திரிய வித்யாலயாக்களின் நிலையே இப்படியென்றால் மாநில அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலையைப் பற்றிக் கூற வேண்டியதேயில்லை. ஐந்தாம் வகுப்பை எட்டும் போது இம்மாணவர்களால் என்ன விதமான திறமையை வெளிப்படுத்த முடியும். இதில் தப்பிப் பிழைப்பவர்கள் ஆறாம் வகுப்பிற்கு செல்லலாம். ஆறாம் வகுப்பிலிருந்து முறையான கல்வியையும் சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்போவதாக அறிவிக்கின்றனர். எனில் ஐந்தாம் வகுப்புவரை முறையான கல்வியைப் பெறாத மாணவர்கள் ஆறாம் வகுப்பில் எத்தகைய திறனை வெளிப்படுத்திவார்கள்? ஐந்தாம் வகுப்புவரை கட்டுப்பாடின்றி முறையற்ற வழியில் கற்பிக்கப்படும் மாணவர்களை ஆறாம் வகுப்பில் ஆசிரியரால் எப்படி கையாள முடியும். ஐந்தில் வளையாதது பதினொன்றில் எப்படி வளையும்?

இதற்கான மாற்றுத் திட்டத்தை தான் இக்கல்விகொள்கையின் இதர தலைப்புகள் சொல்கின்றன. குறிப்பாக ICT எனப்படும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்நுட்பத்தை கல்வியில் புகுத்த திட்டமிட்டிருகின்றனர்.இதன் மூலம் ஆசிரியர் என்ற வகையினத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு, பெரும்பான்மையான மாணவர்கள் டி.டி.எச் வழியாக மூன்று மணிநேரம் தினமும் பாடத்தைக் கற்க வேண்டும். இதனால் இவர்கள் குடும்பத் தொழில்களில் ஈடுபட வசதியாக இருக்கும். அப்படி ஈடுபடும் போது இவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வகைப்பாட்டிற்குள்ளும் வரமாட்டார்கள்.

இதற்காகவே ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு அறையில் ஒரு தொலைக்காட்சி நிறுவப்படும். உள்ளூரிலிருந்து தொலைக்காட்சியை இயக்கத் தெரிந்த ஒருத்தர் நியமிக்கபடுவார். அவர்தான் கேக்கே போற்றும் உள்ளூரிலே வேலைவாய்ப்பை பெறப்போகும் ஆசிரியர்?!!? அவரது வேலை குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சியை ஆன் செய்து ஆஃப் செய்வது மட்டுமே. இம்மாணவர்களுக்கு பஞ்சாயத்து சான்றிதழ் வழங்கும். பஞ்சாயத்திலுள்ள முறைசாரா வேலைகளுக்கு இச்சான்றிதழ் பெற்றவர்கள் உபயோகிக்கப்படுவார்கள். இம்முறையின் பெயர் multilevel multigrade. லெவெல் என்றால் ஆரம்பப்பள்ளி, நடுநிலை, உயர்கல்வி, முதியோர்கல்வி மற்றும் பிற. கிரேட் என்றால் வெவ்வேறு வயதினர்கள். அதாவது ஒரு முதியவரும் ஒரு 10 வயதுப் பையனும் லெவல் 1-ல் ஒன்றாக அமர்ந்து படிப்பது. இது எப்படி சாத்தியம் என்றால் டி.டி.எச் வழி மட்டும் தான். இங்கு கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் முக்கியமான பங்கேற்பாளர்களாக மாணவனும் டி.டி.எச் வழியாக பாடத்தை வழங்கும் கண்ணுக்கு தெரியாத உடாசிட்டி, கோர்ஸ்எறா, எட்எக்ஸ் போன்ற தேசங்கடந்த தொழிற்நிறுவனங்களுமே இருக்கும். multilevel multigrade கல்விமுறை பரவலாக அமுல்படுத்தப்பட்டால் ஆசிரியர் என்ற வகையினம் அதுவாகவே அழிந்து போகும். அப்படி அழிப்பதற்கான முன்னோட்டம் தான் பயோமெட்ரிக் வருகைபதிவு, கண்காணிப்பு இன்ன பிற.

மேற்கூறிய நிகழ்ச்சிப் போக்குகளை புதிய கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகளுடன் சேர்த்துப் புரிந்து கொள்ள குறைந்தபட்ச அரசியல் அறிவோ, சமூக அறிவோ, வரலாற்று அறிவோ வேண்டும். அது இருந்திருந்தால் பவர்ஸ்டார் பத்திரிகையாளர்களெல்லாம் கல்வியாளர் வேடம் போட்டு கருத்து சொல்லும் அவலம் தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்காது.

மோடி அரசின் கல்வி ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் தி இந்துவின் நோக்கத்தை புரிந்து கொள்வதும், நமது மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடுவதும் வேறு வேறு அல்ல!

– பனிமலர்

  1. The pity is that K.K.Mahesh compares the objections raised against the New Education Policy to reviews of Kamal’s film by Rajani’s fans. The defending remarks by Badri are still pathetic.He has not read the NEP properly.One major objection against NEP is centralization of powers with central government.And there were clear recommendations for giving autonomy to private universities and international universities.NEP draft itself says that education is to be globalized.But Badri says that NEP is not clear about the role of central and State governments, and about the importance to be given to privatization and globalization.As rightly put by Vinavu,none of the educationists supported the NEP during the first week.So,it became the bounden duty of Tamil Hindu to put some namesake articles from Mahesh and Badri who are not fit for the job assigned to them.

  2. மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்களின் புகைப்படத்தில் பெயர் ராஜேந்திரன் என்று தவறாக வந்துள்ளது.

  3. புதிய தலைமுறை தொலைக்காட்சில் பேச அழைத்த போது நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போனீர்களே அப்போது இது தெரியாதா? த்தூ….

    • பாருங்கள், ராமகிருஷ்ணன், வசவு என்ற பெயரில் பச்சமுத்துவை தியாகியாக போற்றி விட்டு இதில் அற ஆவேசம் கொண்டு பேசுகிறீர்கள். இது வாங்கியதுக்காக கூவியதா, வாங்காமலே கூவியதா, இல்லை பச்சமுத்து நிறுவனங்களில் வேலை செய்கிறீர்களா? வசவு பெயரில் வேறு அடையாளத்துடன் வருவதற்கு கூட பொறுமையில்லை. புதிய தலைமுறை தொலைக் காட்சி, புதிய தலைமுறை பத்திரிகை, எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், ஐ.ஜே.கே எனும் பச்சமுத்துவின் கம்பெனிகளை ஆரம்பம் முதலே தொடர்ந்து விமரிசித்து வரும் ஊடகம் வினவு மட்டுமே. ஒரு நாட்டின் அரசு, கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறையை வளைத்து திருவாளர் பச்சமுத்து உம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்திடம் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார். இப்படி உங்களை அம்மணமாக்கிய பிறகும் ஒரு திருடனுக்காக அழுகிறீர்கள் என்றால் ஒன்று உங்களுக்கு முதுகெலும்பு இருக்காது. இல்லையேல் ஒட்டுண்ணி ரகமாக இருக்கும்.

    • புதிய தலைமுறையோ பழைய தலைமுறையோ அவரவர் ஊடகத்தின் தேவைக்காகவே பேச அழைக்கிறார்கள் என்பது முதல்! அடுத்து, குறிப்பிட்ட ஊடகத்தில் பேசுவதாலேயே அவர்களின் நிலையை ஆதரிப்பதாகப் பொருளாகிவிடாது; காரணம், மக்களின் கையில் இருக்கவேண்டிய செய்தியூடகங்கள், இன்றைக்கு பெருநிறுவனங்கள் மற்றும் கட்சிகளின் ஊடகங்களாகவே இருக்கின்றன. அதாவது உரிமையாளர்களாக இருக்கவேண்டிய மக்களிடமிருந்து அவ்வுரிமை பறிக்கப்பட்டு, சுரண்டல் கொள்ளையர்களின் கையில் இருக்கிறது. முதலீடு செய்வதாலேயே அவர்களின் ஊடகம் என்று சொல்லிவிட முடியாது; அப்படியான நினைப்பும் தவறு; அதில் உழைப்பைக் கொட்டும் அந்த ஊடகத்தை நுகரும் அத்துணை மக்களுக்கும் அது சொந்தமே! மற்றது, வினவு போன்ற சமூக மாற்றத்துக்கான சக்திகள்,விமர்சனத்துடன் ஊடகங்களில் கருத்துப்பரப்பல் செய்வது சரியானதே! அப்படி செய்யக்கூடாது எனக் கூறுவோமேயானால், பொதுக் கருத்தருவாக்கத் தளத்திலிருந்து இவ்வகையானவர்களை அப்புறப்படுத்துவதாகவே இருக்கமுடியும்.

  4. தமிழ்க்கனல் அவர்களின் தெளிவான பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க