மோடி அரசினுடைய கனவு திட்டமான ‘உயர்சிறப்பு கல்வி நிறுவனம் (Institution of Eminence-IoE)’ என்ற திட்டம் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களில் IoE திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் உலக தர பட்டியலில் எந்த முன்னேற்றமும் காணவில்லை. குறிப்பாக பழைய இடத்தையும் (old ranking) தக்க வைத்துக் கொள்ள முடியாமல் உள்ளன என்கிறது அந்த பத்திரிக்கை செய்தி.
பல்கலைக்கழக உலக தரவரிசைப் பட்டியலில் (QS or TIME university global ranking) முதல் 200 இடங்களுக்குள் இந்திய உயர் கல்வி நிறுவனங்களை கொண்டுவருவதே IoE திட்டத்தின் இலக்கு என மோடி அரசு அறிவித்து, அதற்காகவே 20 கல்வி நிறுவனங்களை, கட்டிடம் கூட இல்லாத Jio-அம்பானி, Airtel-மிட்டலின் கல்லூரிகள் உட்பட பத்து தனியார் மற்றும் பத்து அரசு கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்தது. அரசு கல்வி நிறுவனத்திற்கு தலா 1000 கோடியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முழு நிதித் தன்னாட்சியும் வழங்கி IoE திட்டத்தை 2018 -லிருந்து அமல்படுத்தி வருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் IoE ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 கல்வி நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களாக பெற்றுள்ள QS தரவரிசைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ அனைத்து கல்லூரிகளும் உலகதரப் படியலில் தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரிகள் 800 வது இடத்தில் உள்ளது. மத்திய அரசு குறிப்பிட்டுள்ள மற்றொரு பல்கலைக்கழக தரவரிசை நிறுவனமான TIME பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் QS ஐ விட மோசமாகவே உள்ளது.
கடந்த வருட TIME பட்டியலில் முன்னணி IIT கள் 400 வது இடத்திற்கு மேலே தான் வந்தன. பெரும்பான்மை தனியார் கல்லூரிகளோ TIME பட்டியலில் இடம் பெறவே இல்லை. IIT மீதான விமர்சனங்கள் அதிகமாகவே ஏப்ரல் மாதம் முன்னணி IIT கள் (7 IIT) சேர்ந்து தரவரிசை தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் பல்கலைக்கழக தரவரிசைக்காக TIME நிறுவனம் சேகரிக்கும் தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் எனவே 2020 ஆண்டுக்கான TIME பட்டியலில் பங்கெடுக்கப்போவதில்லை எனவும் அறிவித்தன.
படிக்க:
♦ தோழர் வரவர ராவை சிறையிலேயே கொல்லத் துடிக்கும் மோடி அரசு !
♦ ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !
IIT -ன் குற்றச்சாட்டினை மறுத்த TIME நிறுவனம், அதன் உயர் தகவல் அதிகாரி, நவம்பர் 2019 -ல் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 23 IIT பிரதிநிதிகளிடம் சிறந்த பல்கலைக்கழங்களை தேர்ந்தெடுப்பதற்கான TIME நிறுவனத்தின் முறைகள் (methodology) பற்றி விவரித்ததாகவும் தரவரிசைக்காக இந்திய கல்வி நிறுவனங்கள் குறித்து சேகரித்த விவரங்களை மார்ச்சில் நடக்கவிருந்த இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் (Association of Indian University) ஆண்டு கூட்டத்தில் பரிமாறிக்கொள்ள இருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவரங்களை வெளியிட முடியவில்லை என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டிற்கான தேசிய தரவரிசை மதிப்பீடான NIRF பட்டியலை வெளியிட்டு பேசிய MHRD அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “உலக தர பட்டியலை நான் ஏற்கவில்லை… இந்தியாவின் NIRF ஐ புகழ்பெறச் செய்வதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை NIRF ல் பங்குபெற செய்வோம்” என சவடால் அடித்திருந்தார்.
IoE திட்டத்தினால் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களில் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் பறிபோகும்; உயர்கல்வியானது கார்பரேட்டுகளின் கட்டுப்பட்டிற்குள் செல்லும்; மாநில உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு பறிக்கப்படும் என கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு TIME/QS நிறுவனங்கள் கடைபிடிக்கும் அளவுகோள்கள்(Parameters) இந்திய கல்விச் சூழலுக்கு பொருத்தமானவையா? கடந்த ஆறுவருட காலமாக ஊதிப்பெறுக்கப்பட்ட IoE திட்டத்தினால் ஏன் சிறிதளவு முன்னேற்றத்தைக்கூட ஏற்படுத்தமுடியவில்லை? என்றெல்லாம் பரிசீலிக்காமல் TIME மற்றும் QS நிறுவனங்களின் மதிப்பீட்டு முறையை குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கிறது மோடியின் தர்பார்.
***
TIME, QS மற்றும் இதர பல்கலைக்கழக உலக தரவரிசைப்பட்டியல் என்பது உலகளாவிய உயர்கல்வி வணிக சந்தை மற்றும் நிதி மூலதனத்தோடு தெடர்புடையவை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலுள்ள பெரும் கல்வி முதலாளிகள் இந்தியா, சீனா மற்றும் இதர மூன்றாம் உலக நாடுகளிலிருந்து மேற்படிப்பிற்காக மாணவர்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையானது முக்கிய பங்காற்றுகிறது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொள்ளலாம்.
TIME/QS தரவரிசையில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில் அதிகமானவை அமெரிக்காவில் தான் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. 2018-19 ஆண்டில் அமெரிக்காவில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் மூலம் 41 பில்லியல் டாலர், இந்திய மதிப்பில் 3,10000 கோடி, வருவாய் (கல்விக்கட்டணம், கல்விக் கடன், விடுதி செலவு மற்றும் இதர செலவுகள்) அமெரிக்க பொருளாதாரத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வருவாயின் கணிசமான பகுதி கார்பரேட் கல்வி முதலாளிகள், கல்விக்கடன் வழங்கும் வங்கிகள், இணையதள படிப்பு வழங்கும் நிறுவனங்களிடமே சென்றுள்ளன. எனவே கல்விக்கொள்ளைக் கூட்டத்தின் நலங்களே பல்கலைக்கழக தரவரிசை பட்டியலுக்கு பின்னால் முக்கிய பங்காற்றுகிறது என்பது சொல்லாமலே விளங்கும்.
அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும் இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது. எனவே தான் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது என்ற முழக்கம் மோடி அரசினுடைய உயர்கல்விக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ளது. இதனை ஒட்டியே உயர்கல்வி சார்வ்த திட்டங்கள் திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
உதாரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகையோடு இந்தியாவில் படிப்பதற்காக STUDY IN INDIA என்ற திட்டம் (1000 கோடி); வெளிநாட்டு பேராசிரியர்கள் இந்தியாவில் பணிபுரிய முன்னுரிமை மற்றும் வகுப்புகள் எடுக்க GAIN திட்டம்; Institutions Of Eminance திட்டம் (10000கோடி); மாணவர்கள் மேற்படிப்பிற்காக செல்வதற்கு ஏதுவாக பலநாடுகளுடன் போடப்பட்டள்ள Mutual Recognition of Degree ஒப்பந்தம், இந்திய கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட NIRF ranking system; அமெரிக்க இணையதள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நலங்களுக்காக கொண்டுவரப்படுள்ள Online degree மற்றும் Twin degree திட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதேவேளையில் கிராமபுற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள், அரசு கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான அதிக நிதி ஒதுக்கீடு போன்ற எதற்கும் மோடி அரசு முன்னுரிமை தரவில்லை. மேற்சொன்ன திட்டங்களை NIRF பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் வந்த கல்லூரிகளில் அமல்படுத்த முன்னுரிமை தருகிறது மத்திய அரசு. இதில் 46 மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 26 மாநில பல்கலைக்கழகங்கள், 28 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதன் மூலம் முன்னணி அரசு கல்வி நிறுவனங்களை சந்தையின் பிடிக்குள் கொண்டு செல்வதையும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் கொள்ளையும் உறுதிப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.
மாநில அரசுகளும் தங்களுடைய உயர்கல்வி சார்ந்த திட்டங்களில் மத்திய அரசின் அனுகுமுறையைத்தான் கையாளுகின்றன. கல்லூரிகளுக்கு NIRF ranking மற்றும் NAAC அங்கீகாரம் கட்டாயம்; கல்லூரிகளின் தரவரிசையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வது; இணையதள வகுப்புகளை கட்டாயமாக்குவது போன்றவைகள் அரசு கல்லூரிகளிலும் நிர்பந்திக்கப்படுகின்றன. போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான பேராசிரியர்கள் இல்லாத இக்கல்லூரிகள் எவ்வகையில் NIRF/NAAC ல் போட்டியிடமுடியும்.
இந்தியாவில் கிராமப்புற மற்றும் சமூக-பொருளாதார நிலைகளில் பின்தங்கிய சூழலிலுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநிலக் கல்லூரிகளே முக்கிய பங்காற்றுகின்றன. உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களில் 65 சதவிகிதம் பேர் இக்கல்விநிறுவனங்களிலிருந்து தான் பட்டம் பெறுகின்றனர். ஆனால் மோடியோ ‘உயர்கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம்’ என்ற போர்வையில் அம்பானி, மிட்டல், பிர்லா, ஜிண்டால், அதானிகளிடம் உயர்கல்வியை ஒப்படைப்பதற்காக செய்யப்படும் திட்டங்கள் அனைத்துமே அரசு பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளை வருங்காலங்களில் இல்லாமலே செய்துவிடும்.
அதற்கான தொடக்கமாகவே IoE திட்டம் உள்ளது. மோடி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட எந்த திட்டங்களும் சொல்லிகொண்ட இலக்குகளை எட்டியதே இல்லை. மாறாக அத்திட்டங்கள் வாயிலாக அந்த துறைகளை அந்நிய முதலீடுகளின் பிடியில் சிக்க வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது உயர்கல்வியும் சேர்ந்துள்ளது.
– ராஜன்