சிறையில் இருக்கும் தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற பின்னரும் அவருக்கு முறையான மருத்துவ வசதியை ஏற்பாடு செய்ய மறுத்து வருகின்றன மத்திய மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள். மோசமாகி வரும் தோழர் வரவர ராவின் உடல்நிலை குறித்து கடந்த சனிக்கிழமை (11.07.2020) அன்று அவரது குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பீமா கொரேகான் கலவரம் தொடர்பான சதி வழக்கின் கீழ் 11 சமூகச் செயற்பாட்டாளர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான தோழர் வரவர ராவ், புனையப்பட்ட பொய்க் கதைகளின் அடிப்படையில் ஜூன் – 2018-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் துவங்கிய நிலையில், மும்பை கொரோனா பாதிப்பின் மையப் புள்ளியாக இருக்கும் சூழலில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) தோழர் வரவர ராவை மும்பை தலோஜா சிறையிலடைத்தது.
விசாரணை என்ற பெயரில் கடந்த 22 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவர ராவை, அவரது உடல்நிலை, கோவிட்-19 தொற்று மற்றும் வயதைக் கணக்கில் கொண்டு பிணையில் விடுமாறு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டு வருகின்றனர். ஆனால் 5 முறையும் அவரது பிணைக்கு என்.ஐ.ஏ எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவரது பிணையை மறுத்துள்ளது நீதிமன்றம்.

கடந்த மே 28-ம் தேதி தோழர் வரவர ராவ் சிறையில் மயக்கமடைந்து கீழே விழுந்த சூழலில் அவரை மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் சேர்த்தது சிறை நிர்வாகம். அவரது உறவினர்களையோ தோழர்களையோ அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி அவருக்கு பிணை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது என்று கூறி மீண்டும் அவரை சிறையில் அடைத்தது போலீசு.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில், தோழர் வரவர ராவ் மற்றும் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்கள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகவாதிகளும் முற்போக்காளர்களும் மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

படிக்க:
கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விசிக, திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதமெழுதியிருக்கின்றனர்.

இ.க.க (மார்க்சிஸ்ட்)-யைச் சேர்ந்த தோழர் பிருந்தா காரத், வரவர ராவ் உட்பட பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இவை எதையும் கருத்தில் கொள்ளாமல், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறியது. இச்சூழலில்தான் வரவர ராவின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது. கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று தொலைபேசி மூலம் தோழர் வரவர ராவுடன் பேசிய அவரது குடும்பத்தாருடன் அவரால் தெளிவாகவும், கோர்வையாகவும் பேச முடியவில்லை. இது குறித்து கடந்த ஜூலை 11-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் பேசிய அவரது குடும்பத்தினர், தோழர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், அவரது செயல்பாடுகள் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரது துணைவியார், தன்னுடன் வரவர ராவ் தொலைபேசியில் பேசுகையில் கோர்வையற்று அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த தனது தந்தை ஈமக் கிரியை மற்றும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தனது தாயாரின் ஈமக் கிரியை பற்றி சம்பந்தமில்லாமல் அவர் பேசியதாகவும் கூறுகிறார்.

மேலும், அவரது பேச்சு தெளிவற்று கோர்வையற்று இருப்பதற்கு, அவரது உடலில் ஏற்பட்டுள்ள எலெக்ட்ரோலைட் சமமின்மை மற்றும் சோடியம், பொட்டாசியம் அளவில் ஏற்பட்டுள்ள குறைபாடு ஆகியவையே காரணம் என்றார். சோடியம், பொட்டாசியம் அளவுகளின் குறைபாடு மூளையை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவரை உடனடியாக சிறையில் இருந்து பிணையில் விடுவித்து சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் தரவேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறையில் அவரை அருகில் இருந்து பார்த்துக் கொண்ட சக போராளியான கான்சால்வேஸ் வரவர ராவால் தனியாக நடக்கவோ, கழிவறைக்குச் செல்லவோ, அல்லது பல் தேய்க்கவோ முடியாத நிலையில் இருக்கிறார் என்று கூறியிருப்பதையும் அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீவிரமான கணைய ஒவ்வாமை, இருதய நோய்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் தோழர் வரவர ராவ் கொரோனாவால் எளிதாகத் தாக்கப்படும் நிலையில் இருக்கிறார். இந்தச் சூழலிலும் அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்காமல் இருப்பது அவரை நேரடியாகக் கொலை செய்வதற்குச் சமமானது.

தண்டனை பெற்ற சிறைக் கைதியே ஆனாலும் உயிர் வாழும் உரிமை ஒவ்வொரு நபருக்கும் உண்டு. அதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதிபடுத்தியிருக்கிறது. ஆனால், கடந்த 22 மாதங்களாக (கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக) இட்டுக்கட்டப்பட்ட ஒரு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையிலடைக்கப்பட்டு அடிப்படை மருத்துவ வசதிகளும் மறுக்கப்பட்டு வருவது வக்கிரத்தின் உச்சமாகும்.

பாசிசமயமாகியிருக்கும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பில் நீதிமன்றம் உள்ளிட்டு அனைத்தும் தமது வக்கிர முகத்தை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டு நிற்கின்றன.
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக இன்று நாம் குரல் கொடுக்கத் தவறுவது பாசிசத்தை அரவணைத்துக் கொள்வதற்குச் சற்றும் குறைவில்லாதது. பாசிசத்திற்கு எதிராக பெருங்குரல் கொடுப்போம் ! சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு துணை நிற்போம்!


– நந்தன்
செய்தி ஆதாரம்: த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க