நக்கீரன் கோபாலை விடுதலை செய் !

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு.

மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ‘நக்கீரன்’ கோபால் இன்று (9-10-2018) காலையில் போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித உரிய ஆவணங்களுமின்றி அவரை போலீசு கைது செய்திருக்கிறது.

நிர்மலா தேவி விவகாரத்தை பல பத்திரிகைகளும் மறந்துவிட்ட நிலையில், தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை குறித்து அம்பலப்படுத்தி வருகிறது நக்கீரன். இது தொடர்பாக சமீபத்திய இதழில் தமக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஆளுநரை நிர்மலாதேவி 4 முறை சந்தித்தார் என்ற செய்தியை நக்கீரன் இதழ் பிரசுரித்தது.

ஆளுநர் – நிர்மலாதேவி விவகாரத்தை மக்கள் மறந்துவிடுவார்கள், எளிமையாகக் கடந்து  சென்றுவிடலாம் என நினைத்த ஆளுநர் தரப்புக்கு தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டும் நக்கீரன் பெரும் குடைச்சலாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் கொடுக்கப்பட்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்து அடையாறு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிப்பதாக கூறிய போலீசு, பின்னர் அலைக்கழித்து அவரை சிந்தாதிரிப் பேட்டை போலீசு நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறது. அவர்மீது தேச துரோகம் (124-A), வன்முறையைத் தூண்டுதல், தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசு நிலையத்தில் கோபாலைச் சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. நக்கீரன் கோபாலின் வழக்கறிஞராக அவரைச் சந்திக்கவிருப்பதாகச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அனுமதிக்க மறுத்தது போலீசு. அதைத் தொடர்ந்து வைகோவும், பிற பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகோவைக் கைது செய்து அங்கிருந்து அகற்றியது போலீசு. ஒரு வழக்கறிஞரை சந்திக்கும் உரிமை கூட இங்கு நக்கீரன் கோபால் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

’நக்கீரன்’ கோபால்

நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியதும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஆளுநரே, ஒரு விசாரணைக் கமிசனுக்கு உத்தரவிடும் இழி சூழலையும் தமிழகம் கண்டது. குற்றவாளியே குற்றத்தை விசாரிக்க விசாரணைக் கமிசன் போட்ட கதைதான் இது.

தமிழகத்தில் இரண்டு பொம்மைகளை ஆட்சிக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு பாஜக-வின் நிழல் அரசாங்கம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் உட்பட யாரை முதல்வர் சந்தித்தாலும், உடன் நிழலாகவே தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும் அதில் கலந்து கொள்கிறார். பாஜக-வின் நிழல் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பழங்கிழமான பன்வாரிலால் புரோகித்தைக் காப்பாற்றவே நக்கீரன் கோபாலின் மீதான இந்த கைது நடவடிக்கை ஏவப்பட்டிருக்கிறது. எச்.ராஜாவிற்கு ஆளுநர் மாளிகையில் விருந்து வைத்தவர் புரோகித் என வைகோ அம்பலப்படுத்துகிறார்.

நக்கீரன் கோபால் கைதை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு  அமைப்புகளும், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக-வை அம்பலப்படுத்தும் விதமான எந்த ஒரு விவகாரமும் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது என பிற ஊடகங்களை பகிரங்கமாக மிரட்டுவதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை. சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி.

ஜனநாயகத்தைக் காப்பதற்கு, மத்தியில் ஆளும் பாசிச கும்பலையும், தமிழகத்தை ஆளும் அதன் அடிமைக் கும்பலையும் விரட்டியடிப்பதே நம்முன் உள்ள ஒரே தீர்வு.

நக்கீரன் கோபால் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

♦ நக்கீரன் ஆசிரியர் கோபாலை உடனே விடுதலை செய்!
♦ கவர்னர் பன்வாரிலாலை திரும்பப் பெறு!
♦ தமிழகத்தில் பாசிசம் தலை விரித்தாடுகிறது.
♦ எதற்கு எடுத்தாலும் தேசதுரோக வழக்கா?

“ஹைகோர்ட்டாவது மயிராவது, தமிழக போலீஸ் அனைவரும் லஞ்சப் பேர்வழிகள்“ எனப் பேசிய எச்.ராஜாவிற்கு கவர்னர் மாளிகையில் விருந்து. பெண்கள் சமூகத்தையே கேவலமாக பேசிய எஸ்.வி. சேகர் அரசு மரியாதையுடன் உலா வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பேராசிரியரே மாணவிகளை பல்கலைகழக அதிகாரிகளுக்கும், கவர்னர் மாளிகை வட்டாரத்திற்கும் பாலியல் இச்சைக்கு கூட்டிகொடுக்க முயன்றதை அம்பலபடுத்தினால் தேசத்துரோக வழக்கில் கைதா?. இது என்ன நாடா?

பேசத் தடை, பாடத் தடை, கூட்டம் நடத்தத் தடை, நடந்து போகத் தடை, படம் வரையத் தடை, ஆறுதல் சொல்லத் தடை, பிரசுரம் கொடுக்கத் தடை, போஸ்டர் ஒட்டத் தடை, எழுதத் தடை, போராடத் தடை, பத்திரிகை ஊடகங்கள் அச்சுறுத்தி முடக்கம், இதுதான் ஜனநாயக ஆட்சியின் அருகதை.

இனியும் எதிர்த்து போராட அஞ்சினால், தயங்கினால், பின்வாங்கினால் நாயினும் கீழாக நடத்தப்படுவோம். அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை.

வழக்கறிஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
9-10-2018

*****

நக்கீரன் கோபால் கைது ! முகநூலில் செயற்பாட்டாளர்கள் கண்டனம் !

Villavan Ramadoss

நக்கீரன் கோபால் கைது.
சக ஊடகங்கள் நாங்களும் ஊடகங்கள்தான் என நிரூபிக்க ஒரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.
இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் இன்னொரு நிர்மலா தேவி என நிரூபணம் ஆகும், அவ்வளவுதான்.

அன்சாரி முஹம்மது

தமிழக பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களின் உண்மையான முகத்தை பார்க்க தமிழக மக்களுக்கு கிடைத்திருக்கும் அபூர்வமான சந்தர்ப்பம்.!! பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார்களென்று….

Ashok.R (Don Ashok)

அடக்குமுறையும், அத்துமீறலும் ஆட்சி செய்யும்போது எங்காவது சிறுநம்பிக்கையாக ஒரு ஒளிக்கீற்று தோன்றும். நக்கீரன் அப்படித்தான் இதுவரையில் எப்போதும் இருந்திருக்கிறது. பெருமுதலாளிகளின் ஊடகங்கள் எல்லாம் ரஃபேல் ஊழலில் இருந்து கவர்னரின் லீலைகள் வரை பேசாமல் கோமாளித்தன விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு மின்மினிப்பூச்சியாக வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த நக்கீரனையும் அணைக்க வேண்டும் என அடிமையரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால் முன்காலங்களில் ஃபாசிஸ்டு ஜெயலலிதா ஒவ்வொரு முறை அந்த மின்மினிப்பூச்சியை அழிக்க முயற்சி செய்தபோதெல்லாம் அது ட்ராகனாக மாறி இன்னும் அதிக வெளிச்சத்துடன் நெருப்பைக் கக்கியிருக்கிறதேயொழிய அணைந்த வரலாறு ஒருபோதுமில்லை. இனியும் அப்படித்தான். நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு கடுமையான கண்டனங்கள். அவரை உடனே விடுதலை செய்வதோடு இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்டோரை கைது செய்ய முயற்சிப்பதையும் உடனே கைவிட வேண்டும்.

#ReleaseNakeeranGopal

Abdul Hameed Sheik Mohamed

ஆளுநரை விமர்சித்து செய்திவெளியிட்டால் அதற்கு தேச துரோக வழக்கு.. ஆளுனர்தான் இந்திய தேசம் என்பதையும் ஆளுநர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறைப்பதுதான் இந்த தேசத்தை பாதுகாப்பது என்பதையும் எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிக்கொடுங்கள். நானே அரசன், நானே நாடு என்று சொல்லவர்களையெல்லாம் வரலாறு எங்கே அனுப்பி வைத்ததோ அங்கேதான் இவர்களும் அனுப்பபடுவார்கள்.

Yuva Krishna

முந்தைய காலங்களில் அண்ணன் கோபால் மீது கை வைத்தபோதெல்லாம் ஆளுங்கட்சியின் அஸ்திவாரமே நொறுங்கியது என்பது வரலாறு. அது தொடரும்.

Sugumaran Govindarasu

நக்கீரன் கோபால் கைது : வன்மையாக கண்டிக்கிறேன் !

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறு செய்தி வெளியிட்டார் என்றால் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அது அவதூறான செய்தியா இல்லையா என்பது குறித்து சட்டப்படி விளக்க அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அதைவிடுத்து வழக்கு, கைது என்பது கருத்துரிமைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்.

Jdr Trichy

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் சமீப காலமாக கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான போக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளதை கண்டிக்கிறோம்.

மேலும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் வார இதழின் உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து புனே செல்ல இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது தமிழக ஆளுநரின் பணிகளில் தலையிடுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து. மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் செயலை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

சமூக அவலங்களையும், ஊழல்களையும், அரசும், ஆட்சியாளர்களும் மூடிமறைக்கும் பொழுது அதனை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் மிக உன்னதமான பணியை செய்யும் பத்திரிக்கையாளர்களையும், ஊடகங்களையும் நசுக்கும் நோக்கில், அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, பொய்வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட செயல்கள் தொடருமேயானால், ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று பொருள்.

தமிழகம் மிக நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்தபோதெல்லாம், அவற்றை தான் சார்ந்த ஊடகத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்து வந்தவர் நக்கீரன் கோபால், குறிப்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு பேருதவியாக செயல்பட்டவர் இவர்.

இது மட்டுமல்லாமல் தமிழக ஊடகங்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகள் நடத்தி வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றியும் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மற்றும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நடந்தவை நடந்தவையாக நக்கீரன் இதழ்களில் பதிவு செய்துவரும் நிலையில், அதற்கு மாற்று கருத்து இருக்குமேயானால் சட்டத்தின் மூலம் எதிர்கொள்ளாமல் நக்கீரன் கோபால் அவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, நடந்த உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் (All are equal before the eyes of law) என்ற போதிலும் வழக்கு பதிவு செய்யப்பட்ட சிலர் சுதந்திரமாக போதுமேடைகளில் தோன்றும் நிலையில் சிலர் மட்டும் ரகசியமாக கைது செய்யப்படுவது சட்டத்தின் ஆட்சி (RULE OF LAW) தான் நடக்கிறதா என்ற ஐயத்தினையும் அச்சத்தினையும் ஏற்படுத்துகிறது.

எனவே தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட வழக்குகளையும், கைது நடவடிக்கைகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்றும், நக்கீரன் கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு
ஷானு, தலைவர்

ஜீ.ஜான்டேவிட்ராஜ், செயலாளர்
திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்
9677081363

அன்சாரி முஹம்மது


இதுதான் இவனது (தினகரன்) உண்மையான முகம். இனியாவது இவன் யாரென்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

 

 

Kokkarakko Sowmian

இணையதள செயல்பாட்டாளர்களே,

நீங்கள் எந்த கட்சி அல்லது சார்புநிலை கொண்டவராக இருப்பினும், நக்கீரன் கோபால் கைதினை இன்னுமொரு பிரேக்கிங் நியூஸாக மட்டுமே கடந்து சென்றால்..

நாளை நீங்கள் இங்கே எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லது எழுத்திற்கும் கூட இந்த அரசால் கைது செய்யப்படலாம் என்பதை உணருங்கள்..!

இது நக்கீரன் கோபாலுக்கான பிரச்சினை அல்ல…, அவர் இது போல பல வழக்குகளை சந்தித்து வெளியே வந்துள்ளார்..!

ஆனால் இந்த அரசு அவரைக் கைது செய்து, இணையத்தில் அரசுக்கு எதிராக எழுதுகின்ற ஒவ்வொரு தனி நபருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்..!

ஒரு ஜனநாயக நாட்டில் எதையும் விட அதி பயங்கரம்…. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அரச நடவடிக்கையே..! இதை அனுமதித்தால், இங்கே ஒவ்வொரு குடிமகனும் அடி மாடாகவேதான் வாழ வேண்டியிருக்கும்..!

3 மறுமொழிகள்

  1. காமுகன் கவர்னர் ஆகலாம்
    ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கிரிஜா மூலம் ஆட்சி செய்ய முன்னாள் கைக் கூலி ஊழல் பேர் வழி தலைமைச் செயலாளர் மாற்றம் பிறகு தண்டனை எதுவும் இன்றி மாற்று பணி.
    நக்கீரன் கோபால் கைது பேச எழுத விமர்சிக்கத் தடை பாசிசம் நாடாள்கிறது. வெறுமனே பார்த்து இருந்தால் நாளை யாரும் பேசவே முடியாமல் போவோம். நக்கீரன் கோபால் விடுதலைக்கு குறள் கொடுப்போம் பாசிசத்தை வீழ்த்த ஒன்றிணைவோம்.

  2. நக்கீரன் பத்திரிகையை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இது ஒரு பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை என்று தெரியும். தி.மு.க. மாறன் சகோதரர்களின் கார்பொரேட் நிறுவங்களுக்கு ஆதரவு தரும் ஒரு உயர் நிலை பத்திரிகை. இதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் கார்போராட்டுகளே!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க