20.09.2022

கள்ளக்குறிச்சி இருப்பது தமிழ்நாட்டிலா? உத்தரப்பிரதேசத்திலா?

சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் பிணையை ரத்து செய்க!

ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்துக!

நேற்றைய தினம் (19.09.2022) கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தொடர்பாக செய்தி சேகரித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்த நக்கீரனின் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமராமேன் அஜித் ஆகியோரை சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள்பிரகாஷ் மற்றும் அதிமுக கவுன்சிலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய கும்பல் இரண்டு முறை தாக்கியிருக்கிறது.

படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப்பிறகு  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கவுன்சிலர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கவுன்சிலர் ராஜசேகர் என்பவர் யார்? ஆதிக்க சாதிவெறி சங்கத்தின் முக்கிய பிரமுகரான ராஜசேகர் சமீபத்தில் பி.ஜே.பி.யில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த கவுன்சிலர் ஆனவர். சக்தி மெட்ரிக் பள்ளி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு தன்னுடைய ஆதிக்க சாதிவெறி கூலிப்படையை வைத்து போலீசுடன் கூட்டுச்சேர்ந்து சாலையில் வந்தவர்கள், சென்றவர்கள் அனைவரையும் பிடித்து அடித்து  சாதிரீதியாக இழிவுபடுத்திய கிரிமினல்.

பள்ளியை சேதப்படுத்தினார்கள் என்று ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களை கைது செய்த போலீஸ்,  இப்போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் தேடித்தேடி பிடித்து கைகால்களை உடைத்த இந்த ராஜசேகர் கும்பல் மீது கை வைக்க துணியவில்லை. ஏனென்றால் மக்கள் மீதான தாக்குதல் என்பதே ராஜசேகரும் போலீசும் சேர்ந்து இணைந்து நடத்தியதுதான்.

ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.

ராஜசேகர் மற்றும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளுக்கு இப்படிப்பட்ட தைரியத்தையும் துணிவையும் கொடுத்தது தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகளே.

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் இப்பொழுது இப்பள்ளியின் கிரிமினல் தனமான நடவடிக்கைகளுக்கு பதில் கூறியாக வேண்டும்.

சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர், அவருடைய மனைவி உள்ளிட்ட அனைவரின் பிணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கு நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்டோர் மீதான தாக்குதலே முக்கியமான ஆதாரம்.

ஆகவே, இந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மட்டுமல்ல; இப்பள்ளிக்கு ஆதரவாக வந்த அனைத்து கல்வி நிறுவனங்களும் அரசுடமையாக்கப்பட வேண்டும்.

இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் அப்பள்ளியின் தாளாளர் தம்பி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். மேலும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க