தமிழ்நாட்டின் முன்னணி இதழ்களான ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் போன்றவற்றை நடத்திவரும் விகடன் குழுமம், மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்துள்ளது. இந்நடவடிக்கையை புதிய ஜனநாயகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் புகழுக்காகவும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது, விகடன் குழுமத்தின் இலாபவெறியின் உச்சமாகும்.
சட்டவிரோதமாக ஊழியர்களைத் தனித்தனியாக அழைத்து, பணியிலிருந்து விலகிக்கொள்வதாக எழுதிக்கொடுக்கும்படி நிர்பந்தித்தும் ‘விலகல் கடிதம்’ எழுதிக் கொடுக்காதவர்ளை மிரட்டி எழுதிவாங்கியும் அடக்குமுறை செலுத்தியுள்ளது, விகடன் குழுமம். சட்டப்படி வழங்கவேண்டிய இழப்பீடுகளை கொடுக்காமல் இருப்பதற்காகவே ஊழியர்களிடம் விலகல் கடிதங்களை விகடன் குழுமம் எழுதி வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டுகிறது, சென்னை பத்திரிகையாளர் சங்கம்.
கடந்த ஆகஸ்ட் மாதமே பணிநீக்கத்திற்கு திட்டமிட்டு இருந்தாலும், செப்டம்பர் மாதத்தில் “விகடனும் கலைஞரும்” என்ற நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமிட்டு இருந்ததால், அந்நிகழ்ச்சியில் பணிநீக்கம் பேசுபொருளாகக்கூடாது என்பதற்காக, நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிறைவடையும் வரை பணிநீக்கத்தை தற்காலிகமாக தள்ளிவைத்திருந்தது. நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நிறைவடைந்த இரண்டு நாட்களுக்குள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, விகடன் குழுமம்.
படிக்க: விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !
ஆனந்த விகடன் இதழாசிரியரான சுகுணா திவாகர் என்னும் ரீ.சிவக்குமார், “15 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்த”தாக தன்னுடைய எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பத்திரிகையாளரான ராஜாதுரைகண்ணன், “அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் இன்னும் சிலரை பணிநீக்கம் செய்ய தயார் ஆகிவருகிறது” என விகடன் நிறுவனத்தின் பணிநீக்கத்தை பற்றி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னர் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலத்திலும் மூத்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, விகடன் குழுமம். அப்போதும் இதைப்போலவே சட்டவிரோதமாக ஊழியர்களை வற்புறுத்தியும் மிரட்டியும் விலகல் கடிதத்தை எழுதி வாங்கியது.
“கொரோனா காரணமாக நிறுவனம் சந்திக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு பல தொழிலாளர்கள் அவர்களாகவே வேலையை விட்டு வெளியேறியதாக” மனசாட்சி இல்லாமல் புளுகியது, விகடன் குழுமம். ஆனால், விகடன் குழுமத்தின் வரவு-செலவு ஆண்டறிக்கையை, கணக்கு தணிக்கையாளர் மூலம் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்” ஆய்வு செய்ததில், விகடன் குழுமத்தின் கூற்றுப் பொய் என அம்பலப்பட்டுப் போனது.
ஒருபுறம், இலாபத்தை அதிகரிப்பதற்காக அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம், மறுபுறம் “விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்” என்ற பெயரில் அற்பக்கூலி கொடுத்து பயிற்சி மாணவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து வருகிறது.
படிக்க: 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !
விகடன் நிறுவனத்தின் 2020-ஆம் ஆண்டு பணிநீக்கத்தின் போது, பிற பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் கண்டனக்குரல்கள் எழுந்தன. ஊரடங்கு சூழலில் கூட, 170 ஊழியர்களின் பணிநீக்கத்தைக் கண்டித்து விகடன் அலுவலக வாயிலின் முன்பு போராட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி, “மேற்கு தொடர்ச்சி மலை” திரைப்படத்திற்காக, விகடன் குழுமம் வழங்கிய விருதை திருப்பி அனுப்பினார். ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவான அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது கவலைக்குரியதாகும்.
விகடன் குழுமத்தின் தற்போதைய ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு எதிராக, “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம்”, “சென்னை பத்திரிகையாளர் சங்கம்” தவிர பிற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள் அமைதி காக்கின்றன. கலைஞர்களை ஊக்கப்படுத்த, “பொற்கிழிகள்” வழங்கிக் கொண்டிருந்த, ஊடகவியலாளர்களுக்கு உரிமைக்குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்கின்ற தி.மு.க. அரசும் இந்த ஊடகவியலாளர்களைக் கண்டுகொள்ளவில்லை.
சமூக ஊடகத்துறை வளர்ந்து வருகின்ற, ஊடகத்துறை டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கின்ற, ஊடகத்துறையின் முக்கியத்துவம் மென்மேலும் அதிகரித்து வருகின்ற இக்காலத்தில், ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிக முக்கியத்துவமுடையதாகும். முக்கியமாக, பாசிச அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில், உரிமைகளற்ற ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் ஊடகத்துறை செல்வதானது, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும்.
எனவே, பணிநீக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய முதற்கடமையாகும்.
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)