‘’புரோக்கர் பேராசிரியை நிர்மலாதேவி கைது! சிறை! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது?’’ – என்ற தலைப்பில், ஏப்ரல் 23 அன்று மதுரையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார், பேராசிரியர்கள் சீனிவாசன் மற்றும் இரா. முரளி, ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர் லயனல் அந்தோணிராஜ், ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

‘’டாஸ்மாக்கை எதிர்த்து பெண்கள் போராடினால் எட்டி உதைக்கிறது போலீசு. கல்வி உரிமைக்காக மாணவர்கள் போராடினால் தடியடி நடத்துகிறது போலீசு. சமூக அவலங்களை அம்பலப்படுத்தி பாட்டுப் பாடிய தோழர் கோவனை, கதவை உடைத்து இழுத்துச் செல்கிறது போலீசு. ஆனால் புரோக்கர் வேலை செய்த நிர்மலாதேவிக்கு, ஆவணங்களை அழிக்கவும் உயர்மட்டங்களோடு கலந்துபேசி முடிவுக்கு வருவதற்கும், ஆறு மணி நேரம் அவகாசம் வழங்குகிறது. இதுனுடைய அர்த்தம் என்ன?’’ என்று கேள்வியெழுப்பிய தோழர் ஆனந்த், ‘’மாணவர்கள் சங்கமாக ஒன்று சேராமல் ஒதுங்கிப் போவதால்தான், கேட்பாரற்று இருக்கும் மாணவர்களை அதிகார வர்க்கம் தங்கள் இஷ்டம் போல் வளைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறது.’’ என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பேராசிரியர் விஜயக்குமார்  தனது உரையில், ‘’ நிர்மலாதேவியை கைது செய்த போலீசு துணைவேந்தரையும் ஆளுநரையும் இன்னும் ஏன் கைது செய்ய வில்லை?’’  எனக் கேள்வி எழுப்பியவர், ‘’பல்வேறு சிறப்பான பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் கொண்டிருந்த இப்பல்லைக்கழகம், கல்யாணி மதிவாணன் மற்றும் அவருடைய அடிவருடி செல்லத்துரை போன்றவர்களால் சீரழிந்துவிட்டது.  இவர்களை பல்கலைகழகத்திலிருந்து விரட்ட மாணவர்களும் மக்களும் தான் முன்வரவேண்டும்’’ என்றார்.

‘’பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பாலியல் கிரிமினல்களாக உள்ளனர், சிறுமிகளை வல்லுறவு செய்கின்றனர், நாடாளுமன்றத்தில் அதிகமான பாலியல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.பிக்களில் பா.ஜ.க. வினர்கள் தான் அதிகம். இந்த கும்பலில் ஒரு ஆளுதான் ஆளுநர் புரோகித்’’  என்றார் ம.க.இ.க. மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம்.

” இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் காரிதுப்பும் நிலையில் தான் உள்ளன. தகுதியே இல்லாத செல்லத்துரை போன்ற நபர்கள் துணைவேந்தர்களாக இருந்தால் எப்படி உருப்படும்?’’ எனச் சாடிய பேராசிரியர் சீனிவாசன், ‘’இந்த சம்பவம் நடந்த பிறகு எந்த பொற்றோர்களாவது தன்னுடைய பெண் பிள்ளைகளை பல்கலைகழகங்களுக்கு படிக்க அனுப்ப தைரியம் வருமா? இவர்களுக்கெல்லாம் பெற்றோர்கள் போராசிரியர்கள் மாணவிகள் இணைந்து செருப்படி கொடுத்தால் தான் நம்முடைய குழந்தைகள் நிம்மதியாக படிக்க முடியும்’’ என்றார்.

பேராசிரியர் இரா. முரளி , தனது உரையில், ‘’ஏதோ ஒரு நகரத்தில் ஆயிரம் பேர் துப்பாக்கியுடன் ஊர்வலம் போகின்றார்கள். மக்களுடைய பிரச்சனைகள் தொடர்ச்சியாக இப்படி தீர்க்கப்படாமல் அதிகரித்து கொண்டே சென்றால் நாமும் இதை போல ஆயுதங்களை தூக்கிக்கொண்டு செல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது’’ என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

‘’நாம் ஆளுநரை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் உண்மை நிலைமை என்ன? பதவியில் இருக்கக் கூடிய ஆளுநரையோ, நீதிபதிகளையோ, குடியரசுத் தலைவரையோ சட்டப்படி கைது செய்ய முடியாது. இதைத்தாண்டி குற்றம் வெளியே வந்தால் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த புகார்களை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். இந்த சட்ட பாதுகாப்புடன் தான் இவ்வளவு கிரிமினல், பாலியல் அத்துமீறல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த அரசு கட்டமைப்பில் அது சாத்தியமில்லை. இந்த அரசு கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் இணைய வேண்டும் என்று பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனி ராஜ்.

தகவல்: ம.க.இ.க., பு.மா.இ.மு., மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க