Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?

-

கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனைக் கைது செய்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை பல்கலை பாதுகாப்பு குழு இணைந்து போராட்டம்!

mku-demo-poster

துரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் அ.சீனிவாசன் மீது கூலிப்படையை ஏவி கொலை வெறித்தாக்குதல் நடத்திய பல்கலை துணைவேந்தர் கல்யாணி மதிவாணனைக் கைது செய்யக் கோரி 27.05.2014 காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மனித உரிமை பாதுகாப்புமையம், மதுரை பல்கலை பாதுகாப்புக்குழு (Save MKU) பணியாளர், ஓய்வூதியர் சங்கங்கள மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பேராசிரியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மதுரை நகர், புறநகர் காவல் துறையினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை காவல் துறை மறுத்து விட்டது. புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அனுமதி கோரியபோது கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, “வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். பல்கலைக் கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் வேண்டாம்” என்று நைச்சியமாகக் கூறி அனுமதி மறுத்து விட்டார்.

ஆனால் அவர் கூறியதற்கு எதிர்மாறாக குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல் துறை நடந்து வருகிறது. எனவே மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் ஆதரவு சக்திகளைத் திரட்டி காவல் துறையின் அனுமதி கோராமல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இறுதிக் கட்டத்தில் காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்து முற்றுகைப் போர் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். துண்டறிக்கை வெளியிடப்பட்டு பல்கலைமுன்பு விநியோகிக்கப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மதுரை பல்கலை துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் பொறுப்பேற்றார். பல்கலை துணை வேந்தரைத் தெரிவு செய்யும் குழுவுக்குத் தனது தகுதி பற்றி தவறான தகவல் தந்து முறைகேடாகப் பொறுப்புக்கு வந்துள்ளார் அவர். நாவலர் நெடுஞ்செழியன், தற்போதைய அதிமுகவின் அவைத் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் மருமகள் என்ற தகுதியின் அடிப்படையிலேயே அவர் துணை வேந்தர் பொறுப்பைப் பெற்றார். பல்கலை மான்யக் குழுவின் விதிகளின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவரே துணைவேந்தர் பொறுப்புக்கு வரமுடியும். ஆனால் கல்யாணி சென்னை எத்திராஜ் கல்லூரியில் 5 ஆண்டுகள் துணைப் பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். இதனை மறைத்து அவர் பதவிபெற்றதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மதுரை பல்கலை உயிரி பொறியியல் துறைத்தலைவர், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி “பல்கலைக் கழகங்களில் மானியக்குழுவின் விதி முறைகளின்படி தகுதிபெற்றவர்களை மட்டுமே துணை வேந்தராக நியமிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கு குறிப்பாக (Specific) இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற வழக்குகளை விசாரணைக்கே வரவிடாமல் தனது செல்வாக்கால் தடுத்து வருகிறார் இந்த கிரிமினல் துணைவேந்தர் கல்யாணி.

பல்கலையில் ஏராளமான ஊழல் முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், அதிகார துஷ் பிரயோகங்கள் நடத்து வருவது வாடிக்கையாக உள்ளது. கல்யாணி மதிவாணன் சிண்டிகேட், செனட், அதிகாரிகள், பணியாளர்களிடையே தனக்கு ஆதரவான ஒரு ஜால்ரா கோஷ்டியை உருவாக்கி வைத்துக் கொண்டு அவரது ஊழல் முறைகேடுகளைக் கேள்வி கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளார். உயர்கல்வி ஆய்வு மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவது, அவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களை மாற்றுவது, பல்கலைக் கழகத்தையே மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடிய உயர்கல்வி மாணவர்களை பணியாளர்களை ஏவி விட்டுத் தாக்கியும், காவல்துறையை ஏவி கைது செய்தும் அராஜகம் செய்துள்ளார். பல்கலைக்குள் காவல்துறையை நிரந்தரமாகத் தங்க வைத்தும், வாயில்களை மூடிவைத்தும் அடையாள அழிப்பு செய்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில்தான் இப்பல்கலையில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக்குழு துணைவேந்தரின் ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போராடியது. மதுரை பல்கலை ஆசிரியர் சங்கம் (MUFA) மற்றும் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்பு (TANFUFA) ஓய்வூதியர் சங்கம், SC/ST சங்கம் ஆகியவை அதற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தன. இவர்களுடன் மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்ற மாதம் துணைவேந்தரை தகுதிநீக்கம் செய்யக்கோரி பல்கலை நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பழிவாங்கப்பட்டவர்களில் ஒருவராகிய உயர்கல்வி ஆய்வு மாணவர் ஈஸ்வரி பண்டார நாயகா என்கிற மாற்றுத் திறனாளிக்காக, மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதற்கும் அசைந்து கொடுக்காத எதைப் பற்றியும் கவலைப்படாத, எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தும் பாசிஸ்டாக கல்யாணி இருந்து வருகிறார். துணைப் பேராசிரியர் நியமனம், அலுவலக ஊழியர் நியமனம், இடைநிலை ஊழியர் நியமனம் மற்றும் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு இன்னும் பல்வேறு பணிகளை அவர் விருப்பம் போல் நடத்தி வருகிறார்.

பல்கலையில் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முத்து மாணிக்கம், மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு அறிவழகன், ஓய்வு பெற்ற பண்டக சாலை மேலாளர் எஸ்.வி.கே செல்வராஜ் ஆகியோர் கல்யாணியின் ஊழல் நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றனர். மேலும் கல்யாணியின் கருணையினால் பணி நியமனம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தையும் வேலையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கொத்தடிமை கைக்கூலிகளாக மாறி கல்யாணியின் அதிகார அத்துமீறல்களுக்குத் துணை போகிறார்கள்.

கடந்த 15-ம் தேதியன்று இந்து நாளிதழில் வெளியான செய்தியொன்றில் கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜார்ஜ் என்பவர் தன்னுடைய தகுதி இன்மையை மறைத்து ஏமாற்றி பதவிக்கு வந்ததன் காரணமாக பல்கலை வேந்தரான கேரள ஆளுனர் அவரைப் பதவி நீக்கம் செய்த செய்தி வெளியானது. அந்தச் செய்தியுடன் கல்யாணி மதிவாணனையும் அதுபோல தகுதியின்மை அடிப்படையில் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பல்கலைப் பாதுகாப்புக்குழு அமைப்பாளர் பேராசிரியர் அ.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையும் இந்து ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டது.

16.5.2014 (தேர்தல் முடிவுகள் வெளியான அன்று) அதிகாலையில், தான் குடியிருக்கும் நாகமலை பகுதியில் நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் மடக்கி இரும்புத் தடிகளால் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். மணடையைக் குறிவைத்துத் தாக்கியதைத் தனது இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் தூக்கிவந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு கைகளிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடை எலும்பு ஒன்றை எடுத்து ஒட்ட வைக்கப்பட்டுள்ள நிலையில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். 67 வயது நிரம்பிய, பல்கலையின் முன்னேற்றத்துக்காக முழுமனதோடு நேர்மையாக உழைத்து, மாணவர்களால் அன்புடன் ஐயா என்று அழைக்கப்படும் பேராசிரியர் அ.சீனிவாசன் கொஞ்சமும் அஞ்சாமல் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் சிரித்த முகத்தோடு தைரியம் சொல்லி அனுப்பும் அவரது பண்பு, துணிச்சல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம் என்கிற பெருமிதம் அவரது முகத்தில் தென்படுகிறது.

மருத்துவமனையில் பேராசிரியர் அ.சீனிவாசன்
மருத்துவமனையில் பேராசிரியர் அ.சீனிவாசன்

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், பதிவாளர் பொறுப்பு முத்துமாணிக்கம், பி.ஆர்.ஒ பொறுப்பு அறிவழகன், இளைஞர் நலத்துறைத் தலைவர் செல்லத்துரை, தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பண்டகசாலை மேலாளர் எஸ்.வி.கே செல்வராஜ்  ஆகியோர்தான்; இவர்கள்தான் கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்துள்ளனர் என பேராசிரியர் சீனிவாசன் தெளிவாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 216/2014 பிரிவுகள் 294 (b) 324, 307, 109, IPC-ன் கீழ் A1 ஆக கல்யாணி மதிவாணனும் மற்றும் 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக வழக்கில் உள்ளனர்.

தாக்கிய கூலிப்படையினர் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த நபர்கள். அவர்களை மறுநாளே காவல்துறை கைது செய்து விட்டது. கூலிப்படையைச் சேர்ந்த சிவா என்ற வயக்காட்டு சாமி மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தில், “தி.மு.க. தொண்டரணிச் செயலாளர் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் தான் பேராசிரியரை அடையாளம் காட்டி தாக்கச் சொன்னார்கள். அவ்வாறு செய்தால் பல்கலையில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்” என்று தெளிவாக அவர்களின் பெயர் முகவரியுடன் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர்.

தாக்குதல் நடந்து 10 நாட்களாகியும் தாக்கிய இருவரைத் தவிர வேறு யாரையும் காவல் துறை கைது செய்யவில்லை. தி.மு.க. தொண்டரணியைச் சேர்ந்த ஜெயராமன், சரவணன் ஆகியவர்களின் பெயர்முகவரி தெளிவாகத் தெரிந்திருந்தும் காவல் துறை அவர்களைக் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளிகளாகிய கல்யாணி உட்பட 4 பேரும் அன்றாடம் பல்கலையில் பணிசெய்து வருகின்றனர். வெளிப்படையாகக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்; பொது இடங்களுக்கு வந்து போகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மேற்படி தி.மு.க. குண்டர்கள் இருவரையும் பல்கலை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு காவல் துறை அவகாசம் அளித்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன் முன்ஜாமீன் தாக்கல் செய்தபோது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் துணைச் செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன் எதிர்த்து வாதாடி ஜாமீன் தரவிடாமல் தடுத்துள்ளார். அதுபோல் 28/05/2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் பிணை தரக் கூடாது என்று தடுத்துள்ளார். ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் இதில் தலையிட்டு கல்யாணியையும். தி.மு.க இளைஞரணி குண்டர்களையும் பாதுகாத்து வருகின்றனர்.

நாட்டில் நடைபெறும் சிறுசிறு நிகழ்வுகள் கூட முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மக்கள் மத்தியில் சீன் காட்டுகிறார். “ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் அதுவும் ஆற்றல்சால் பல்கலைக் கழகத்தின் (University in Excellence) துணை வேந்தராக இருப்பவர் தகுதியில்லாதவர், பொய்யான தகவலைத் தந்து அரசை ஏமாற்றியிருக்கிறார். இப்போது அவரது பாசிச கொடுங்கோன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரமுயற்சித்த ஒரு பேராசிரியரையே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.” இந்தச் செய்தி ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்து நாறுகிறது. இது ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போகவில்லையா? அப்படி போனாலும் தான் நியமித்த விசுவாசிகளை ஜெயலலிதாவோ இந்த அரசோ விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அதை நாம்தான் போராடி சாதிக்க வேண்டும்.

‘நான் ஒரு குட்டி ஜெயலலிதா. இங்கே நான் வைத்ததுதான் சட்டம்’ என்றும் ‘3 கோடி கொடுத்து பதவியைப் பிடித்துள்ளேன் இன்னும் 2 கோடி பாக்கி தர வேண்டியுள்ளது. அதை எப்படி நான் அடைப்பேன்’ என்று பகிரங்கமாக கல்யாணி சொல்லி வருவதாகவும் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கிறன. துணைவேந்தர் அம்மாவுக்கு பயந்து முகம் காட்ட மறுக்கின்றனர். காமராசர் பெயரில் உள்ள ஓர் உயர்கல்வி நிறுவனத்தின், உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின், மதுரையின் பெருமை என்று போற்றப்படும் நிறுவனத்தின், தமிழ் அறிஞர்கள் மு.வ., தெ.பொ.மீ. போன்றவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இன்றைக்கு தகுதியற்ற, ஒரு பாசிஸ்டு கிரிமினல் அமர்ந்திருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே மிகப் பெரிய அவமானம்.

என்ன செய்வது பேய் ஆட்சி செய்யும் பிரதேசத்தில் பிணம் தின்னும் சாத்திரம் தான் இருக்கும் என்று சும்மா இருந்து விட முடியுமா? நமது வரிப் பணத்தில் நடைபெறும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றினைந்து போராடி தீமையை அகற்றி நன்மையை அமர்த்த வேண்டாமா?

1) காவல் துறை முதல் தகவல் அறிக்கை

2) குற்ற வாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம்.

3) ஊடகங்களில் வெளியான செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு நாட்டின் அறிவுச்சொத்து. நாலந்தா பல்கலைக் கழகம் நம் தேசத்தின் வரலாற்றுப் பெருமை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் பெருமையுடையது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இன்றைக்கு இப்படி பல பல்கலைக் கழகங்கள் கிரிமினல்களின் பிடியில் சிக்கித் தவிப்பது ஏன்?

உலகமயமாக்கச் சூழலில் கல்வி, தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கும் வணிக நிறுவனங்களாகவும் மாணவர்களின் அறிவுத்திறன் கார்ப்பரேட்டுகளுக்கு கைகட்டிச் சேவகத்துக்காகவும் என்று மாறிவிட்டபின் அரசு நிறுவனங்களில் பணம் கொடுத்து பதவியைப் பிடிக்கும் போக்கு இயல்பாகியிருக்கிறது. கல்யாணி மதிவாணனுக்கு முந்தைய துணை வேந்தர் கற்பக குமாரவேல், அவருக்கு முந்தைய மருதமுத்து ஆகியோரெல்லாம் ஊழல்வாதிகளாகவும், பெண் பித்தர்களாகவும் இருந்ததன் தொடர்ச்சிதான் கல்யாணி மதிவாணன் கொலை முயற்சியில் இறங்கியிருப்பது. கல்வி கடைச்சரக்கு என்கிற நிலையை மாற்றி, புதிய சமூக உருவாக்கத்திற்கு  விளை நிலமாக்கப் பாடுபடவேண்டும்.

போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு, வழக்கு பதிவு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :-
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக்கிளை

  1. பொதுவாகவே எங்கு அநியாயம் நடந்தால் கோபம் வரும். அதுவும் நான் பட்டம் வாங்கிய பல்கலைக் கழகம். தலைகுனிகிறேன். .அது சரி. அந்த அம்மணியும் பாசிஸ்டா? நான் என்னமோ பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் மட்டும் தான் பாசிஸ்டுகள் என்று எண்ணியிருந்தேன். என்னைப்போன்ற அரைகுறை அறிவாளிகளுக்கு பாசிசம் என்றால் என்ன என்று ஒரு பதிவு போடுகிறீர்களா , ப்ளீஸ்?

  2. பாசிஸ்ட் என்றால் யார்?சட்டப்படி இப்போது கல்யாணி மதிவாணன் ஒரு தேடப்படும் குற்றவாளி.அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் தான் காவல் துறைக்கு சூடு வரட்டும் என்றும் மக்களுக்கும் தெரியட்டும் என்றும் இந்த சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது.காவல்துறை வேகமெடுத்து கல்யாணி கும்பலை கைது செய்வதை விட்டுவிட்டு சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வாக்குப் பதிவு செய்கிறது.காவல்துறை கல்யாணிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது பார்த்தீர்களா?இப்போது பதிவாளார் பொறுப்பில் இருப்பவர் [அக்யூஸ்ட் நிர் 2]முத்துமாணிக்கம், கல்யாணி ஏவிய கூலிப்படையினால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் பேராசிரியர் அ.சீனிவாசனுக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.அதில் உங்களுடைய ஓய்வூதியத்தை ஏன் நிறுத்தக் கூடாது எனபதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் நேற்று செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி துணைவேந்தர், கூட்டாளிகள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டிருக்கிறது.பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் 5 பேர் பெயர்களை சொல்லியுள்ளனர்.அதில் 4 பேர் ஓய்வு பெற்றவர்கள்.கல்யாணி தற்போது வெளியே போகும்போது ‘டி’ பிளஸ் [முன்னால் இரண்டு கார் பின்னால் இரண்டு கார்]பாதுகாப்புடன் தான் போகிறார்.[ஏன் கூலிப் படைக்கு இன்னும் செட்டில் செய்யவில்லையா?]மதுரையை சேர்ந்த மின்னணு சாதனங்கள் சப்ளை செய்யும் ஒரு நண்பர் சொன்னார்.பல்கலை வளாகத்தில் உள்ள சுமார் 200 மின்விளக்குகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளன.அதற்கு டெண்டெர் எதுவும் கோரப் படவில்லை.சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்தப் பணி கல்யாணியின் மகனுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் துணைவேந்தரை நேரில் சந்தித்து கேட்டபோது “அது என் விருப்பம் . நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன்.அதைக் கேட்க நீங்கள் யார்.வெளியே போங்கள்”என்று தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றி விட்டார்.குப்பைகளைக் கூட அவர் தன் கைக்கூலிகளுக்குத் தான் தருகிறார். நாங்கள் இப்போது தகவல் அறியும் சட்டத்தில் கேட்கவுள்ளோம் என்றார்.கல்யாணியின் தனி செயலாளர் அவருடைய மகள்.ஒப்பந்தகாரர் அவருடைய மகன்.இப்படிப் பட்ட முறைகேடுகளை அனுமதிக்கக் கூடாத அதிகாரிகள் அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு உயர் கல்வி நிறுவனத்தையே சீரழித்து சின்னாபின்னமாக்குகிறார்களே.பெரும்பான்மை ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்த்துக் கேட்க முடியாமல் அடக்கி ஒடுக்கப்படுகிறார்களே அதுதான் பாசிசம்.கல்யாணி ஒரு பாசிஸ்ட்.இது திருத்தப் படவேண்டியதல்ல.விரட்டப்படவேண்டியது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க