பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜூன் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

000

கேள்வி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் ஏழு சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளது. அதுவும் சென்னையில் மட்டும் இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?

மிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாகவே ஆதிக்கச்சாதி வெறியாட்டங்கள் அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், நாங்குநேரியில் சின்னத்துரை ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவது; குறிப்பாக பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே திட்டமிட்டு சாதிவெறி ஊட்டப்படுவது; இவையெல்லாம், சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் ஊடுருவி வேலை செய்துவருவதன் வெளிப்பாடு என்ற அபாயகரமான போக்கை மையப்படுத்தி “தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்?” என்ற  சிறுநூலை புதிய ஜனநாயகம் சார்பாக வெளியிட்டிருந்தோம்.

தற்போது, இந்நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சாதி ஆணவப்படுகொலைகள்; சாதித்தாக்குதல்கள்; தீண்டாமை கொடுமைகள் தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாதி பெருமிதம் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்றுக் கூறும் ஆய்வாளரும் பேராசிரியருமான ஸ்டாலின் ராஜாங்கம், சாதிப் பெருமிதத்தின் முக்கியமான அம்சமாக, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிரான பிரசாரங்கள் அதிகளவு நடைபெறுவதாக சொல்கிறார். “சாதியப் படிநிலையில் தங்களைவிட கீழே உள்ள சாதியினர் தங்கள் சாதியைச் சீரழிக்க தங்கள் சமூக பெண்ணைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி கோபத்தை மூட்டுகிறார்கள். அதன்மூலம் தங்கள் சாதியினரை உளவியல் ரீதியாகத் திரட்டுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல கலாசார நிகழ்வுகளில் இதுபோல பேசப்படுவது சமீப நாட்களில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

சான்றாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரோட்டில், வள்ளிக் கும்மி நிகழ்ச்சியில்  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, பெண்களிடம், ”சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே… கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்டர் வீட்டுப் பையனையே” எனக் கூறி, அப்பட்டமாக சாதிவெறியை ஊட்டும் வகையில் உறுதி மொழி ஏற்க வைத்த சம்பவம் அரங்கேறியது. கொங்கு மண்டலம் என்று சொல்லப்படுகின்ற கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாகவே பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில் படித்துக்கொண்டிருக்கும் இளம்தலைமுறையினரிடம் சாதிவெறியை ஊட்டும் வகையில் வள்ளிக்கும்மி என்ற நிகழ்ச்சி பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் திட்டமிட்டே ஊக்குவித்து வருகிறது. சமீபத்தில் வள்ளிக்கும்மி பயிற்சியாளார் ஒருவருக்கு பத்மஸ்ரீ பா.ஜ.க வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீப காலமாக, ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த பெண்களை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துப் படம் எடுப்பதும் அதிகரித்து வருவதை ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக்காட்டுகிறார். சமீபத்தில் கூட  அப்பட்டமாக சாதிவெறி நஞ்சைக் கக்கும் கவுண்டம்பாளையம் என்ற படம் வெளிவரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதம் அதிகரிப்பதற்கும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பிருக்கிறது என்றும், “பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மதத்தைப் பற்றியே பேசினாலும் சாதியை மையமாக வைத்துத்தான் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த முறை பா.ஜ.க. கணிசமாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதில் சாதிரீதியான அணிதிரட்டல்களுக்கும் பங்கு இருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் சாதிரீதியான அணித்திரட்டல், குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தி நடப்பதுதான் இங்கு அபாயகரமான விஷயம். இளம்தலைமுறையைச் சேர்ந்த பலர், இந்தக் கும்பலின் சாதிவெறிக்கு பலியாகி வருகின்றனர் என்பதை சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்கள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் தன்னுடைய மத-பிளவுவாத அரசியல் மூலம் கலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் சாதி சங்கங்களில் ஊடுருவி தனக்கான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சதித்திட்டத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது நம் முன்னிருக்கும் உடனடி கடமையாக உள்ளது.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க