Saturday, June 25, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !

மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !

-

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் உயர்கல்விக் கூடமா ?  கல்யாணியின் குடும்பச் சொத்தா ?

துரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் நிர்ணயித்துள்ள தகுதி கல்யாணி மதிவாணனிடம் இல்லை. பொய்யான தகவல்களைக் (Bi0-Data) கொடுத்து ஏமாற்றி அவர் துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளார் என்பது போராட்டக்காரர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

hrpc-mku-poster

குற்றச்சாட்டு உண்மையா ?

ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கான அடிப்படை தகுதி அவர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி அவர் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார் என்பதோடு அவருடைய ஊதிய விகிதப்பட்டியலும் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.வி.ஜெயராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு (W.P.11350/2012) தாக்கல் செய்துள்ளார். கல்யாணி மதிவாணன் தனது பதில் மனுவில் அதனை மறுத்து தான் தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவல்லாமல் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.இஸ்மாயில் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த பேராசிரியர் சந்திரன் பாபு ஆகியோரும் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் எல்லாம் ஒருங்கே இணைக்கப்பட்டு வரும் 23.1.2014 அன்று நீதிபதிகள் சுதாகர், வேலுமணி கூட்டு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. கல்யாணி மதிவாணன் தனது தகுதியை நிரூபிக்க முடியாது, நியமனத்தை நியாயப்படுத்தவும் முடியாது, பல்கலைக் கழக மானியக் குழுவையும் அரசையும் ஏமாற்றியதை மூடி மறைக்கவும் முடியாது. எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி என்று எதிர்த்துப் போராடும் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.

இவை தவிர எஸ்.சி, எஸ்.டி. அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, பல்கலை வாகன ஓட்டுனர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததோடு முறைகேடும் நடைபெற்றுள்ளது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அதுபோலவே அலுவலக எழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ததிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. 30.12.2013 அன்று ஐந்து பேராசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை வாங்கினார் அன்றுதான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இப்படி சட்டத்தின் முன்பு குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தன் கொட்டத்தை மட்டும் அடக்கிக் கொள்ளாமல் குதித்துக் கூத்தாடுகிறார்.

50 நாட்களாகத் தொடர் போராட்டம்

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து கல்யாணி மதிவாணனின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராடி வருகின்றனர். போராட்டம் வலுவடைந்து பரவத் தொடங்கியவுடன் பீதியடைந்து பல்கலையை காலவரையற்று மூட உத்தரவிட்டார்.

முதன்முதலாக மதுரை காமராசர் பல்கலையில் ஒரு பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ஆரம்பத்தில் அனைவரும் வரவேற்றனர். ஆனால் நாளடைவில் மூக்கு வெளுத்து பஞ்சகல்யாணி உருவம் தெரியத் தொடங்கியதால் போராட்டங்களும் கூடவே வெடித்தன. 2012-ம் ஆண்டு ஜுலையில் இவர் திரைப்படத் துறை தொடர்பான சில வகுப்புகளைத் தொடங்குவது என்று அதிரடியாக முடிவெடுத்து பெண்கள் விடுதியைத் தடாலடியாகக் காலி செய்தார். ஆனால் முதல் ஆண்டில் 3 பேரும் 2-ம் ஆண்டில் 10 பேரும் மட்டுமே அந்த வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதற்கு பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதியும் பெறவில்லை (இந்த யோசனையை நடிகரும் சட்டமன்ற உறுப்பினரும் ச.ம.க கட்சித் தலைவருமான மாமேதை சரத்குமார் வழங்கியதாகக் கேள்வி) அதைத் தொடர்ந்து விடுதிக் கட்டணத்தை தன் இஷ்டம் போல் உயர்த்தினார். உணவு விடுதியை தனியாருக்குத் தாரை வார்த்தார். இதனால் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடினர். மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் அப்போதைக்குப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.

அடுத்த பிரச்னை, பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் இங்கு வந்திருந்த போது ஆய்வு மாணவர்களுக்கு 8 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்க முயன்ற மாணவர் பிரதிநிதிகள் பாண்டியராஜன், அருண் ஆகியோர் பலாத்காரமாகத் தடுக்கப்பட்டனர். பல்கலைக் கழகத்தின் கௌரவத்தைக் குறைப்பதாக துணைவேந்தர் குற்றம் சாட்டினார். இதற்காக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டார். மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளைச் சொல்ல வந்தபோது அவர்களிடம் தரக்குறைவாகப் பேசி மிரட்டியதோடு, தான் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள் மட்டுமல்ல, புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு பதவி பெற்றவர் என்று கொக்கரித்துள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்ட ஆய்வு மாணவர்கள் பாண்டியராஜன் மற்றும் அருண் ஆகியோரை டிஸ்மிஸ் செய்தார். ஆய்வு மாணவர்களை வெளியேற்றுவதற்குத் துணைவேந்தருக்கு அதிகாரம் இருக்கிறதா என்று பேராசிரியர்களும் செய்தியாளர்களும் கேள்வி எழுப்பிய போது வெளியேற்றவில்லை ஆய்வை ரத்து செய்துள்ளோம் என்றும் அதற்குப் பிறகு ஆய்வு வழிகாட்டியை (Guide) மற்றியுள்ளோம் என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.

மதுரை காமராசர் பல்கலையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற பி.ஜே ஈஸ்வரி பண்டாரநாயகா என்ற பெண் மாற்றுத் திறனாளி. அவர் தனது முனைவர் மேல்நிலை ஆய்வினைத் தொடர கோத்தாரி பெல்லோஷிப் மற்றும் யூஜிசி சிறப்பு அனுமதி வழங்கியது. கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின்பு தான் இது நடந்தது. ஆனால் ஈஸ்வரி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே இருந்து வருகிறார். அது பல்கலை விதிகளுக்கு முரணானது என்று கூறி அவர் ஒரு பெண், மாற்றுத் திறனாளி என்று கூடப் பாராமல் நள்ளிரவில் விடுதியை விட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.

காரணம், அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருப்பவர் பேரா. முனைவர் எஸ். கிருஷ்ண சாமி. அவர் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TANFUFA) மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மரபணு பொறியியல் துறையின் தலைவர். இவர் தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்கலைக் கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள சில துணை வேந்தர்கள் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கல்யாணி மதிவாணனையும் பாதிப்பதாக இருந்ததால் அவர் உடனடியாக பதவி இறக்கம் செய்யப்பட்டு அவர் பணியில் சேர்ந்த போது இருந்த பெறுப்பிற்குத் தாழ்த்தப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் சிண்டிகேட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆனால் மாணவர்கள் பாணடியராஜன், அருண், ஈஸ்வரி பண்டார நாயகா ஆகியோர் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி தன்னுடைய அதிகாரத்தையோ முறைகேடுகளையோ கேள்வி கேட்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாகப் பழிவாங்கப்பட்டனர். அதே போது தனது அதிகார துஷ்பிரயோகத்திற்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் துணைபோகிறவர்களுக்குப் பணமும் பதவியும் சலுகைகளும் தானே வந்து சேருகிறது.

ஊழல் முறைகேடுகள்

பல்கலையில் ஓட்டுனர் காலி பணியிடங்களில் 10 பேர் பல்கலை விதிமுறைகளுக்கு (இடஒதுக்கீடு) மாறாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் தலா 10 முதல் 13 லட்சம் வரை கையூட்டுப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

தொலைநிலைக் கல்வித்துறையில் அதிகாரபூர்வமான கிளைகள் தொடங்குவதில் குறிப்பாக கேரள மாநிலத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. அலுவலகப் பணியாளார்கள் தேர்வில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப் படாததால் நியமனம் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோதும் வழக்கை துச்சமாக்கி எழுத்தர் பணிக்கு 176 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அவர்களிடமிருந்து பலகோடி ரூபாய் கையூட்டாகப் பெறப்பட்டு நியமனத்திற்கு மட்டுமே காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

மூவர்கும்பல்

கல்யாணி மதிவாணனின் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக நிற்பது பல்கலைக்கழக டீன் ராஜியக்கொடி மற்றும் ஓய்வுபெற்ற பண்டகசாலை மேலாளர், SVK செல்வராஜ் (இவர் ஊரறிந்த திமுககாரர், மு.க. அழகிரியின் பினாமி) பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர். கல்யாணி மதிவாணன் இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து பணி ஓய்வு மற்றும் பணப் பலன்களைக் கொடுத்து தனக்குக் கைத்தடியாக வைத்துக் கொண்டுள்ளார். மூன்றாவது நபர் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் பரமேஸ்வரி. இவர்கள் மூவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். சென்ற வாரம் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய போது இவர்கள் முயற்சியில் திடீர் மாற்று சங்கங்கள் (கைக்கூலி) உருவாக்கப்பட்டு மாணவர்கள் மிரட்டி வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் காவல் துறையும் இணைந்து மாணவர்களைக் கைது செய்து மாலையில் விடுவித்துள்ளது.

கல்யாணி மதிவாணனுக்குப் பல்கலையில் பணிபுரிகிற அனைவரும் தனது ஆணைக்குக் கட்டுப்பட்ட கொத்தடிமைகள் என்று எண்ணம். அவரை எதிர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் உடனடியான பழிவாங்கப்படுவார்கள். சிண்டிகேட், செனட் என்பதெல்லாம் இவருடைய கைப்பாவைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜனநாயகம் என்பது துளிகூட இங்கு இல்லை என்பதே உண்மை.

துணைவேந்தரின் மகன் ஜீவன் என்பவர் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர். அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அம்மாவும் உடன்செல்வார். அவருக்குத் துணையாகச் செல்வதற்கு ஓர் உதவியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த உதவியாளர் வேறு யாருமல்ல அவரது மகளேதான்.

தன்னுடைய உறவினர்களுக்கு பல்கலை விதிகளுக்கு முரணாக புதிய பதவிகளை உருவாக்கி ரூ 20,000 – 25,000 சம்பளத்தில் வேலை கொடுத்துள்ளார். மேலும் பல்கலைச் சிற்றுண்டிச்சாலையை இவரது உறவினருக்குக் கொடுத்துள்ளார். அதில் நாளொன்றுக்கு ரூ 20,000 வருமானம் வருகிறதாகச் சொல்கிறார்கள். பேராசிரியர்களுக்கான வீட்டுமனைகள் இவரது உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்திலுள்ள முதிர்ந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. இரண்டரை டன் எடை உள்ள, பல கோடி மதிப்புள்ள இரண்டு சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அது பற்றிய கணக்கு எதுவும் இதுவரை தரப்படவில்லை. மரங்கள் வெட்டப்பட்டதால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஊழல் முறைகேடுகளின் கதையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தன்னை எதிர்க்கிறவர்களைப் பழிவாங்க அவரகள் மீது பாலியல் வன்கொடுமை புகார் தரவும் தயங்கமாட்டார் இந்தத் துணைவேந்தர். பல்லூடகக் கல்வி ஆய்வுமையத்தில் (EMMRC) பணிபுரிந்த சோபனாபாய் என்பவார் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் துறையை அம்போவென்று விட்டுவிட்டு ஓடிப்போனார். தற்போது திடீரென்று வந்துள்ளார். அவருக்கு அந்தத் துறையின் இயக்குனர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அவரது கணவர் பல்கலைக் கழக மானியக் குழுவில் பணிபுரிவதால் அவருக்குப் பதவிதர வேண்டி துணைவேந்தர் ஒரு பாலியல் வன்கொடுமை அநாமதேயப் புகாரை சோபானாவிடம் பெற்றுக் கொண்டு அப்பதவிக்கு விண்ணப்பித்த முனைவர் ரவிக்குமாரை தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக் கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய ராமச்சந்திரன் இங்கே நடந்த ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்ற காரணத்துக்காகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயற்பியல் பேராசிரியர் வாசு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருப்பதால் அவரும் பழிவாங்கப்பட்டுள்ளார். பலர் பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி கல்யாணி மதிவாணனின் காட்டு தர்பாருக்கு பலியாகியிருப்பவர்கள் அநேகம் பேர். தங்களது உரிமைகளுக்காக, உயர்கல்வி நிறுவனத்தின் தரம் காக்க, ஜனநாயக வழிமுறைகளில் போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதே வேளையில் மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஆசிரியர் கூட்டமைப்பு, அகில இந்திய கூட்டமைப்பு, ம.கா.பல்கலை பாதுகாப்புக் குழு மற்றும் இந்திய மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ணணி, அகில இந்திய மாணவர் கழகம், மதுரை அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் விடாப்பிடியாகப் போராட்டத்தை தொடரும் முடிவில் உள்ளனர்.

காலவரையற்று மூடப்பட்டுள்ள பல்கலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் பல்வேறு தரப்பிலிருந்து துணைவேந்தருக்கு வந்துள்ளது. பல்கலை மானியக்குழு, மனிதவள மேம்பாட்டுத் துறை, பல்கலை வேந்தர் தமிழக ஆளுநர், முதலமைச்சர் தனிப்பிரிவு, உயர்கல்வித் துறைச் செயலர், உள்துறைச் செயலர் என்று பல்வேறு தரப்பினருக்கும் புகார்கள் தரப்பட்டுள்ளன.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க

 • துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தகுதியற்றவர்.
 • அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
 • அவர் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
 • அவருக்கு பக்கபலமாக நின்று ஆதிக்க சாதி அடிப்படையில் பல்கலைக் கழகத்தைப் பிளவுபடுத்தி மிரட்டி வரும் மூவர் கும்பல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 • பழிவாங்கப்பட்டவர்கள் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி பணியமர்த்தப் படவேண்டும்.
 • எல்லாவற்றுக்கும் மேலாக
 • பல்கலை மானியக்குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தை வலுப்படுத்துவதன் மூலமே உயர்கல்வித்துறையில் விடிவு ஏற்படுவதற்கான முன்னோடியாக ம.கா.பல்கலைக்கழகம் திகழ முடியும்.

முற்போக்கு சிந்தனையும் நேர்மைத் திறமும் கொண்ட மு.வ, தெ.பொ.மீ போன்ற அறிஞர்கள் வீற்றிருந்த பதவியில் கல்யாணி மதிவாணன் போன்ற குறைகுடங்களுக்கு இடமில்லை என்பதை போராட்டத்தின் வாயிலாக மட்டுமே சாதித்துக் காட்டமுடியும். மாணவர் சமூகம் கல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.

போராட்டங்கள்

போஸ்டர்கள், பத்திரிகை செய்தி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரைக்கிளை

 1. அய்யா வந்தாரு – மருமகன கொன்டு வந்தாரு.
  அம்மா வந்தாக – மருமகள கொண்டு வந்தாங்க.
  ரெண்டு பெரு ஆட்சியிலும் வோலல் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க