விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோவிலாங்குளம் பகுதியில் வசித்துவந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 21 வயதான அழகேந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூன்-24 ஆம் தேதி மதுரை கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த அழகேந்திரனை, அவர் காதலிக்கும் பெண்ணின் மாமன் மகனான பிரபாகரன் போனில் தொடர்புகொண்டு, “உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். அதுகுறித்து பேச வேண்டும் வா” என்று நயவஞ்சமாக பேசி அழைத்துச் சென்றுள்ளான்; இதனை நம்பி சென்ற அழகேந்திரனின் தலையை துண்டாக்கி படுகொலை செய்து உடலை கள்ளிக்குடி அருகேயுள்ள வேலாம்பூர் கண்மாயில் வீசி சென்றுள்ளான்.
பிரபாகரன் தன்னுடன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து இப்படுகொலையை நிகழ்த்தியுள்ளதாகவும், அவர்கள் அழகேந்திரன் உயிருடன் இருக்கும் போதே அவரின் கை கால்களைப் பிடித்துக்கொண்டு, தலையைத் துண்டித்தும் பிறப்புறுப்பைச் சிதைத்தும் மிகக்கொடிய முறையில் இந்த ஆணவப் படுகொலையை நிகழ்த்தியிருப்பதாகவும் கூறுகிறார், “தமிழ் புலிகள் கட்சி”யின் செய்தித் தொடர்பாளரான முத்துக்குமார்.
மகனைக் காணவில்லை என்று புகாரளிக்க சென்ற அழகேந்திரனின் பெற்றோரை, வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்து வழக்கம்போல் சாதி ஆணவப்படுகொலை குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் போலீசும் செயல்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த சாதிவெறியர்கள் மற்றொரு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சார்ந்த அழகேந்திரனை மிகக் கொடூரமான முறையில் சாதி ஆணவப்படுகொலை செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள் தங்களுடைய பிழைப்புக்காக தேவேந்திர குல வேளாளார் சமுதாய மக்கள் மத்தியில் சுயசாதி பெருமையை ஊட்டிவருவதன் தீவிரத்தையும் இந்த பிழைப்புவாதிகளின் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலின் அபாயத்தையும் இச்சம்பவம் காட்டுகிறது.
படிக்க: சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்
ஒருபுறம் தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலானது மற்றொருபுறம் தேவேந்தரகுல வேளாளர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் வேலை செய்துவருகிறது. சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் காரணமாக, தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும், சாதி ஆணவப் படுகொலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலியில் “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி”யின் அலுவலகம் ஆதிக்கச் சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டது; அதேப்போல், பள்ளிகள் திறந்து சில நாள்களிலேயே, நெல்லை மாவட்டம் மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதிக்கச்சாதி வெறிப்பிடித்த மாணவர்கள் சிலர் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அரங்கேறியது.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 48 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை மட்டும் ஏழு சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகவும் “எவிடென்ஸ்” அமைப்பின் கள ஆய்வு கூறுகிறது.
இந்நிலையில், சி.பி.ஐ(எம்), வி.சி.க போன்ற தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் உட்பட, பல்வேறு ஜனநாயக சக்திகளும், அமைப்புகளும் தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
படிக்க: அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்
ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது தனிச்சட்டம் தேவையில்லை. நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். தனிச்சட்டத்தால், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவிட முடியாவிட்டாலும், இச்சட்டத்தின் மூலம் களநிலவரம் குறித்து சரியான புரிதலைப் பெற முடியும் என்கிற அடிப்படையில் எவிடென்ஸ் கதிர் போன்றோர் இச்சட்டத்தை வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த
3 ஆண்டுகளில்
48 சாதி ஆணவப் படுகொலைகளும்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து
ஜூன் மாதம் வரை 7 சாதி ஆணவப்
படுகொலைகளும் நடந்துள்ளன.
ஆனால், சமூகநீதி குறித்து வாய்ச்சவடால் அடிக்கும் தி.மு.க. அரசு இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட தயாராக இல்லை. இது ஆதிக்கச்சாதி மக்களின் வாக்குவங்கியை இழந்துவிடக்கூடாது என்ற தி.மு.க-வின் அப்பட்டமான பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் தோலுரித்துக்காட்டுகிறது. இரண்டாண்டுகள் ஆகியும் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த ஆதிக்கச்சாதி வெறியர்களில் ஒருவரைக் கூட கைது செய்யாமல் அவர்களை பாதுகாத்துவருவதற்கும் தி.மு.க-வின் பிழைப்புவாதமே முக்கிய காரணம்.
ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். சாதி சங்களில் ஊடுருவி திட்டமிட்டே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயற்சித்துவரும் சூழலில், வாக்குவங்கியை காப்பற்றிக் கொள்வதற்காக ஆதிக்கச்சாதி வெறியர்களை பாதுகாக்கும் தி.மு.க அரசின் பிழைப்புவாதம் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலுக்கு மேலும் துணை செய்துவருகிறது.
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube