சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகள் அதிகரிப்பதற்குச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலே காரணம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது.

சென்னை வானகரத்தில் தமிழ்நாடு பாஜக மாநில செயற்குழு கூட்டம் அண்ணாமலை தலைமையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் பள்ளியில் சாதி மோதல்களை தடுப்பது தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவன் தேவர் சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் சாதிய மோதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி 18 பக்க அறிக்கை ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலிடம் ஒப்படைத்தார்.

அந்த அறிக்கையில், ‘‘கள்ளர் சீரமைப்பு”, ‘‘ஆதிதிராவிடர் நலம்” போன்ற ஜாதிய அடையாளம் கொண்ட சொற்களைப் பள்ளிப் பெயர்களிலிருந்து நீக்கவேண்டும், தனியார் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது, ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டைக் கண்டறிய வேண்டும், எக்காரணம் கொண்டும் மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதி பெயர் இடம் பெறக் கூடாது, கைகளில் வண்ண சாதி கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் பிஜேபியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதும் நெற்றியில் திலகம் இடுவதும் காலம் காலமாக பின்பற்றி வந்த அடையாளங்களை அழிக்கும் செயல் என்றும், இந்த அறிக்கை முழுக்க முழுக்க இந்து மதத்திற்கு எதிராக இருக்கிறது என்றும் கூறி இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


படிக்க: தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்


இதற்கு முன்னதாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையைக் கிழித்துப் போட்டது குறிப்பிடத்தக்கது. இதனை பாசிச ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகார பூர்வ ஆங்கில வலைத்தளமான ஆர்கனைசரில் (Organiser) “திராவிடத்தை கதற விடும் உமா ஆனந்தன்” என்று தங்களுக்கே உரித்தான பார்ப்பனிய திமிரோடு பதிவிட்டுள்ளனர்.

மேலும் இந்த அறிக்கை வெளியானதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.யின் குண்டர் படையான ஏ.பி.வி.பி (ABVP) கும்பல் ஒவ்வொரு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அவர்களின் இந்துத்துவா பிரிவினைவாத கருத்தியலை கொண்டு செல்வதற்காக இந்த அறிக்கையை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த அறிக்கை ஏன் சங்கிக் கும்பலுக்கு இவ்வளவு எரிச்சலை ஏற்படுத்துகிறது? ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே சாதிய மதவாத மோதல்களை உண்டாக்குவதன் மூலம் தனக்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஒரு நிகழ்ச்சி நிரலாகவே வைத்துக்கொண்டு செயல்படுத்தி வருகிறது.

இதற்கு ஒரு தடையாக இந்த அறிக்கையில் கூறப்படும் விஷயங்கள் இருப்பதனாலேயே இதனை எதிர்த்து வருகிறது. ஆகவே காலம் காலமாக பின்பற்றப்படுபவை என்றும் பாரம்பரியம், அடையாளம் என்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பாதுகாக்க முனைவது சாதிய படிநிலையைத்தான்.

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகள் அதிகரிப்பதற்குச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலே காரணம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது.

மேலும் கல்லூரி மாணவர்களிடையே பிரிவினைவாத கருத்துகளை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்-யின் குண்டர் படையான ஏ.பி.வி.பி கல்லூரிகளில் மூர்க்கமாக வேலை செய்து வருகிறது. இதனை திமுக அரசும் அனுமதித்து வருகிறது.

பள்ளி கல்லூரிகளில் ஏ.பி.வி.பி தடை செய்யப்பட வேண்டும். திமுக அரசு நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கையைக் காட்சிப் பொருளாக வைக்காமல் அதில் உள்ள முற்போக்கு அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இதன்மூலமே இந்த பாசிசக் கும்பலைத் துரத்தியடிக்க முடியும்.


சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க