அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வளர பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த முடியாததால், சாதிவெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளில் ஊடுருவி சாதிவெறியூட்டுவதன் மூலமாக தங்களின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றப் பார்க்கிறது.

ள்ளர் பெண்ணைக் காதலித்ததற்காக சக்கிலிய இளைஞரை தலை துண்டித்து கொலை செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் பள்ளர் சாதியினரின் 200 குடும்பங்களும், சக்கிலியர் சாதியினரின் 10 குடும்பங்களும் பார்ப்பனிய அமைப்பின் அடிப்படையில் கிழக்குப் பகுதியிலுள்ள ஆதிக்க ஜாதிகளுக்கு, இவ்விரு சாதியினரின் சுவாசக் காற்று கூட போகாதபடி காலனி பகுதியில்தான் குடி அமர்த்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் அம்மன் கோவில் காலனி தெருவைச் சேர்ந்த மாரிமுத்து – மாரியம்மாள் என்பவரின் மகன் அழகேந்திரன் (21) என்ற இளைஞன் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவர் பள்ளர் சாதி பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

ஜூன் 24 அன்று கள்ளிக்குடியில் உள்ள அவரது உறவினர் அழகர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணின் மாமன் மகன் பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு ‘உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன். அதுகுறித்து தனியாக பேச வேண்டும் வா’ எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றதாக அழகேந்திரனின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மகன் வீடு திரும்பவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் 25.06.2024 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் காணாமல் போன இடம் எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி இல்லை என்று கூறி அருப்புக்கோட்டை போலீஸார் புகாரை ஏற்கவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என போலீஸார் கூறியுள்ளனர். இந்நிலையில், அழகேந்திரனின் பெற்றோர் உடனடியாக கள்ளிக்குடி போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை ஏற்காமல் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று போலீஸ் அவர்களை அலைக்கழித்துள்ளது.


படிக்க: அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்


இந்நிலையில், 26.06.2024 அன்று கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் நிர்வாணப்படுத்தப்பட்டு, தலை துண்டித்த நிலையில் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரனின் உடல் கிடைத்தது. பெண்ணின் தந்தை சீனிவாசன் தலைமறைவாக உள்ளார். சீனிவாசன், பிரபாகரன் ஆகிய இருவர் மீதும் ஏற்கெனவே விருதுநகரில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக பிரபாகரன் திருட்டு, வழிபறி, கூட்டுப்பாலியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ரவுடியாக வலம் வந்த அவன், கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டாசில் கைதானவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் பள்ளர்கள் ஆணவ படுகொலைக்கும் சாதிவெறி தாக்குதல்களுக்கும் தொடர்ந்து ஆளாகிவந்த நிலையில், பள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே சக்கிலியர்களை ஆணவப் படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருவதானது புதிய போக்காக உள்ளது.

இதற்குக் காரணம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றவர்களின் பள்ளர் சாதி வெறி கட்சிகளே. சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கியுள்ள பள்ளர் சாதி இளைஞர்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று  கூறி ஆதிக்கசாதி வெறியூட்டுகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி, பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள பள்ளர் சாதி மக்களை, தேவேந்திர குல வேளாளர் என்று கூறி தங்களுக்கு எஸ்.சி (SC) பிரிவிலிருந்து எம்.பி.சி(MBC) பிரிவிற்கு சாதி பட்டியலை மாற்ற வேண்டும் என்று அந்த மக்களுக்கான உரிமைகளை சாதி வெறியின் மூலம் ஒழித்துக் கட்டும் வேலையைச் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வளர பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த முடியாததால், சாதிவெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளில் ஊடுருவி சாதிவெறியூட்டுவதன் மூலமாக தங்களின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றப் பார்க்கிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த செயல்திட்டத்தை வைத்து இந்த சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகள் தங்களது பிழைப்பை நடத்திக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் வளர்வதற்காக விலை நிலமாக தென் மாவட்டங்களை உருவாக்குகின்றனர். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு ஒடுக்கப்படும் மக்களை படையலிடும் வேலையைச் செய்து வருகின்றனர்.


படிக்க: அழகேந்திரன் ஆணவ படுகொலை | தொடர் முழக்கப் போராட்டம் | மதுரை


மேலும், ஆணவ படுகொலைகளுக்கு முடிவு கட்டும் வரைவு மசோதா கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பே மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் கதிர் தலைமையில் இந்த மசோதா வரைவு செய்யப்பட்டது. சாதி, நம்பிக்கை, வயது, பாலினம், மொழி, வர்க்கம், இனம், அந்தஸ்து மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் கவுரவத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்களில் நீதி, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் தற்போதுள்ள சிறப்புச் சட்டங்களில் உள்ள இடைவெளியை மூடுவதற்கு இந்த மசோதா முயல்கிறது.

இருப்பினும், ஜூன் 25 அன்று, ஸ்டாலின் சட்டசபையில், “நான் முன்பே குறிப்பிட்டது போல, புதிய சட்டத்தை கொண்டு வருவதை விட, ஏற்கெனவே உள்ள சட்டங்களைப் பயன்படுத்தி விசாரணையை சரியாக நடத்தி குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவது நல்லது என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு நிராகரித்து, மறைமுகமாக அவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டுக் கொண்டிருக்கிறது.

இக்கொடூர கொலையில் ஈடுபட்ட பிரபாகரன் மற்றும் அவனது கூட்டாளிகளைக் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைபிடிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சாதி வெறி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை தடை செய்வதன் மூலமே இது போன்ற கொடூர சம்பவங்கள் முற்றிலும் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆணவப் படுகொலை மற்றும் சாதி வெறி கட்சிகளுக்கு எதிரான போராட்டங்களை அனைத்து சாதி மக்களும் ஒன்றிணைந்து கட்டி எழுப்ப வேண்டும்.


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க