அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்

பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.

0

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாகக் கூறி அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாரிமுத்து – மாரியம்மாள் என்பவரின் 21 வயது மகன் அழகேந்திரன். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். (இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சில ஊடகங்களில் கூறப்படுகிறது).

இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி அழகேந்திரன் மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். உறவினரின் வீட்டிற்குச் சென்ற அவரை, பெண்ணின் உறவினரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். தற்போது கொலையாளி பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தலை துண்டிக்கப்பட்ட அழகேந்திரனது சடலம் ஜூன் 26 அன்று மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கிடைத்துள்ளது.

நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் நமக்கு பல அபாயங்களை உணர்த்துகிறது.


படிக்க: கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?


வழக்கமாக ஆணவ படுகொலைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும். ஆனால், தற்போது பட்டியலினத்தைச் சார்ந்த ‘தேவந்திர குல வேளாளர்’ என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவர், அதே பட்டியலினத்தைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவரான அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துள்ளார். அழகேந்திரனை நிர்வாணப்படுத்தி, தலையை வெட்டி படுகொலை செய்திருப்பது சாதி வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் செயல்பாட்டால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாக, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோரைப் பயன்படுத்தி பள்ளர் சாதி சங்கங்களில் ஊடுருவி ஆதிக்க சாதியினரிடையே நிலவும் ‘ஆண்ட பரம்பரை’ போதையை பட்டியலினத்தைச் சார்ந்த பள்ளர் சாதியினருக்கும் ஊட்டும் வேலை இந்த பாசிச கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. இதன் விளைவே தற்போது நடைபெற்றுள்ள இந்த ஆணவ படுகொலை.

பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.

எனவே, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதி வெறியை வளர்த்துவிடும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலையும் அவர்களின் கோடாரி காம்புகளான சாதிய அமைப்புகளையும் எதிர்த்து நாம் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்த பாசிச அபாயத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க