கும்பகோணம் அருகே சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட மோகன்-சரண்யா என்ற இளந்தம்பதியினர், விருந்துக்கு அழைக்கப்பட்டு கொடூரமான முறையில் பட்டப்பகலிலேயே ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருந்தாலும், இப்படுகொலை சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கொலை செய்தது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சரண்யாவின் அண்ணன். கொலையுண்டது ஆதிக்கசாதியைச் சேர்ந்த மோகன். ஆதலால், ஆதிக்கசாதி வெறியர்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சாதிமாறி திருமணம் செய்தால் சுயசாதி பெருமைக்காக படுகொலை செய்யும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறதா என்ற பொருளில் பல விவாதங்கள் எழுகின்றன.

***

கும்பகோணம் மாவட்டம், துலுக்கவேலி ஆண்டவர் நகரை சேர்ந்த சேகர் – தேன்மொழி தம்பதியினருக்கு ஒரே மகள் சரண்யா. இவருக்கு சக்திவேல், சரவணன், சதிஷ் மூன்று சகோதரர்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரண்யா பி.எஸ்.சி நர்சிங் முடித்துவிட்டு சில ஆண்டுகள் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

சரண்யாவின் மூத்த அண்ணன் சக்திவேல், அவருடைய மனைவியின் தம்பியான ரஞ்சித்துக்கும் சரண்யாவுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேச்சை துவங்கியுள்ளார்.


படிக்க : சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !


“ரஞ்சித்தின் சேர்க்கை மற்றும் நடத்தை சரியில்லை. அவனைத் திருமணம் செய்துகொண்டால் நீ நல்ல வாழ்க்கை வாழ முடியாது”, என சரண்யாவிடம் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ் அறிவுறுத்தியிருக்கின்றனர். சரண்யாவும் ரஞ்சித்தின் மோசமான நடவடிக்கை தெரியவந்து ஒதுங்கியிருக்கிறார்.

இந்நிலையில், சரண்யா தன்னுடைய தாயை மனநல சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சரண்யாவின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் மோகனின் தாயும் மனநல சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் தாயாரும் மருத்துவமனையில் அருகருகே அனுமதிக்கப்பட்டு இருந்ததால், மோகனும் சரண்யாவும் அறிமுகமாகி நாளடைவில் காதலித்து வந்துள்ளனர்.

சரண்யாவின் காதலுக்கு சக்திவேல் எதிர்ப்பு தெரிவிக்கவே, சரண்யா மற்றும் மோகன் கடந்த 9-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். சரண்யாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ், திருமணத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர். சக்திவேலின் மனைவி, “உன் தங்கையால் தான் என் தம்பி வாழ்க்கை இழந்து நிற்கிறான்”, என்று சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல், சரண்யாமீது கடுங்கோபத்தில் இருந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, சக்திவேல் சரண்யாவை தொலைபேசி மூலமாக அழைத்து. “நீங்கள் திருமணம் செய்துகொண்டதால் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. உன் பெயரில் நகையை அடகு வைத்திருக்கிறோம். நீ வந்தால்தான் மீட்க முடியும். அதை மீட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடு. இருவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்”, என கூறி அழைத்துள்ளார்.

சரண்யாவும் மோகனும் கும்பகோணம் வந்து நகைகளை மீட்டு சக்திவேலிடம் ஒப்படைத்துவிட்டு, துலுக்கவேலியில் உள்ள தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் மற்றும் ரஞ்சித், மோகன் மற்றும் சரண்யாவை ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர். பட்டப்பகலிலேயே நடந்த இக்கொடூரக் கொலையை தடுப்பதற்கோ, சம்பந்தப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்கோ யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலர் கண்முன்னாலேயே இந்த கோரச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

***

சரண்யா மற்றும் மோகன் படுகொலை செய்யப்பட்ட பின் ஆதிக்கசாதி வெறியர்கள் எல்லாம் “மோகன் சரண்யாவுக்கு நீதிவேண்டும்” (#justice_for_mohan_saranya) என்ற பெயரில் டிவிட்டரில் பொங்கி எழுந்து, “நாங்கள் செய்தால் ஆணவப்படுகொலை என்றால் தலித்துகள் செய்யும் படுகொலைக்கு என்ன பெயர்?”, “சாதிக்கு ஒரு நீதியா!”, “போராளிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்க மறுப்பது ஏன்?”, என தங்கள் வியாக்கியானங்களைப் பேசுகின்றனர்.

ஆதிக்கசாதி இளைஞர் தலித் பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஆதிக்க சாதி  பெண்ணை தலித் இளைஞர் திருமணம் செய்தாலோ ஆதிக்க சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட  சாதியை சேர்ந்தவர் அல்லது தம்பதியர் இருவரும் படுகொலை செய்யப்படுவார்கள். இதுவரை நடைபெற்ற சாதிவெறி ஆணவப்படுகொலைகள் யாவும் பெரும்பாலும் மேற்கூறியவாறே நடந்துள்ளன.

விதிவிலக்காக ஒடுக்கப்பட்ட  சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள்ளேயும் சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. உதாரணத்திற்கு, 2019 இல் தூத்துக்குடியில் பேச்சியம்மாள் – சோலைராஜ் என்ற பள்ளர், பறையர் சாதியைச் சேர்ந்த இணையர்கள் திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக பள்ளர் சாதியை சேர்ந்த உறவினர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆதிக்கசாதி வெறியர்கள் கூறுவதைப் போல், அப்படுகொலையை சாதிவெறிப் படுகொலை இல்லை என்று யாரும் மறுத்து பேசவில்லை.

ஆனால், சரண்யாவின் குடும்பமானது சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் குடும்பம் அல்ல என்பதற்கு சரியான சான்று, சரண்யாவின் தம்பி சதீஷ், வன்னிய சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதை அக்குடும்பமானது ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆக சாதி மாறி திருமணம் செய்ததற்காக இப்படுகொலை செய்யப்படவில்லை என திட்டவட்டமாக தெரியவருகிறது.

அப்படியென்றால், இப்படுகொலைக்கு என்ன காரணம்? சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் ரஞ்சித்தின் ஆணாதிக்க வெறிதான். சரண்யாவையும் மோகனையும் கொலை செய்வதற்கு இருவருக்குமே காரணங்கள் இருந்தன. தான் கைக்காட்டிய தனது மச்சினன் ரஞ்சித்தை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சக்திவேலின் பிரச்சினை. ரஞ்சித்துக்கோ தன்னை ஒதுக்கிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொண்டு விட்டாள் என்பது பிரச்சினை. இருவருமே சரண்யா என்ற பெண்ணின் சுய விருப்பங்களையும் தெரிவுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆணாதிக்கவெறியின் உச்சக்கட்டமே சரண்யா மோகன் படுகொலை.

இந்த ஆணாதிக்கப் படுகொலையும், ஆணவப் படுகொலை என்ற வரம்பிற்குள்தான் வருகிறது. ஆணவப் படுகொலை என்றால் வெறும் சாதிவெறி ஆணவப் படுகொலை மட்டும் கிடையாது. ஆணவம் என்ற வரம்பிற்குள் சாதி, ஆணாதிக்கம், வர்க்கம், அந்தஸ்து, பாலினம், இனம், மொழி, தொழில் மற்றும் எல்லை போன்றவைகளும் வருகின்றன. எனவே இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்று நாம் கூறுகிறோம். சாதி ஒழிப்பு முன்னணி தோழர் ரமணி, எவிடென்ஸ் கதிர் ஆகியோரும் இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப்படுகொலை என்றே குறிப்பிடுகின்றனர்.

***

சமூகத்தில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே இப்படுகொலைகளை தடுக்க, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கின்றன.

சட்டம் இயற்றப்பட்டால், இப்பிரச்சினையானது தீர்ந்துவிடும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் எல்லாம் பேசுகின்றன. ஏற்கெனவே உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இந்த அரசானது பயன்படுத்தி பிரச்சனைகளை கையாண்ட விதத்தை பார்த்தாலே இச்சட்டங்களின் யோக்கியதைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

சான்றாக சங்கர்-கௌசல்யா ஆணவப்படுகொலையில், கௌசல்யா கண் முன்னாலேயே சங்கர் துடிதுடிக்க கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்படுகொலைக்கு முக்கிய காரணமான கௌசல்யாவின் பெற்றோர்களான சின்னசாமி மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கர் கௌசல்யா வழக்கானது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த அரசுக் கட்டமைப்பானது இதுபோன்ற ஆணவப்படுகொலை வழக்குகளில் தன்னுடைய “நீதியை” நிலைநாட்டியதற்கு ஒரு சான்று.

படிக்க : கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

ஆகவே, சங்கர்-கௌசல்யா மற்றும் தற்போது கொல்லப்பட்ட மோகன்-சரண்யா ஆகியோரது ஆணவப் படுகொலைகளுக்கு மையக் காரணமானது, ஈராயிரம் ஆண்டுகளாய் மக்கள் மத்தியில் புரையோடிப்போயுள்ள சாதிவெறி மற்றும் ஆணாதிக்க வெறி மனநிலையே.

இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலக்காரணமான சமூகக் கட்டமைப்பை மாற்றாமல், எவ்வளவு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை எல்லாம் வெறும் கழிவறைக் காகிதங்களே.

மக்களிடையே சாதிவெறி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை தீவிரப்படுத்தும் விதமாக ஆதிக்கசாதி மற்றும் மதவெறி அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ஆதிக்கசாதி அமைப்புகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளால் சுயசாதி பெருமை ஊட்டப்படுவது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இவ்வமைப்புகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் சாதிவெறி மற்றும் ஆணாதிக்க மனநிலையை மாற்றியமைக்க முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் என்ன செய்துள்ளன என்ற கேள்வி எழுகிறது.

பெரும்பாண்மை உழைக்கும் மக்களிடம் பிற்போக்கு சாதிவெறி மற்றும் ஆணாதிக்க பண்பாட்டை முறியடித்து, புதிய முற்போக்கு பண்பாட்டை நிறுவ, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் அனைத்தும், சாதி மறுப்பு திருமணங்கள், சாதிவெறி மற்றும் ஆணாதிக்க கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். இவைதான் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொடக்கமாக அமையுமே ஒழிய, சிறப்புச் சட்டங்களால் அல்ல.


குயிலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க