கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி என்ற பகுதியில் சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட மோகன் மற்றும் சரண்யா என்ற காதல் தம்பதியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சோழபுரம் துலுக்க வேலியை சேர்ந்த சேகர் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் என்ற மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளனர். சேகர் தம்பதியினரின் மூன்று மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
அவரது ஒரே மகளான சரண்யா நர்சிங் படிப்பு முடித்துவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் சரண்யாவின் தாயாரான தேன்மொழி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
படிக்க :
பள்ளி மாணவனை தீயில் தள்ளிய சாதிவெறி | பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்ன தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் தாயாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த சமயத்தில் மோகன், சரண்யா இருவருக்கும் இடையே மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர்.
சரண்யா தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ளலாம் என்று போராடியுள்ளார். சரண்யா காதலிப்பது தெரிந்தவுடன் சரண்யாவின் அண்ணனான சக்திவேல் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளார்.
நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்து இனிமேலும் தாமதிக்க முடியாது என்பதால் மோகனும், சரண்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து, படுகொலை நடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
மோகன் மற்றும் சரண்யா இருவரையும் சக்திவேல் சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளனர். இதை நம்பி சென்ற மோகன் மற்றும் சரண்யா மதிய உணவு சாப்பிட்ட பின்பு, சென்னைக்கு கிளம்பலாம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தபோது மோகன் மற்றும் சரண்யாவை துரத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர். இந்த படுபாதக கொலையை செய்தவர் சரண்யாவின் அண்ணன் சக்திவேலும், அவரது மைத்துனர் ரஞ்சித் என்பவருமே. குற்றவாளிகளான சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் போலீசில் சரணடைந்துள்ளனர்.
2018-ல் உச்சநீதிமன்றம் “ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், அந்தக் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்காகவும், நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோகன் மற்றும் சரண்யாவின் படுகொலை என்பது இந்தியாவில் சாதிவெறி, மதவெறி, பார்ப்பனிய ஆணாதிக்க வெறியில் எவ்வாறு ஊறிப்போய் உள்ளது என்பதையே நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக, ஆணவப்படுகொலை என்றாலே சாதி மாறி காதலித்தால் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக பையன் ஒடுக்கப்பட்ட சாதியாகவும், பெண் ஆதிக்க சாதியாக இருந்தால் நிச்சயம் அந்தப் படுகொலை ஒரு சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடமுடியும்.
ஆனால் மோகன் மற்றும் சரண்யாவின் விஷயத்தில் மோகன் செங்குந்த முதலியார் சாதியை சேர்ந்தவர், சரண்யா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். எப்படி பையன் உயர் சாதியாக இருந்தும் ஏன் இந்த படுகொலை நடந்துள்ளது என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
படிக்க :
கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
சமூக நீதியிலும் சாதி தீண்டாமை !
மோகன் மற்றும் சரண்யா தம்பதியரின் படுகொலைக்கு முதன்மையான காரணியாக ஆணாதிக்க வெறிதான் இருக்க முடியும். அதாவது பார்ப்பன மனு தர்மத்தின் படி, இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஜனநாயகமும் இல்லை, எந்த உரிமையும் இல்லை. ஒரு பெண் சுயமாகதான் யாரை காதலிக்க வேண்டும், தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் அவளுக்கு கிடையாது. அவள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் யாரை கை காட்டுகிறார்களோ? அவரைத்தான் அந்தப்பெண் திருமணம் செய்ய முடியும்.
இவ்வாறு ஆணாதிக்கம், சாதி வெறிபிடித்த மனநோயாளிகள் அதிக அளவில் உளாவிவரும் இந்த சமூகத்தில் உச்சநீதிமன்றத்திலோ? அல்லது நாடாளுமன்றத்திலோ? எத்தனை எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் சாதிவெறி படுகொலைகளும், ஆணாதிக்க வெறியும் ஒழிய போவதில்லை. ஜனநாயகம் என்பதே துளியும் இல்லாத இந்த சமூகத்தில் ஒரு பெண்  சுதந்திரமாக தாம் விரும்பிய வரை கை பிடிக்க முடியாது.
சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது. வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும் !

இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.

2 மறுமொழிகள்

  1. ஆணாதிக்க வெறி பிடித்த இந்த சமூக கட்டமைப்பை இடித்து நொறுக்காமல் பெண்களை சாதிய – ஆணாதிக்க மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முடியாது

  2. “மோகன் மற்றும் சரண்யா தம்பதியரின் படுகொலைக்கு முதன்மையான காரணியாக ஆணாதிக்க வெறிதான் இருக்க முடியும்”
    No,Saranya is employed in a respectful JOB earning Good Salary

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க