விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியம்பூண்டி என்ற கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர்களும் 10–க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வன்னிய சமூகத்தை சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு நிரந்தரமான மயானம் உள்ளது. ஆனால், அங்கு பல ஆண்டுகளாக வாழந்துவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் இல்லை.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் யாராவது ஒருவர் மரணம் அடைந்தால் கிராமத்தை சுற்றி இருக்கும் ஏரி, குளம், கண்மாய் ஆகியவற்றின் கரைகளில்தான் புதைத்து வந்தனர். மழை காலங்களில் இவர்களில் யாராவது ஒருவர் மரணம் அடைந்திருந்தால் அவர்களை புதைப்பதற்கு மிகப்பெரிய இன்னல்களைதான் சந்தித்து வருகின்றனர்.
தங்களுக்கென ஒரு நிரந்தரமான மயானம் வேண்டும் என்று பல வருடங்களாக அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தைச் சார்ந்த அமுதா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய அந்தப் பகுதியில் உள்ள வன்னியர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர். இதற்கு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிணத்தை புதைக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மக்கள் பிணத்துடன், தங்களுக்கு தனியாக ஒரு மயானம் அமைத்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்க :
சமூக நீதியிலும் சாதி தீண்டாமை !
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு
அரசாங்கத்தாலும், ஆதிக்க சாதியினராலும் உயிரோடு வாழும்போதே பல இன்னல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இடையூறுகளுக்கும் ஆட்பட்டுதான் உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்த பின்பும் இதுபோன்ற பல பிரச்சினைகளை சந்திப்பது என்பது காலம்காலமாக நடைபெறுவது ஒரு அவலமே.
தாழ்த்தப்பட்ட மக்களை மாற்று சமூக மக்கள் தங்களது மயானத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவிடாமல் அவர்களை தடுத்து நிறுத்துகிறது சாதிவெறி. ஆனால், இந்திய நீதிமன்றமோ பொது மயானத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
000
திண்டிவனம் அருகே உள்ள காட்டுவிசிரி கிராமத்தில் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுந்தர்ராஜ் என்பவர் அங்கு உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுந்தர்ராஜனுடன் படிக்கும் சக மாணவர்கள் அவரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியுள்ளனர். இதையடுத்து சுந்தர்ராஜனும் அவருடைய தந்தையும் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இதனால் சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்திய மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் தனது வகுப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த சில மாணவர்கள் சுந்தர்ராஜனை, சாதிப் பெயரை சொல்லி திட்டி அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் சுந்தர்ராஜனை இழுத்துச்சென்று தள்ளியுள்ளனர்.
000
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருக்கோவிலூர் போலீசு நிலையத்தில் காவல் ஆய்வாளராக சீனிவாசன் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் அருகே பழங்குடியின மக்கள் வாழும் தீ மண்டபம் என்ற கிராமத்திற்கு சீனிவாசன் உட்பட நான்கு போலீஸ் விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த பழங்குடியின பெண்கள் நான்கு பேரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக கூறிவிட்டு அங்கு இருந்து சென்றுள்ளனர்.  இது தொடர்பான வழக்கு விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது அரக்கோணம் போலீசு நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, சீனிவாசனை கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதைக்கேட்ட சீனிவாசன் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் ஓடிவிட்டார்.
000
மேற்கூறிய மூன்று நிகழ்வுகளுமே விழுப்புரம் மாவட்டம், குறிப்பாக திண்டிவனத்தை சுற்றியே நடந்துள்ளனர். குறிப்பாக போலீசு சாதிவெறி – அதிகாரத்திமிருடன் பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். வட தமிழகத்தில் தன்னை ஆதிக்க சாதியாக காட்டிக் கொள்ளவும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சாதி ரீதியாக வெறியூட்டி மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதே, இப்பகுதிகளின் சாதிவெறி வேரூன்றி நிற்பதற்கு காரணமாக அமைகின்றன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த சாதிய கொடுமைகளுக்கு முடிவுகட்ட, சாதிவெறியூட்டும் கட்சிகள் ஒழித்துகட்டி ஒரு தீர்க்கமான சமூக மாற்றத்தை நோக்கி செல்வதே தீர்வாக அமையும்.
வினவு செய்தியாளர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க