சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.
சாவர்க்கரை புணர்நிர்மாணம் செய்யும் [புனிதராக்கும்] திட்டம் தற்போது புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. “சாதிக் கொடுமை, சாதியத் தீண்டாமை மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதி போன்ற மோசமான சமூகக் கொடுமைகள் இல்லாத ஒரு தேசத்தை அவர் கற்பனை செய்திருந்தார்” (‘சாதியற்ற சமுதாயத்திற்காக சாவர்க்கர் எவ்வாறு போராடினார்’, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 28-02-2022) என்று சமீபகாலமாக சாவர்க்கரிஸ்டுகள் கூறிவருகிறார்கள். மேலும், “சமூக ஒருமைப்பாட்டுடன் இணைந்த சமூக நீதியின் அடிப்படையிலான சாதியற்ற சமூகத்தை அமைப்பதற்காக அவர் வாதாடினார். சாதிய கட்டமைப்பை வேரோடு அகற்றி, இந்து ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்க விரும்பினார், அங்கு தலித்துகள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்’’ என்றும் கூறுகிறது மேற்சொன்ன கட்டுரை. மேலும், “மனுஸ்மிருதி போன்ற சாதியை ஆதரிக்கும் வேதங்ககளுக்கு எதிராக அவர் பேசினார். சாவர்க்கரின் கூற்றுப்படி, இந்த வேதங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கருவிகளாகும். சமூகக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.’’ என்று கூறுகிறது அக்கட்டுரை.
இந்து மகாசபாவின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சாவர்க்கரின் எழுத்துக்கள் மற்றும் ஆவணங்களுடன் இக்கட்டுரையின் வாதங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். சாவர்க்கர் இந்துத்துவத்தின் தீர்க்கதரிசியும், 1923-ல் அதே தலைப்பில் (இந்துத்துவா : இந்துக்கள் யார்? இந்துத்துவத்தின் அடிப்படைகள்) புத்தகத்தை எழுதியவரும் ஆவார். அந்த நூலில் அவர் சாதியத்தைப் பாதுகாத்ததோடு, ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு இந்து சமுதாயத்தில் சாதியம் என்பது அவசியமான இயற்கை அங்கமாக அவர் கருதினார். ‘தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் இந்த விவகாரத்தைப் பற்றிக் கூறும்போது, சாதிய அமைப்பு என்பது இந்து தேசத்தை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்துவமான அடையாளம் [அதாவது சாதிய அமைப்பு இந்து தேசத்தின் தனித்துவமான அடையாளம்] என்று அவர் அறிவித்தார்.
“பௌத்தர்களின் ஆட்சியிலும் கூட அழிக்க முடியாத இந்த நான்கு வர்ணங்களின் அமைப்பானது, நான்கு வர்ணங்களின் அமைப்பை நிறுவியவர் என்று அழைக்கப்படுவதை மன்னர்களும், பேரரசர்களும் மிக பெரிய சாதனையாக கருதும் அளவுக்குப் பிரபலமடைந்தது. இதன் விளைவாக இன்று சாதிய அமைப்பானது நமது தேசியத்தை [சாதியத்தோடு] அடையாளம் காணும் அளவிற்கு மிகவும் வலுவாக வளர்ந்துள்ளது’’.
சாவர்க்கர், இந்து தேசத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக சாதியைக் கருதியதோடு, அதை உறுதிபடுத்த ஒரு மேற்கோளையும் காட்டி (இது யாரால் கூறப்பட்டதென்று அவர் குறிப்பிடவில்லை) “நால்வர்ண அமைப்பு இல்லாத நிலம் மிலேச்ச நாடு. ஆரியவர்தம் [ஆரியர்கள் வாழும் பகுதி] அந்நிலத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
சாவர்க்கர் சாதியத்தைப் பாதுகாத்ததானது, உண்மையில் [தூய]இனவாத அணுகுமுறையின் அடிப்படையிலான இந்து தேசம் பற்றிய அவரது புரிதலின் நியாயமான முடிவுதான். சாதியானது இந்து சமுதாயத்தின் இரத்த ஓட்டத்தைத் [அதாவது இரத்தக் கலப்பை] தடை செய்கிறது என்ற விமர்சனத்தை மறுத்த அவர், இவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதாக ஒரு சுவாரஸ்யமான வாதத்தை முன்வைத்து, இந்து இனத்தின் தூய்மை பேணப்படுவதற்கு சாதியம் தான் காரணம் என்று வாதிட்டார்.
அவர் கூறினார் :
“சாதியக் கட்டமைப்பு செய்ததெல்லாம், புனிதத் தன்மை கொண்டவர்களும் தேசபக்தர்களுமாக நம்பப்பட்ட – அது உண்மையும் கூட – சட்டத்தை இயற்றுபவர்களாகிய நமது [பார்ப்பனர்களது] தூய உன்னத இரத்த ஒழுங்கைப் பாதுகாத்ததுதான். மேலும் தரிசு நிலத்தை உரமிட்டு செழுமைப்படுத்த அரசர்கள் மேற்கொண்ட முயற்சியானது, உன்னதமான செழிப்பான நிலத்தை இழிவுபடுத்தாமல் செய்யப்பட்டது.” [அதாவது மக்கள்தொகையைப் பெருக்க மன்னர்கள் மேற்கொண்ட முயற்சியானது, பார்ப்பனர்களின் ‘உன்னத’ இரத்தத்தை பாதுகாப்பாக வைத்தே இருந்தது என்ற பொருளில் சாவர்க்கர் இதைக் கூறுகிறார்.]
வியப்பு என்னவென்றால், சாதியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்ற சாவர்க்கர், குறுகிய காலத்திற்கு இந்து சமூகத்தில் தீண்டத்தகாதவர்களின் நிலையை உயர்த்தவும் வாதிட்டார். இந்துக் கோவில்களில் உள்ள தீண்டாமைக்கு எதிராகவும் தீண்டப்படாதோர் கோயிலுக்குள் நுழைவதற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அவரின் சமத்துவக் கண்ணோட்டத்திலிருந்து நடத்தப்பட்டவை அல்ல. தீண்டப்படாதவர்களை சமத்துவமாக நடத்திய இசுலாம் மற்றும் கிறித்தவம் போன்ற மதங்களுக்கு தொடர்சியாக அவர்கள் மதம் மாறும் போது, இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதால் உண்டான கவலையிலிருந்தே நடத்தப்பட்டவை.
குறிப்பிட்ட சில சாதிகளைச் சார்ந்த இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதால், இந்தியாவில் இருந்த 7 கோடி (அப்போதைய மக்கள் தொகையின்படி) தாழ்த்தப்பட்ட “இந்து மக்கள் சக்தி”-யானது ‘எங்கள்’ பக்கம் (உயர் சாதி இந்துக்கள் பக்கம்) நிற்கவில்லை என்பதை சாவர்க்கர் ஒப்புக்கொண்டார். இந்து தேசியவாதிகள் முசுலீம்கள், கிறித்துவர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு, காலாட்படையாக உடல்பலமுள்ள இந்த தீண்டத்தாகாதவர்கள் மிகவும் தேவை என்பதை சாவார்க்கர் அறிந்திருந்தார். எனவே தீண்டத்தகாதவர்கள் தங்களது பிடியில் இருக்கவில்லை என்றால் உயர்சாதி இந்துக்களுக்கு மிகவும் பயங்கரமான நெருக்கடியைக் கொண்டுவரும் ஒரு காரணியாக மாறிவிடுவார்கள் என்று எச்சரித்ததோடு, “அவர்கள் நமக்கு சேவை செய்வதை நிறுத்துவது மட்டுமல்லாமல், நமது மதத்தை பிரிப்பதற்கான எளிதான வழிமுறையை உருவாக்குவதுடன், இதனால் நமக்கு ஏற்படப் போகும் எல்லையற்ற இழப்புக்கும் காரணமாகிவிடுவார்கள்’’ என்றும் புலம்பினார்.
இந்த பிரச்சினையில் சாவர்க்கரின் நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வமான பதிவானது சாவர்க்கரின் செயலாளர் ஏ.எஸ்.பிடேயின் “விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளி பிரச்சாரம்: தலைவரின் நாட்குறிப்பில் இருந்து டிசம்பர் 1937 முதல் அக்டோபர் 1941 வரையிலான பிரச்சார சுற்றுப்பயணங்களின் நேர்காணல்” என்ற புத்ததகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இது இந்து மகாசபையின் அணிகளுக்கான அதிகாரப்பூர்வமான வழிகாட்டி நூலாகும். அதன்படி “இந்து மகாசபா அமைப்பை அதன் விதிமுறை வரம்புகளில் உத்தரவாதம் அளிக்கப்படாத [அதாவது இந்து மத விதிகளுக்கு முரணான] சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல்” தனது தனிப்பட்ட முயற்சியில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை [கோயில் நுழைவை] மேற்கொள்வதாக சாவர்க்கர் அறிவித்தார். 1939 ஆம் ஆண்டு கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவதை எதிர்த்த இந்து மகாசபையைச் சேர்ந்த சனாதான இந்துக்களிடம் அவர் பின்வருமாறு உறுதியளித்தார் :
“இன்று நடைமுறையில் உள்ள வழக்கப்படி இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி, தீண்டத்தகாதவர்கள் [பிற] கோவில்களில் நுழைவது தொடர்பான கட்டாய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டோம்”.
ஜூன் 20, 1941 அன்று, தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கும் விவகாரத்தில், சனாதன இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தமாட்டேன் என்று மீண்டும் உறுதியளித்தார். இந்த முறை ஒருபடி மேலே சென்று
“பெண்களுக்கு எதிரான மற்றும் தலித் எதிர்ப்பு இந்து தனிச்சட்டங்களைத் தொடமாட்டேன். புராதன கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவது தொடர்பான எந்த சட்டத்தையும் இந்து மகாசபை வலியுறுத்தவோ அல்லது அந்தக் கோவில்களில் நிலவும் புனிதமான பழமையான மற்றும் தார்மீக பயன்பாடு வழக்கத்தை மாற்ற சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நமது சனாதன சகோதரர்கள் மீதான சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் எந்த தனிச்சட்டத்தையும் இந்துமகாசபை ஆதரிக்காது”
என்றும் வாக்குறுதியளித்தார்.
சாவர்க்கர் தனது வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் சிறந்த தலைவனாகவும், மனுஸ்மிருதியை வழிபடுபவராகவுமே இருந்தார். எந்த மனு நெறிமுறைகள் சாதிய அமைப்பும், தீண்டாமையும் தோன்றி வளரக் காரணமாக இருந்ததோ, அம்மனுஸ்மிருதியைப் பெரிதும் போற்றி அவர் எழுதியதாவது :
“மனுஸ்மிருதி என்பது இந்த இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படும் விதிகளாகும். இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம் -பழக்க வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைகளின் அடிப்படையாக மாறியுள்ளது. இந்த புத்தகம் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக உள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்விலும், நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே உள்ளன. இன்று மனுஸ்மிருதியே இந்து சட்டம். அதுவே இந்து மதத்தின் அடிப்படை”
என்று குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரானவர் என்று நிறுவுவதில் முனைந்துள்ள சாவர்க்கரிஸ்டுகள், துரதிர்ஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர், பிப்ரவரி 18, 1933 அன்று சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தை தவறாக சித்தரிக்கவும் கூச்சப்படுவதில்லை. அக்கடிதத்தைக் கொண்டு சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரான ஒரு போராளியாக நிலைநிறுத்த முயல்கின்றனர்.
அக்கடிதத்தைக் குறிப்பிட்டு சாவர்க்கரிஸ்டுகள் வாதிடுவதாவது :
“சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால், தீண்டாமையை நீக்கினால் மட்டும் போதாது; அதற்காக நீங்கள் ‘சதுர்வர்ணத்தை’ [நால்வர்ணத்தை] அழிக்க வேண்டும். இதை உணர்ந்த ஒரு சில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” [பிப். 18, 1933 அன்று சாவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதத்திலிருந்து சாவர்க்கரிஸ்டுகள் மேற்கோள் காட்டும் பகுதி]
சாவர்க்கரிஸ்டுகளின் நேர்மையின்மையை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காக அந்தக் கடிதம் முழுவதுமாக இங்கே கொடுக்கிறோம் :
“ரத்னகிரி கோட்டையில் உள்ள கோவிலை தீண்டத்தகாதவர்களுக்காகத் திறக்க என்னை அழைத்த கடிதத்திற்கு மிக்க நன்றி. முன்பே திட்டமிடப்பட்ட பணிகளின் காரணமாக உங்களது அழைப்பை என்னால் ஏற்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். எவ்வாறாயினும், சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்களின் பிரச்சனை என்று அழைக்கப்படுவதை எனது பார்வையில் பார்க்கும்போது, அது இந்து சமூகத்தின் மறுசீரமைப்பு பிரச்சினையுடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாக உணர்கிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றால் தீண்டாமையை ஒழித்தால் மட்டும் போதாது, அதற்கு நீங்கள் சதுர்வர்ணத்தை அழிக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இல்லாமல் பிற்சேர்க்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றால், கோவிலைப் பொருத்தவரை தீண்டாமை நிலைத்திருக்கலாம். இதை உணர்ந்த வெகு சிலரில் [அதாவது சதுர்வர்ணத்தை அழிக்க வேண்டும் என்று சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறவில்லை. ஆலயத் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறுகிறார்.] நீங்களும் ஒருவர் என்பதை கண்டு மகிழ்கிறேன். ஆனால் இன்னும் நீங்கள் [சாவர்க்கர்] சதுர்வர்ணத்தின் வாசகங்களைப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் நீங்கள் தகுதி பெற்றாலும் [உயர்ந்தவரென்றாலும்] அது துருதிருஷ்டவசமானது. இருப்பினும், காலப்போக்கில் இந்த தேவையற்ற மற்றும் விசமத்தனமான பிதற்றல்களைக் கைவிட உங்களுக்கு துணிச்சல் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்’’
[அதாவது அம்பேத்கரின் கடிதத்திலிருந்து சில வாசகங்களை எடுத்து வெட்டி ஒட்டி, சாவர்க்கர் நால்வர்ண அமைப்புக்கு எதிராகப் போராடியவர் என்று அம்பேத்கரே பாராட்டியிருப்பதைப் போன்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள் சாவர்க்கரிஸ்டுகள். ஆனால் அம்பேத்கர் அதேகடிதத்தில், சாவர்க்கர் நால்வர்ண அமைப்பை ஆதரித்ததை சாடுகிறார்.]
உண்மையில், டாக்டர் அம்பேத்கர் 1940 இல் [“பாகிஸ்தான் அல்லது தேசப்பிரிவினை” என்ற நூலில்] ஒரு முடிவுக்கு வந்தார். அது,
“இந்து ராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். அந்த வகையில் அது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. எந்தவிலை கொடுத்தாயினும் இந்து ராஷ்டிரத்தைத் தடுத்தாக வேண்டும்”.
(குறிப்பு : சாவர்க்கரை சாதிய தீண்டாமைக்கு எதிரானவர் போல சித்தரிக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிளில் வெளியானது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்து மகாசபையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்தே ஆதாரங்களுடன் பேரா. சம்சுல் இசுலாமால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சாவர்க்கர் எந்தளவுக்கு சாதிவெறியராகவும், மனுதர்மத்தின் பாதுகாவலராகவும், ‘தூய’இந்து இரத்தம் என்ற கருத்தாக்கத்தின் பிதாமகனாகவும் விளங்கினார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்தே தெளிவாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். மேலும் இந்து தேசம், இந்துராஷ்டிரம் என்பது சாதியை ஒழித்த, சாதியைக் கடந்த இந்து தேசமல்ல சாதிய ஒடுக்குமுறையைப் பாதுகாப்பதின் அடிப்படையிலான இந்து தேசமே என்பதையும் சாவர்க்கரின் எழுத்துக்களிலிருந்தே வாசகர்கள் விளங்கிக் கொள்ள முடியும். பட்டை அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகள் ஆகும்.)
கட்டுரையாளர் : பேராசிரியர் சம்சுல் இசுலாம் மொழியாக்கம் : இசாஸ் ரஹ்மான் நன்றி : Countercurrents