ந்துத்துவ சித்தாந்தவாதிகளான சாவர்க்கர், கோல்வால்கர், உபாத்யாயா, மதோக் ஆகியோரால் எழுத்தப்பட்ட சில நூல்களை கேரளாவில் உள்ள கண்ணூர் பல்கலைக் கழகத்தின் கடந்த செப்டம்பர் மாதம் ஆட்சி மற்றும் அரசியல் என்ற முதுகலை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். இதற்கு பெரும் கண்டனம் எழுந்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த நூல்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது, பல்கலைக்கழகம்.
காங்கிரஸ், சி.பி.ஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-ஐச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நூல்களைச் சேர்ப்பது “கல்வியின் காவிமயமாக்கலை” பிரதிபலிப்பதாகக் குற்றம் சாட்டினர். இப்பாடத்திட்டத்தை நீக்கவேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாடத்திட்டத்தில் மாற்றங்களை மறுபரீசீலனை செய்ய இரண்டு பேர் கொண்ட வெளி நிபுணர் குழுவை பல்கலைக்கழகம் அமைத்தது.
கண்ணூர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரான ரவீந்திரன், இந்திய அரசியல் சிந்தனையின் பல்வேறு போக்குகளைப் பற்றி மாணவர்கள் ஒரு விமர்சனப் புரிதலை வளர்ப்பதற்காகத்தான் மூன்றாம் பருவ பாடத்தின் முக்கிய தலைப்பில் இந்துத்துவ தலைவர்களின் எழுத்துக்கள் சேர்க்கப்படுள்ளதாக விளக்கமளித்தார்.
படிக்க :
பாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் !
ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
“இப்பாடத்திட்டம் முதுகலை மாணவர்களுக்கானது அவர்கள் குழந்தைகள் அல்ல” என்றும், ஜவஹர்லார் நேரு பல்கலைக் கழகம் மற்றும் டெல்லி பல்கலைக் கழகம், இந்த நூல்களை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது; சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோரின் நூல்கலைப் படிக்காவிட்டால் சமகால அரசியலைப் புரிந்து கொள்வது கடினம் என்றும் கூறினார்.
பாடத்திட்டத்தில் மார்க்சின் மூலதனம் நூலைச் சேர்ப்பது, பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றாததுபோல, சாவர்க்கர், கோல்வால்கரின் நூல்கள் “காவிமயமாக்கல்” என்று கூறுவது பொருத்தமற்றது, பாடத்திட்டத்தை முழுமையாக படிக்காதவர்கள் மட்டுமே இத்தகைய விமர்சனத்தை செய்வார்கள் என்கிறார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவீந்தரன்.
பாடத்திட்டத்தில் சாவர்க்கரின் “யார் இந்து?”, “நாம் அல்லது நமது தேசியம்” ஆகிய நூல்களும், தீனதயாள் உபாத்யாயாவின் “ஒன்றிணைந்த மனிதம்” மற்றும் பால்ராஜ் மதோக்-இன் “இந்தியமயமாக்கம் : என்ன? ஏன் மற்றும் எப்படி?” என பல்வேறு இந்துத்துவ நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பல்கலை துணைவேந்தர் ரவீந்திரன் கூறுவதைப் பார்ப்பதற்கு ஜனநாயகப் பூர்வமானதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்துத்துவம் என்பது ஏதோ முதலாளித்துவம், கம்யூனிசம் போன்ற நிகழ்கால, எதிர்கால சமூகத்துக்கான அரசியல் பொருளாதாரக் கோட்பாடு அல்ல. அது ஒரு பாசிசக் கோட்பாடு. மக்களின் மனதில் சக மனிதர்கள் மேல் வெறுப்பையும் வன்முறையையும் வளர்க்கும் கோட்பாடு.
பாசிச, பிற்போக்குக் கோட்பாடுகளை சமூகத்தை பிளவுபடுத்தும், பின்னோக்கி இழுக்கும் கோட்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் பாடங்களில் சேர்க்கலாம். அது ஏற்புடையது. ஆனால், சாவர்க்கர், கோல்வால்கர், உபாத்யாயா போன்ற சமூகக் கிருமிகளின் கருத்துக்களை அப்படியே மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது, அவர்கள் முதுகலை மாணவர்களாக இருப்பினும் – விஷ விதைகளை விதைப்பதற்கு ஒப்பானது.
படிக்க :
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
காவி பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புக்கள் – ஒரு தொகுப்பு
இத்தகைய வகுப்புவாதக் கருத்துக்கள் ஏற்கெனவே சமூக எதார்த்தமாக மக்கள் மனதில் பதியச் செய்திருக்கும் நிலையில், பள்ளி – கல்லூரி பாடங்களில் அவற்றைக் கொண்டுவருவது என்பது, மோசமான ஒரு புறச் சூழலில் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.  இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.
அதுவரை ஒரே தெருவில் அண்ணன் தம்பியாகப் பழகிவந்த இந்துக்களும் முசுலீம்களும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளவும், சொத்துக்களை சூறையாடவும் அடிப்படையாக அமைந்தது, அமைதிக் காலகட்டங்களில் அவர்கள் மனதில் பதியவைக்கப்பட்ட வகுப்புவாத விஷ விதைகள் தான். அன்று அதை முஸ்லீம் லீக்-உம் ஆர்.எஸ்.எஸ். – இந்து மகாசபைக் கும்பலும் செய்துவந்தன.
பிரிட்டிஷ் அரசு தனது பிரித்தாளும் கொள்கைக்கு இதை பயன்படுத்திக்க் கொள்ளும்வகையில் தான் மத அடிப்படைவாதக் கருத்துக்களை பரப்புவதை அனுமதித்தது. சாவர்க்கர் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதே இத்தகைய மத அடிப்படைவாத சில்லுண்டி வேலைகளில் ஈடுபட்டு சுதந்திரப் போராட்டத்தை சீர்குலைக்கத் தானே !
இன்று பல்கலைக் கழகங்களிலும் பள்ளிகளிலும் பாடத்திட்டத்தின் வாயிலாகவும், கலாச்சாரத்தின் வாயிலாகவும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் திணிப்பதை அனுமதிப்பதன் மூலம்,  நமது பழைய அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறினால், மதவாத கலவரங்களையும் அதனால் ஏற்படப் போகும் இழப்புகளையும் என்றும் நம்மால் தடுக்க முடியாது.
சந்துரு
செய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ் , தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க