சாவர்க்கர் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார். கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சிகள், பெங்களூருவில் உள்ள ஏலாஹன்கா மேம்பாலத்திற்கு சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இந்தியர்களை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள சாவர்க்கர் தூண்டுதலாக இருந்தார் என கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஓராண்டுக்கு முன்னர்தான், மராட்டிய தேர்தலுக்கு ஓட்டு சேகரிக்கையில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று தனது தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. பாஜகவின் எதிர்த் தரப்பினர், சாவர்க்கரை இந்து தேசியவாத சித்தாந்தியாகவும், இந்துத்துவா என்ற சொல்லைப் பயன்படுத்தி குறிப்பான வழியில் இந்துக்களை வரையறுத்த ஒரு வகுப்புவாதியாகவே பார்க்கின்றனர். முஸ்லீம் லீக்கின் தனி பாகிஸ்தான் கோரிக்கையை சித்தாந்த ரீதியில் ஏற்புடையதாகச் செய்த “இரு தேசக் கோட்பாட்டிற்கு”- கோட்பாட்டு அடித்தளமிட்டவர்.

அந்த சாவர்க்கர் துவக்கத்தில் இருந்தே வகுப்புவாத மனநிலை கொண்டிருந்தார் என்பதற்கு அவர் சிறுவனாக இருந்த போது மசூதி மீதான அவரது குழுவினர் தாக்குதலே சான்று. இந்துத்துவா வட்டாரங்களுக்குள்ளும் கூட அவர் இரண்டு விசயங்களுக்காக பாராட்டப்படுகிறார். முதலாவது, 1857 போராட்டங்களை “முதல் சுதந்திரப் போர் எனக் குறிப்பிட்ட அவரது நூல். மற்றொன்று அந்தமான் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்படும் முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அவர் காட்டிய எதிர்ப்பு. தனது சட்டப் படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுக்க சாவர்க்கர் மறுத்தது உண்மைதான்.

சாவர்க்கர் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அது அவருக்கு 50 ஆண்டு சிறைதண்டனை பெற வழிவகுத்தது. அது அவருக்கு பெரும் துன்பத்தை விளைவித்தது. ஆனால் உண்மை என்னவெனில், அங்கு அவர்மட்டும் தனியாக அடைக்கப்படவில்லை. செல்லுலார் சிறையின் பெரும்பான்மையான சிறைவாசிகள் கொடூரங்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தனர். ஆனால் அவர் சிறையிலிருந்த போது, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மன்னிப்பு மனுக்கள் அனுப்ப முடிவெடுத்தவர்களில் சாவர்க்கரும் ஒருவர். அவரது மனுக்களில் தனது கடந்தகால நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு மட்டும் கேட்கவில்லை. கூடுதலாக, பிரிட்டிஷ் அரசு எந்த வகையில் விரும்புகிறதோ அந்த வகையில் சாம்ராஜ்ஜியத்திற்கு ஆதரவாக இருப்பதாக உறுதியும் அளித்தார்.

சாவர்க்கரின் ஆதரவாளர்கள் அவரது மன்னிப்புகளை “சாதுரியமான செயல்” என்று நியாயப்படுத்துவதோடு அவரை மராட்டிய மன்னன் சிவாஜியோடும் ஒப்பிடுகின்றனர். உண்மை என்னவெனில், அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு முழு விசுவாசமாகவே இருந்தார். அதற்காக அவர்களிடமிருந்து மாதம் ரூ. 60 ஓய்வூதியத் தொகை பெற்றார். சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரப் போராட்டத்தை பலவீனமடையச் செய்ததைத் தவிர, அவர் “சாதுர்யமாக” செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

இந்து தேசியவாதம் எனும் பிரிவினை சித்தாந்ததை முன்வைத்ததன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியின் நுகத்தடியைத் தூக்கியெறிவதற்கான இந்தியாவின் போராட்டத்தைச் சிதைப்பதற்கான விதையை ஏற்கெனவே விதைத்திருந்தார். ஹிந்து தேசம், முசுலீம் தேசம் என தேசங்களின் கோட்பாட்டை பரப்புரை செய்தார். இந்தியாவை தனது தந்தையர் பூமியாகவும், புனித பூமியாகவும் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இந்து என வரையறுக்கவும் செய்தார். அவர் முன்னிலைப்படுத்திய இந்துத்துவா எனும் சொல், மெதுமெதுவாக இந்துயிசத்துக்கு ஒத்த பொருளுடைய சொல்லாகியது. சாவர்க்கரின் பார்வையில், இந்துத்துவா என்பது இந்துத் தன்மையின் முழுமை. ஆனால், இந்துயிசம் மதமாக இருக்கையில், இந்துத்துவா ஒரு அரசியலாக இருக்கிறது. அது ஆரிய இனம் என்று சொல்லப்படும் இனத்தின் மேன்மையையும், பிராமண கலாச்சாரத்தையும் முதன்மைப்படுத்தும் அரசியலாகும்.

சாவர்க்கர் தனது காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு முக்கியமான பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கேற்கவில்லை என்ற உண்மையை அவரது ஆதரவாளர்கள் மேல்பூச்சு பூசி கடந்து செல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க இந்தியர்களை சாவர்க்கர் ஊக்கமூட்டியதாக அவரைப்பற்றி மோடி கூறியதற்கு முரணாக இது இருக்கிறது.

1942-ம் ஆண்டு இந்து மகாசபையின் ஆதாரவாளர்களுக்கு தங்களது பணியிடங்களில் இருந்துகொண்டு வேலை செய்யுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு தடங்கல் ஏற்படுத்தும் எதையும் செய்யவேண்டாம் என்றும் சாவர்க்கர் வழிகாட்டுதல் கொடுத்தார். அச்சமயத்தில் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு லட்சக்கணக்கான இந்துக்களை சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியதன் மூலம் பிரிட்டிஷாரின் போர் தயாரிப்புகளுக்கு உதவி செய்தார்.

சுபாஷ் சந்திர போஸ் விவகாரத்தில் ஒரு சுவாரசியமான முரண்பாடு பற்றி குறிப்பிடுவது இங்கே மிகவும் அவசியமானது. சாவர்க்கர்தான் சுபாஷ் சந்திர போஸுக்கு ஒரு இராணுவத்தை உருவாக்குமாறு அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசியப் படையைக் கொண்டு பிரிட்டிஷை எதிர்த்துப் போரிடுகையில், சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் படைக்கு ஆள்சேர்த்துக் கொண்டிருந்தார்.

பகத்சிங்குடனான அவரது முரண்பாடும் சமமான அளவில் கவனிக்கத்தக்கது. சாவர்க்கரின் மன்னிப்பு மனுக்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்களோடு இணைந்து பணிபுரிவதை முன்வைத்தன. ஆனால் பகத் சிங் பிரிட்டிஷாருக்கு எழுதிய கடிதத்தில், அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதாலும், ஒரு கலகக்காரனாக, அவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்றும், சாகும்வரை தூக்கிலிடப்படக் கூடாது என்றும் எழுதினார்.

இன்று, பிரிவினைக்காக இந்து தேசியவாதிகள் முசுலீம்களையும், காந்தியையும் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கையில், இந்து மகாசபை முசுலீம் லீக்கோடு கூட்டணி வைத்து வங்காளம், சிந்து, மற்றும் வட மேற்கு முன்னணி மாகாணம் ஆகியவற்றில் அமைச்சரவையை உருவாக்கியது என்ற உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள இந்து தேசியவாதிகள் விரும்பவில்லை.

இந்து மகாசபை சிந்து மாகாணத்தில் முசுலீம் லீக்கோடு கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுத்திருந்த காலத்தில்தான், சிந்து சட்டசபை பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.

சாவர்க்கரைப் புகழ்பவர்கள், அவரது வாழ்க்கையின் முதல் பாகத்தில் – சிறையில் அடைக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் – கவனம் செலுத்துகின்றனர். பிரிட்டிஷாருக்கு எதிரான அவரது முயற்சிகள் எதுவாக இருந்தாலும், அப்போதும் அவர் அடிப்படையில் ஒரு வகுப்புவாதியாகவே இருந்தார். உதாரணத்திற்கு, 1857-ம் ஆண்டு நடைபெற்ற போரை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்துக்களும் முசுலீம்களும் இணைந்ததாகப் பார்த்தாரே அன்றி விவசாயிகளின் காலனிய எதிர்ப்புக் கலகமாகப் பார்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். சாவர்க்கரை “இந்து தேசியவாதத்தின் தந்தை” என்று குறிப்பிடுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் சாவர்க்கருக்கும் இடையில் சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளது. உதாரணத்திற்கு சாவர்க்கர் பசுவை பயன்பாடுள்ள விலங்காகப் பார்த்தாரே ஒழிய புனிதமிக்கதாகப் பார்க்கவில்லை.

படிக்க:
♦ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவரின் அனுபவம் !
♦ கொரோனா பணியில் மரித்த செவிலியர் தங்கத்திற்கு அஞ்சலி !

சாதிய பாலியல் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட இந்து புனிதநூல்களை உயர்த்திப் பிடித்த சாவர்க்கர், புத்த மதம் மற்றும் அஹிம்சையினைக் கடுமையாக விமர்சித்தார். அஹிம்சைக் கோட்பாடே இந்தியாவை பலவீனமாக்கியதாக எண்ணினார். அவரது எழுத்துக்களில் அவர் தெளிவான ஆணாதிக்கவாதியாகவே இருந்தார். அதன் காரணமாகவே கடும் பழமைவாத, வகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டார். உதாரணத்திற்கு, மராட்டிய மன்னன் சிவாஜி, அவனது படையினரால் அவனுக்குப் பரிசாகக் கொண்டு வரப்பட்ட கல்யாணின் மருமகளை திருப்பியனுப்ப முடிவெடுத்ததை சாவர்க்கர் விமர்சித்தார். அந்தப் பெண் அவமானப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அது மட்டுமே இந்து கோபத்திற்குப் பழிதீர்த்திருக்கும் என்று சாவர்க்கர் கருதினார்.

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் குற்றத்திற்காக அவர் விசாரிக்கப்பட்டதோடு, உறுதியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் படேல், இந்தக் கொலை இந்து மகாசபையின் தீவிரவாதப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்பதில் தெளிவாக இருந்தார்.

இன்னும் சாவர்க்கரை புகழ்பாடுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவரது உருவப்படம் ஏற்கெனவே நாடாளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது… ஆனால் இந்தியாவுக்கு அத்தகைய அடையாளம் தேவையா என்பதுதான் கேள்வி. இந்து தேசியவாதிகளுக்கு அவர் ஏற்கெனவே ஒரு அடையாளமாக இருக்கிறார். ஆனால் அவர் இந்திய தேசியவாதிகளுக்கு, மதச்சார்பற்ற- ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டத்தில் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத ஒருவர். இந்து தேசியவாதிகள் அவரது பிரிட்டிஷ் எதிர்ப்பு வாழ்க்கையின் குறுகிய பகுதியை ஒளிவட்டமிட்டுக் காட்டி, அவரை மேன்மைமிக்க நிலையில் வைக்கப் பார்க்கின்றனர். இதுவரை அவர் அடிப்படையான வகுப்புவாதியாகவே இருந்திருக்கிறார். மேலும் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியில், முசுலீம் லீக்குடன் கூட்டணி வைத்து பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையின் நோக்கமாகிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கான தர்க்கத்தை வழங்கினார்.


கட்டுரையாளர் : ராம் புனியானி
தமிழாக்கம் :
– நந்தன்
செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க