தெலுங்கானா: பாசிச எதிர்ப்பு அறிவுத்துறையினர் – செயல்பாட்டாளர்கள் மீது தொடரும் வேட்டை!

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

டந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள் என 152 பேர் மீது ஊஃபா வழக்கு பாய்ச்சப்பட்டுள்ள விவரம் அண்மையில் வெளிவந்துள்ளது. தங்கள் மீது ஊஃபா வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற விவரமே இந்த 152 பேருக்கும் கடந்த மாதம் வரை தெரியாது என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தி. போலீசு இத்தகவலை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

தெலுங்கானாவின் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் (People Democracy Movement – PDM) தலைவர் சந்திரமௌலி ஒரு வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தை அணுகியபோது, இதுதொடர்பான விவரம் வெளிவந்துள்ளது. ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்காக அவர் மீது பதியப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது. அதை ஆராயும்போதுதான், “மாவோயிஸ்டுகளுடன் இணைந்து அரசைக் கவிழ்க்க முயன்றதாக” குற்றஞ்சாட்டப்பட்டு 152 பேர் மீது போடப்பட்ட ஊஃபா வழக்கில் சந்திரமௌலியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

முலுகு மாவட்டத்தின் தட்வாய் போலீஸ் நிலைய வட்டார ஆய்வாளர் சங்கரால் பதிவுசெய்யப்பட்ட, 52 பக்கங்கள் கொண்ட இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பலராலும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ஹரகோபால், உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஜா ஷா, தெலுங்கானா சிவில் உரிமைக் குழுத் தலைவர் பேராசிரியர் கதாம் லக்ஷ்மன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கொடுமை என்னவெனில், களத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் பெயர்களுடன் சேர்த்து பீமா கொரேகான் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சுதா பரத்வாஜ், சிறையில் உள்ள அருண் ஃபெரைரா மற்றும் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோரின் பெயர்களும், இவ்வழக்கு பதிவுசெய்யப்படுவதற்கு முன்பே இறந்துவிட்ட முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் அமருலா பாண்டுமித்ரா சங்கத்தின் (ABMS) உறுப்பினர் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

கட்டுக்கதையை நிராகரித்த ஜனநாயக சக்திகள்!

ஆகஸ்ட் 19, 2022 அன்று மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகம் ஒன்றில், இந்த 152 செயல்பாட்டாளர்களின் பெயர்பட்டியல் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்கள் அனைவரும், “அரசு சொத்துக்களை அழிக்கவும், பழங்குடியின இளைஞர்களை மாவோயிஸ்டு அமைப்புக்கு வென்றெடுக்கவும், அவ்வமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டவும் திட்டமிட்டனர்” என்று தங்களது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது தெலுங்கானா போலீசு.

ஆனால், தெலுங்கானாவில் உள்ள ஜனநாயக சக்திகள் யாரும் இந்த கதைகளை நம்பத் தயாராக இல்லை. இது செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை உணர்ந்து அதற்கெதிராக கடும் கண்டங்களை எழுப்பியுள்ளனர். பல்வேறு ஜனநாயக இயக்கங்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. குறிப்பாக இறந்துபோன முன்னாள் நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ் மற்றும் கடமஞ்சி நரசமா உள்ளிட்டோரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, போலீசின் சதி நோக்கத்தை அம்பலப்படுத்தினர்.


படிக்க: ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!


இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரா.ஹரகோபால், “இந்தப் பெயர்களை யார் எழுதுகிறார்கள் என்பது முழு சமூகத்திற்கும் தெரியும். மாவோயிஸ்டுகளுக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை. போலீசுதான் அவர்கள் விரும்பும் பெயர்களை எல்லாம் இணைத்துள்ளது” என்றார்.

பல்வேறு சிவில் அமைப்புகள், தனிநபர்களின் குடை அமைப்பாகச் செயல்படும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு (NAPM) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது தெளிவாக உள்ளது; குற்றமாக்கப்படுவது வெறும் நடவடிக்கைகள் அல்ல, அரசாங்கத்தை எதிர்க்கும் எந்தவொரு நம்பிக்கையும் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.

மீசையில் மண்ணில்லை: தெலுங்கானா போலீசு!

இந்தாண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜனநாயக சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் தமது பக்கம் திரும்புவதை சந்திரசேகர் ராவ் அரசு விரும்பவில்லை; எனவே பேரா.ஹரகோபால் உள்ளிட்ட 151 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் போலீசுத்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, “பேரா.ஹரகோபால், பேரா.பத்மஜா ஷா, வி.ரகுநாத், கதாம் லக்ஷ்மன், குந்தி ரவீந்தர் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரை இந்த வழக்கில் தொடர்புப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை என இதுவரை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே ஆறு பேரின் பெயர்களையும் நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒரு குறிப்பாணை தாக்கல் செய்யப்படும்” என முலுகு போலீஸ்துறை கண்காணிப்பாளர் கவுஷ் ஆலம் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட இறந்த இரண்டு நபர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்தது குறித்து, தங்களுக்கு இப்போதுதான் தெரியும் என்றும், அந்த பெயர்களும் வழக்கிலிருந்து நீக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பீமா கொரேகான் வழக்கில் சிறையிலுள்ள சுரேந்திர காட்லிங் மற்றும் அருண் ஃபெரைரா உட்பட மீதமுள்ள 146 ஆர்வலர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றால், அவர்களின் பெயர்களும் வழக்கிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டு ஒரு பொய்வழக்கைத் தொடுத்து மாட்டிக்கொண்டபின், மீசையில் மண் ஒட்டாமல் பின்வாங்க நினைக்கிறது தெலுங்கானா போலீசு. “அனைவரும் ஒரே வழக்கில் உள்ளனர். ஒருவருக்கு எதிரான வழக்கு நீக்கப்படுகிறதென்றால், அந்த வழக்கில் தவறு அல்லது ஏதேனும் குறைபாடு நடந்துள்ளது என்பதை அரசு உணர்ந்துள்ளது. இது அனைவருக்கும் பொருந்தும். எனவே, இந்த வழக்கை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் பேரா.ஹரகோபால்.

ஊஃபா பாய்ச்சப்பட்ட இவர்கள் யார்?

ஊஃபா பாய்ச்சப்பட்ட இந்த 152 செயல்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் மாநில அளவிலோ, நாடு தழுவிய அளவிலோ காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக இயக்கங்கள் வைத்து நடத்துபவர்கள் அல்லது அந்த இயக்கங்களில் செயல்படுபவர்கள்; இயக்கமாகச் செயல்படவில்லையெனினும் தனிப்பட்ட ரீதியில் பாசிஸ்டுகளுக்கு எதிராக குரலெழுப்பி வருபவர்கள்.

முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹோஸ்பெட் சுரேஷ், மோடி பிரதமராவதற்கு முன்பிருந்தே, 2002 குஜராத் கலவரத்தின் முக்கிய குற்றவாளி மோடி என்று பேசிவந்தவர். கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும், பீமா கொரேகான் பொய்வழக்கிற்கு எதிராகவும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தவர். பீமா கொரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், அருண் ஃபெரைரா மற்றும் சுரேந்திர காட்லிங் உள்ளிட்டோர் இயங்கிவந்த இந்திய மக்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவர்.

பேரா.ஹரகோபாலும் பீமா கொரேகான் வழக்குக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அது தொடர்பாக பிற ஆசிரியர்களுடன் இணைந்து கூட்டம் நடத்தியதற்காக 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பத்மஜா ஷா, தி வயர், நியூஸ் மினிட், மின்ட், தி ஹூட் போன்ற வலைத்தளங்களில் மோடி அரசை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிவருபவர்.

இவையன்றி கிட்டத்தட்ட 22 மாநிலங்களில் செயல்பட்டுவரும் “கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம்” (AIFRTE) என்ற அமைப்பின் பொருளாளர் எம்.கங்காதர், உறுப்பினர் கே.ரவி சந்தர் ஆகியோரின் பெயர்களும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது. “தெலுங்கானா ஜனநாயக ஆசிரியர் முன்னணியை”ச் (DTF) சேர்ந்த ஆறு தலைவர்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கல்வி காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை 2020-க்கு எதிராகவும் களமாடியவர்கள்.

பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள் இயங்கிய அமைப்புகளில் செயல்பட்டுவந்த பலர் தெலுங்கானா அரசு பதிந்துள்ள இந்த ஊஃபா வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாசிசக் கும்பலின் கையாளாக சந்திரசேகர் ராவ்!

இத்தகைய செயல்பாட்டாளர்களை ஒடுக்கவேண்டியத் தேவை யாருக்கு உள்ளது என்பதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மக்கள் உரிமைக்காக போராடும் இச்செயல்பாட்டாளர்கள் மீது தாங்கள் விரும்பும் தருணத்தில், அடக்குமுறையை ஏவுவதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலால் முன்பே தயாரித்து வைக்கப்பட்ட முகாந்திரம்தான் இந்த ஊஃபா வழக்கு.

2018-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா போலீசாரால் பதிவுசெய்யப்பட்ட பீமா கொரேகான் வழக்கு முதலில் என்.ஐ.ஏ-வால் விசாரிக்கப்பட்டதல்ல; அது மகாராஷ்டிரா போலீசால் போடப்பட்ட வழக்கு. மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்துகொண்டு மோடி அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது.


படிக்க: சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !


தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ‘இடைஞ்சலான பேர்வழிகள்’ என்று ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் கருதும் செயல்பாட்டாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக மேற்கொண்ட இந்நடவடிக்கையை, 2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செய்ததன் மூலம் ‘பயங்கரவாதிகளுக்கு அச்சுறுத்தலான நபர் மோடி’ என்ற நாயக பிம்பத்தை உருவாக்குவதே அன்றைய நோக்கமாக இருந்தது. இப்போது அதே பாணியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்பாட்டாளர் மீது அடக்குமுறையை ஏவும் நோக்கோடு பாசிசக் கும்பலால் இந்த ஊஃபா வழக்கு பதியப்பட்டிருக்கலாம். பீமாகொரேகான் வழக்கைப் போன்ற இவ்வழக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளை வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் சதித்திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இப்பாசிச நோக்கத்திற்கு குடுமியைப் பிடித்துக் கொடுக்கும் வேலையைத்தான் தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவ் அரசு மேற்கொண்டுள்ளது.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பி.ஆர்.எஸ். கட்சியின்மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தீவிமடைவதை நாம் கவனிக்கலாம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் மூலம் சந்திரசேகர் ராவ் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்து டீல் பேச முயற்சித்த தகவல் வெளியே கசியவந்து நாறிப்போனது.

“நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே தனது இலக்கு” என்று அறிவித்துக் கொண்ட சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டத்தை புறக்கணித்தும், பா.ஜ.க.விற்கு எதிரான பேச்சுக்களை குறைத்துக்கொண்டு அடக்கிவாசிப்பதும், அவர் பாசிசக் கும்பலின் பீ டீமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் என்பதை அறிவிக்கின்றன.


துலிபா
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க